மக்களை வழி நடத்துவது கட்சியா? மக்களுக்கு பின்னால் செல்வது கட்சியா?..!!

‘தான் இறந்த பிறகு தன்னுடைய கண்ணை ஒரு தமிழன் ஒருவனுக்கே கொடுக்க வேண்டும் ஏனெனில் அந்தக் கண் தமிழீழத்தை பார்க்கவேண்டும்,ஒரு போராளி இறந்துவிட்டால் அவன் இலட்சியம் இறந்துவிடும் என்று நினைத்து விடக் கூடாது’ என்று அன்றைய ரெலோ இயக்கத்தின் தலைவர் குட்டிமணி நீதிமன்றத்தில் வீரமாகவும் விவேகத்துடனும் விடுதலை வேட்கையுடனும் துணிகரமாக தனது கருத்தை நீதி மன்றத்தில் பதிவு செய்திருந்தார்.அதற்காகவே கறுப்பு ஜீலை நேரத்தில் வெலிக்கடை சிறைப்படுகொலையின் போது அவர் படுகொலை செய்யப்பட்டு அவரது கண்கள் பிடுங்கி எறியப்பட்டன.
அந்த வழியில் வந்தவர்கள் மக்களை வழி நடத்த வேண்டியவர்கள் தமது தலைவரின் இலட்சியத்தை பின்பற்றவேண்டியவர்கள் இன்று மக்கள் முடிவு செய்த பின்பே ஜனாதிபதி தேர்தல் பற்றி முடிவெடுப்போம் என்று கூறுவது அந்த தலைவர்களையும் அவர்களது இலட்சியங்களையும் கொச்சைப்படுத்துவதாகவே அமையும் தமிழீழப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த வேளையில் சாவகச்சேரி தொடரூந்துக்கு கன்னி வெடிவைத்து பல இராணுவத்தினரை மரணமடைய செய்வதற்கு காரணமாக இருந்த ஓர் அமைப்பு அந்த ஒரு நிகழ்வை மட்டுமே பிரச்சாரப்படுத்தி கொண்டிருந்த அமைப்பு இன்று தமிழரசுக் கட்சியின் சொல்லே தாரக மந்திரம் என்று செயற்படுவதும் மிதவாதத்தின் பெயரால் தனது கையாலகத்தனங்களை மூடி மறைத்து தத்தமது சுயநல அரசியலை முன்னெடுத்து செல்லும் தமிழரசுக் கட்சியின் நிலைக்கு ரெலோ வந்துவிட்டதே என நினைக்கும் போது அவர்களுக்கு பின்னால் அணிதிரண்டிருந்த மற்றும் அந்த இயக்கத்தில் சேர்ந்து விடுதலைக்காக வீரமரணம் எய்திய நூற்றுக்கணக்கான ரெலோ இளைஞர்களையும் அவர்களது தியாகங்களையும் நினைக்கும் போது நெஞ்சம் பதைபதைக்கின்றது. ஆளுமையற்றவர்களிடம் தலைமை சென்றுவிட்டதோ என்று எண்ண தோன்றுகின்றது.
அரசியல் கட்சி அல்லது ஒரு மக்கள் அமைப்பு என்பது மக்களுக்கு தலைமை தாங்கி மக்களின் கருத்துக்களை அறிந்து மக்களை வழிநடத்தி செல்வதாகும். மக்களின் பின்னால் கட்சி செல்வதானால் அதற்கு ஒரு கட்சியோ அல்லது அதற்கு ஒரு தலைமையோ தேவைப்படாது. இந்த நிலையில் ரெலோவின் தலைவரும் ஏனைய உயர்மட்டத் தலைவர்களும் பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் முன்னக்கு பின் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள், அரசியல் கைதிகளுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்,அரசாங்கத்துடன் இணைந்தால்தான் அபிவிருத்தி செய்யமுடியும், பிரதம மந்திரி எங்களை விட முஸ்லீம் அரசியல் தலைவர்களிடம் தான் விஸ்வாசமாக இருந்து கொண்டு எம்மை ஏமாற்றுக்கின்றார்.
இந்த அரசாங்கத்தை நாங்கள் நினைத்தால் கவிழ்க்க முடியும் என்றும் தமிழரசுக் கட்சி கொள்கை தவறி செல்கின்றது என்று முரன்பட்ட பல கருத்துக்கள் பலவற்றை கூறிவிட்டு பின்பு அரசு தமிழ் மக்களுக்கெதிராக எடுக்கும் அனைத்து நடவடிக்கைளுக்கும் ரெலோ ஆதரவளிக்கின்றது. ரெலோவின் மகாநாட்டு தீர்மானத்தின் படி 2018 டிசம்பர்31க்குள் அரசாங்கம் எமது மக்களுக்கொரு ஒரு அரசியல் தீர்வை தர மறுத்தால் அரசுக்கான ஆதரவை விலக்கி கொள்வோம் என்று முன்னுக்கு பின் முரண்பட்டவகையில் சென்று கொண்டிருக்கும் இவ் ரெலோ இயக்கம் குட்டிமணி தங்கத்துரை சிறி சபாரத்தினம் உட்பட ரெலோவில் உயிர் நீத்த அனைத்து வீரம் செறிந்த போராளிகள் இருந்த இயக்கமா? இன்றைய ரெலோ இயக்கம் என சந்தேகத்தை எழுப்புகின்றது.