வவுனியாவில் தொடரும் வரட்சி: 177 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை பாதிப்பு..!!(படங்கள்)

வவுனியாவில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், 177 ஏக்கர் சிறுபோக நெற் செய்கையும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வரட்சி காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவில் 12 ஏக்கர் நெற்செய்கையும், நெளுக்குளம் கிராம அலுவலர் பிரிவில் 18 ஏக்கர் நெற்செய்கையும் பாதிப்படைந்துள்ளது.
வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவின் மாமடு கிராம அலுவலர் பிரிவில் 100 ஏக்கர் நெற் செய்கையும், கல்மடு பிரிவில் 15 ஏக்கரும், மகாகச்ச கொடி கிராம அலுவலர் பிரிவில் 10 ஏக்கரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குருக்கள் புதுக்குளம் கிராம அலுவலர் பிரிவில் 22 ஏக்கருமாக 177 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை பாதிப்படைந்துள்ளது.
இது தவிர, வவுனியா வடக்கு, மருதோடை கிராம அலுவலர் பிரிவில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான குடிநீர் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, குளத்து நீர் வற்றிய நிலையில் கால்நடைகளும் நீர்இன்றி அவதிக்குள்ளாகியுள்ளன. ஆச்சிபுரம், தட்டான்குளம், மருதோடை, ஆசிகுளம், கற்குளம் போன்ற பகுதிகளில் குடி நீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா