ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய இருக்கிறார். சாமானியர்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களிடம் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களவை
மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் இருந்தது. 2019-20 நிதி ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் 6.8 சதவீதத்தைவிட அதிகம். 2019ஆம் நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 5.8 சதவீதமாக இருந்தது. இதுவே 2018ஆம் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 6.4 சதவீதமாக இருந்தது. வரும் நிதியாண்டில் அதைவிடக் குறைவான பற்றாக்குறையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி முதல் மார்ச் வரை ஏற்பட்ட சரிவு பொதுத் தேர்தல் நடைபெற இருந்த காலம் என்பதால் ஏற்பட்டது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியும் 2019 நிதி ஆண்டில் பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணம். தற்போது முதலீடுகளில் நேர்மறையான அறிகுறிகள் தெரிவது இப்படியே நீடிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.
2025ஆம் நிதி ஆண்டுக்குள் இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற, ஆண்டுக்கு 8 சதவீதம் வளர்ச்சியை அடைய வேண்டும்.
2020 நிதி ஆண்டில் எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்ப்பதால் அதன் நுகர்வு அதிகரிக்கக்கூடும். அந்நிய நேரடி முதலீடு குறித்த அரசின் கொள்கைகள் மேலும் தளர்வடையக்கூடும்.
கிராமப்புறங்களில் உள்ளவர்களின் வருவாய் 2018ஆம் ஆண்டு மத்தியிலிருந்து உயரத் தொடங்கியுள்ளது. மெதுவான வளர்ச்சி, ஜிஎஸ்டி வசூல் மற்றும் விவசாயத் திட்டங்கள் ஆகியவற்றில் அரசு சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.