;
Athirady Tamil News

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினால் பொதுமக்கள் பாதிப்பு..!!

0

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வேகமான கடல் அரிப்பின் காரணமாக பல கிராமங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல கரையோரக் கிராமங்களின் இருப்புக்கள் கேள்விக்குறியாகியுள்ளது.அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பாணமை வரையிலான 95 கிலோமீற்றருக்குட்பட்ட கடலோர கரையோரப் பிரதேசங்கள் கடல் அரிப்பினால் கடல் விழுங்கும் கிராமங்களாக மாறியுள்ளது.

கடந்த 2004இல் ஏற்பட்ட கடற்கோள் அனர்த்தத்தின் பின்னர் இங்குள்ள கடலோரப் பிரதேசங்கள் பாரிய கடலரிப்பிற்குள்ளாகி வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில் பெரியநீலாவணை, கல்முனை, நிந்தவூர், ஒலுவில், திருக்கோவில், பொத்துவில் உல்லை ஆகிய பிரதேசங்கள் கடல் அரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள மீனவர்களது மீன்வாடிகள், மீனவக் கட்டிடங்கள், மீனவர் குடியிருப்பு மனைகள் ஆகியன கடல் அரிப்பினால் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.கடல் ஓரங்களில் வள்ளங்களைக் கூட நிறுத்தி வைக்க முடியாத நிலைக்கு படகுகளை, மீன்பிடி உபகரணங்களை வீதியின் ஓரத்திலே நிறுத்தி வைக்க வேண்டிய அவலநிலை மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

காலங்காலமாக மீன்பிடித் தொழில் செய்து குடும்ப சீவியத்தை நடத்தி வந்த மீனவக் குடும்பங்கள் கடல் அரிப்பின் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குச் சென்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 4500இற்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசிக்கின்றனர்.வேகமான கடல் அரிப்பினால் பயனுள்ள தென்னைமரங்கள் அனைத்தும் கடலுக்கு இரையாகி வருகின்றன.

இதனால், அம்பாறை மாவட்டத்தில் தெங்குச் செய்கையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இவை தவிர கரையோரக் கிராமங்களில் உள்ள மக்கள் இறந்தவர்களது உடல்களை புதைக்கும் சவக்காலை பகுதியினை ஊருக்கு ஒதுக்குப்புறமான கடலோரம் அண்டிய பகுதிகளிலே அக்காலத்தில் அமைத்திருந்தனர்.இன்று கடலரிப்பினால் இறந்தவர்களைப் புதைக்கும் சவக்காலைகள், நினைவு கட்டிடங்கள் என்பனவும் கடலினால் காவு கொள்ளப்பட்டுள்ளன.

2004இல் ஏற்பட்ட கடற்கோளினால் ஊருக்குள் இருந்த கட்டிட இடிபாடுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதால் அவை கடலுக்குள் புதைந்து கிடக்கின்றன.இதனால், மீனவர்களது வலைகள் இடிபாடுகளில் சிக்கி சேதங்களுக்கும் உள்ளாகி வருகின்றன.அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்பே வேகமாக கடல் அரிப்பு இடம்பெறுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இம்மாவட்டத்தில் ஏற்படும் கடல் அரிப்பினால் கடற்கரையோரங்களிலுள்ள கிராமங்கள் பல தமது நிலப்பகுதியை இழந்து வருகின்றன.குறிப்பாக, திருக்கோவில் பிரதேசத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் எதிர்காலத்தில் கடலினால் காவு கொள்ளப்படும் அபாயம் நிலவுவதாகவும் கடல் அரிப்பினை கட்டுப்படுத்த அரசாங்கமும், அதிகாரிகளும் விரைந்து ஆக்கபூர்வமான செயற்திட்டத்தில் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பில் திருக்கோவில் மீனவ சங்கத் தலைவர் தயாநேசன் தெரிவிக்கையில்,கடல நம்பித் தான் எங்கட சீவியம் போகுது எங்களுக்கு வாழ்வுதாற கடலே எங்கல அழிக்குது சுனாமியில் பாதிக்கப்பட்டிருந்தோம். இப்ப கடலரிப்பு எங்கட வாழ்க்கையை பாழாக்கின்றது. 500பேர் இந்தக் கடலில் தான் மீன் பிடித்து வாழுறம் இந்த இடத்தவிட்டுட்டு வேற இடத்துக்கும்போக ஏலாது.

இந்தக் கடலரிப்பு தடுக்கிறத்துக்கு நடவடிக்கை எடுங்கள் என்றார்.இந்நிலை தொடர்பில் பொதுமக்கள் கருத்து கூறுகையில்,சென்ற கிழமை கூட ஒரு சவம் வந்து கிடந்தது. நாங்க தான் இழுத்துப் புதைத்தோம். இந்தக் கடலரிப்பால் எங்கள் சவக்காலையும் கடலுக்குள்ள போய்ச்சி, இப்ப கொஞ்ச இடம்தான் இருக்குது. இதனால் கடலில் எலும்புகளும் மிதக்கிறது. சுற்றுப்புறச் சூழலும் பழுதாகப் போகிறது என்றார்.

திருக்கோவில் மயானத்தில் இறந்தவர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள கல்லறைகள் கடலுக்குள் புதையுண்டுள்ளன. மிகுதியாகவுள்ள கல்லறைகளும் மயானமும் கடலரிப்பினால் காணாமல் போய்வருகின்றது.கடலில் சடலங்களின் உக்கிய எலும்புகளின் எச்சங்களும் மிதப்பதினால் பல்வேறு தொற்றுநோய்களுக்கும் இம்மக்கள் ஆளாகி வருகின்றனர்.

இதனை உடனடியாக தடுத்து நிறுத்த கடலரிப்பிற்கு தடுப்பு சுவர்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.திருக்கோவில் மக்களின் வாழ்விடத்தை மெல்லக் கொல்லும் பாரிய கடலரிப்பை தடுக்க இக்கிராமத்தைச் சேர்ந்த மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் திருக்கோவில் மண்ணின் பெருமையை உலகிற்கு பாறைசாற்றிக் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தை கடலுக்கு இரைகொடுக்க வேண்டி ஏற்படும் கடலரிப்பால் பாரிய அசம்பாவிதங்கள் நடக்க முன் திருக்கோவிலை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*