கும்பகோணத்தில் வீட்டில் தூங்கிய தொழிலாளி கழுத்தறுத்து படுகொலை..!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெங்கர் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் முத்துக்குமார் (வயது 40), தச்சு தொழிலாளி.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு முத்துக்குமார் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டின் மொட்டை மாடியில் இரவில் தூங்கினார்.
இன்று காலை முத்துக்குமார் தூங்கிய நிலையிலேயே கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கும்பகோணம் மேற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், இன்ஸ் பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்துக்குமாரை இன்று அதிகாலை மர்ம கும்பல் கழுத்தறுத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். முத்துக்குமாரை கொலை செய்தவர்கள் யார்? முன்விரோதத்தில் கொலை நடந்ததா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
முத்துக்குமார் கொலை குறித்து துப்பு துலக்க மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொலையுண்ட முத்துக்குமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவன்- மனைவி இடையே கடந்தாண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை வந்தது. இதனால் முத்துக்குமாரை விட்டு பிரிந்து அவரது மனைவி திருச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து கொண்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் தான் வீட்டில் படுத்திருந்த முத்துக்குமாரை மர்ம கும்பல் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து கொலையாளிகள் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.