;
Athirady Tamil News

அரசியல் கைதி சிறைச்சாலையில் உண்ணாவிரதம்!!

0

முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபன அதிகாரியாகிய அரசியல் கைதி புதிய மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம்

இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளராகப் பணியாற்றிய அரசியல் கைதி ஒருவர் 15 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கனகசபை தேவதாசன் என்ற 62 வயதுடைய அரசியல் கைதியே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவருக்கு எதிராக .இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றைய வழக்கில் 20 வருட கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு வழக்குகளிலும் தனக்குத் தானே வாதாடியிருந்த தேவதாசன் தீர்ப்புக்களின் பின்னர், தனக்குரிய சாட்சிகளைத் தயார் செய்து முறைப்படி நீpதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி இரண்டு வழக்குகளுக்கும் எதிராக இவர் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக உரிய சட்ட ஆலோசனையைப் பெறுவதற்காக நீதி அமைச்சின் அதிகாரம் வாய்ந்த அதிகாரி ஒருவரைச் சந்திப்பதற்கான அனுமதி கோரி கடிதங்கள் எழுதியிருந்த போதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் ஆரம்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் கைதிகளின் கடிதங்களை அனுப்புவது சிறைச்சாலை அதிகாரிகளின் வேலையல்ல எனக் கூறியுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படியும், மேன் முறையீட்டு வழக்கில் பார்த்துக் கொள்ளும்படியும் உண்ணாவிரதம் இருக்கின்ற தேவதாசனை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அது தனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்து, அவர் தனது போராட்டத்தைக் கைவிடவில்லை.

ஆயினும் அதற்கு இணங்காமல் போராட்டத்தைத் தொடர்ந்தால், அவரை, கைதிகளைத் தண்டிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள சிறைக்கூட்டில் அடைக்கப் போவதாகக் கூறி, அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பில் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ் அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 2 =

*