;
Athirady Tamil News

மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு அரசியல் வாக்குறுதியே – டக்ளஸ் எம்.பி!!

0

மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே – டக்ளஸ் எம்.பி!

மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தற்போதுள்ள அரசின் ஆயுட்காலம் ஆகக்கூடுதலாக ஆறு மாதம் அல்லது ஒரு வருடமே இருக்கின்றது. அதன் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்குப் பின்னர் வருகின்ற ஜனாதிபதியும் ஆட்சியாளர்களுமே அரசியல் தீர்வு குறித்து தீர்மானிக்க முடியும்.

தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வை காணவேண்டுமானால் எந்த அரசின் ஆட்சியானாலும் அதனூடாக ஆறு முதல் ஒரு வருடத்திற்குள் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலைப்பாடே சரியானதாகும்.

தென்னிலங்கை அரசுகளுடன் நல்லிணக்க உறவுமுறையை வளர்ப்பதனூடாகவே இதைச் சாதிக்கமுடியும். இதை நாம் கடந்த காலங்களிலும் செய்து காட்டியுள்ளோம். ஆனால் இன்று சாதாரண பிரச்சினையாக இருக்கும் முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பிரச்சினையைக் கூட தற்போது பலத்துடன் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தீர்வு கண்டு கொடுக்க முடியாதிருக்கின்றது. இதற்குக் காரணம் அவர்களது தரகு அரசியலும் அதற்கான சன்மானங்களுமாகவே காணப்படுகின்றது.

தொழில் வாய்ப்புகளைக் கூட நாம் எமது தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கே கடந்த காலங்களில் பெற்றுக் கொடுத்திருந்தோம். அது மாத்திரமன்றி எமது இளைஞர் யுவதிகளுக்காக பல தொழில் வாய்ப்புகளையும் அவர்களின் கல்வித் தரத்திற்கேற்ப உருவாக்கிக் கொடுத்திருந்தோம். ஆனால் இன்று அவ்வாறானதொரு நிலையை உருவாக்கிக் கொடுக்க தரகு அரசியல் செய்பவர்கள் சுயநலன்களுக்காகத் தடுத்துவருகின்றனர். இவ்வாறே யாழ். பல்கலைக் கழக தொழிற்துறை வெற்றிடங்களும் எமது இளைஞர் யுவதிகளுக்கு இல்லாமல் போக காரணமாகியது.

ஆயுதம் என்பது அதை கையாள்பவர்களைப் பொறுத்தே பிரதிபலிப்பைக் காட்டும். நாம் முன்னெடுக்கும் போராட்டமும் வைத்தியரின் கையிலுள்ள கத்தியைப் போன்றே அமைந்திருந்தது. ஜி.ஜி.பொன்னம்பலத்தை தமிழரின் தேசிய தலைவர் என்றவர்கள் இன்று அரசியல் இலாபங்களுக்காக இன்னொரு தலைமையைக் கூறி இளைஞர் யுவதிகளைத் தூண்டிவிட்டு கொள்கை அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். அதே நேரம் அகில இலங்கை தமிழ் காங்கிரஷின் அரசியல் யாப்பில் சமஸ்ரி என்பது நாட்டுக்ககு மட்டுமல்ல தமிழருக்கும் உதவாது என கூறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இன்று அதற்கு புறம்பாக ஏமாற்று அரசியலை மேற்கொள்கின்றனர்.

நாம் தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி அன்றாடப் பிரச்சினைக்கு தீர்வு, அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்ற மூன்று “அ” களை முன்வைத்து எமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றோம். ஆனால் அதனை மேலும் வலுவானதாக கொண்டு செல்ல எமக்கான அரசியல் அதிகாரத்தை மக்கள் முழுமையாக வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தால் குறுகிய காலத்தில் தீர்வைக் கண்டுதர எம்மால் முடியும்.

மிதவாத அரசியல் தலைமையின் இயலாமைக்கு இனியும் இடம் கொடுக்க முடியாதென மக்கள் தெளிவடைந்துவிட்டனர்.

அந்தவகையில் தமிழ் மக்களை மீட்டு சரியான அரசியல் வழியில் பயணிக்க அனைவரும் ஓரணியாக இருந்து செயற்பட வேண்டுமென்பதே இன்றுள்ள தேவையாகும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 16 =

*