;
Athirady Tamil News

அயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள் கண்டனம்..!!

0

மெக்சிகோ, சிரியா, துருக்கி, நைஜீரியா, சோமாலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய வரும் மக்களை நாட்டுக்குள் நுழைய விடாமல் கடுமையான குடியுரிமை தொடர்பாக சட்டத்திட்டங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய 4 எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் சமீபத்தில் மிகக் கடுமையான விமர்சனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான (ஜனநாயக) மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த மின்னெசோட்டா மாநிலத்தின் பெண் எம்.பி. ஈஹான் ஓமர், நியூயார்க்கை சேர்ந்த பெண் எம்.பி. அலெக்சாண்டிரியா ஓகசியோ-கோர்ட்டெஸ், மாஸ்ஸாசூசெட்ஸ் பெண் எம்.பி. அயான்னா பிரெஸ்லி, மிச்சிகன் பெண் எம்.பி. ரஷிதா டிலாய்ப் ஆகியோர் மீது டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் எகிறிப் பாய்ந்திருந்தார்.

’இவர்கள் நால்வரும் இப்போதே உடனடியாக அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும். குற்றங்கள் என்னும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பிளவுப்பட்டு கிடக்கும் தங்களது தாய்நாடுகளுக்கு அவர்கள் சென்றுவிட வேண்டும்’ என டுவிட்டரில் டிரம்ப் தெரிவித்த கருத்து அமெரிக்காவில் வாழ்ந்துவரும் கருப்பின மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் அனைவருமே முறையாக அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள். இவர்களில் மூன்றுபேர் அமெரிக்காவில் பிறந்து, படித்து, வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக நேற்று வெள்ளை மாளிகையில் கருத்து தெரிவித்த டிரம்ப், ’எனது முடிவை அதிகமான மக்கள் ஆதரிக்கின்றனர், விரும்புகின்றனர்’ என மீண்டும் வலியுறுத்தினார்.

2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் நிறவெறியை தூண்டிவிட்டு தேர்தல் ஆதாயம் அடைவதற்கு டிரம்ப் கையாளும் அரசியல் தந்திரம் இது என பலர் கருதுகின்றனர்.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு வந்து குடியுரிமை பெற்றவர்கள், மாற்றுக் கருத்து கொண்டவர்கள் மீது வெறுப்பை உமிழும் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நிறவெறி தொடர்பான இந்த கருத்துக்காக டிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

’நிற வேறுபாட்டை காரணமாக வைத்து மக்களிடையே அச்சத்தையும் வெறுப்புணர்வையும் அதிகரிக்க வைத்து, அமெரிக்காவை மீண்டும் ’வெள்ளைமயம்’ ஆக்குவதற்கு முயற்சிக்கும் டிரம்ப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்படும்’ என பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை சபாநாயகர் நான்சி பெலோசி குறிப்பிட்டார்.

2012-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முயன்ற உட்டாஹ் மாநிலத்தை சேர்ந்த ஆளும்கட்சி எம்.பி. மிட் ரோம்னி-யும் இவ்விவகாரம் தொடர்பாக டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

’அவரது கருத்து அழிவுக்கான பாதை, அர்த்தமற்றது, ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. இதனால் டிரம்ப் வெறும் பின்னடைவை மட்டும் சந்திக்கப் போவதில்லை. ஆழமான குழிக்குள் அவர் புதையுண்டு விட்டார் என மிட் ரோம்னி கூறினார்.

உங்களுக்கு (டிரம்ப்) அமெரிக்காவில் இருப்பது மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், நீங்கள் நடையை கட்டலாம். இப்போதே அமெரிக்காவில் இருந்து நீங்கள் வெளியேறி விடலாம்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப்பை ஒருகை பார்க்காமல் விட மாட்டோம் என நிறவெறி சார்ந்து அவரால் விமர்சிக்கப்பட்ட 4 பெண் எம்.பி.க்களும் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 20 =

*