;
Athirady Tamil News

சுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்!!

0

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூட்டமைப்புக்கு ஆலோசனை சொன்ன சுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன் எம்.பி

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூறிய சுரேஸ் பிறேமச்சந்திரன் அதனை தனது கட்சி எம்.பி சிவசக்தி ஆனந்தனுக்கு கூற மறந்து விட்டார் என பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஓருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இன்று பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த 3 வருடங்களாக இப்போது விமர்ச்சிக்கின்ற இதே கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது கம்பரலிய மூலம் செய்யத் தொடங்கியதும் இது ஒரு லஞ்சம் எனக் கூறுகிறார்கள். ஆனால் இது ஒரு லஞ்சமோ எனனவோ எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. இதை நிச்சயமாக மக்கள் வரவேற்கிறார்கள்.

30 வருட யுத்தத்தில் பாதிப்படைந்த தமது பகுதிகள் கொஞ்சமாவது அபிவிருத்தி அடைய வேண்டும் என மக்கள் இதனை வரவேற்கிறார்கள். சில இடங்களில் 50, 60 வருடங்களாக செப்பனிடப்படாத வீதிகள் எல்லாம் இதன் மூலம் செப்பனிடப்படுகின்றது. இதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் செல்வாக்கு ஏற்பட்டுவிடும் என கருதுகிறார்கள். இதனால் இதில் குறை கூறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை அரசியல் செல்வாக்கை தருகிறா, இல்லையா என கவலையில்லை. அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய முடியுமென்றால் செய்ய வேண்டும். இதை புளொட் என்ற ரீதியில் தொடர்ந்தும் இதை தான் செய்து வந்திருக்கின்றோம்.

பாராளுமன்றத்தில் இருந்த போதும், இல்லாத போதும் நாம் செய்துவருகின்றோம். இதுதவிர, நாங்கள் மாத்திரமில்லை. சிவசக்தி ஆனந்தன் எம்.பி அவர்களை எடுத்துக் கொண்டால் அவருக்கும் அரசாங்கத்தால் 50 மில்லியன் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் சேமமடுவில் ஒரு வீதி திருத்துகிறார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் சொன்னார். ஆனால் அவர் ஒரு பிழை விட்டார். அதனை தன்னுடைய கட்சிகாரனுக்கு சொல்லவில்லை. இதனால் சிவசக்தி ஆனந்தன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதான் உண்மை. இதையெல்லாம் ஒரு அரசியல் ரீதியான கருத்தாகவே நான் பார்கிறேன்.

சமஸ்டி கேட்ட எங்களுக்கு சமுர்த்தி மக்களுக்கு கிடைக்கின்றதென்றால் அதை வேண்டாம் என்று விட முடியாது. அதையும் பெற வேண்டும். சமஸ்டியையும் கேட்க வேண்டும். இதான் என்னைப் பொறுத்தவரை எமது கட்சியைப் பொறுத்தவரை அடிப்படைக் கொள்கை எனத் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*