;
Athirady Tamil News

மணல் அகழ்வு குறித்து சி.வி.விக்னேஸ்வரன் நேரில் ஆராய்வு!! (படங்கள்)

0

வாகரை பகுதி மக்களின் இருப்பிற்கே உலைவைக்கும் மணல் அகழ்வு குறித்து சி.வி.விக்னேஸ்வரன் நேரில் ஆராய்வு!

வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கட்டுமுறிவு முதல் வெருகல் வரையான கடற்கரைப்பகுதியில் உள்ள இல்மனைற் கனிம வளம் நிறைந்த மணலை சட்டவிரோதமாக அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததையடுத்து அப்பகுதி மக்கள் தமது இருப்பினை உறுதி செய்வதற்கும் தமது வளத்தினை பாதுகாப்பதற்குமாக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அப்பிரதேச மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் குறித்த பகுதிக்கு நேரில் சென்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பார்வையிட்டுள்ளார்.

கட்டுமுறிவு முதல் வெருகல் வரையான கடற்கரை பகுதியில் ஒரு நாளைக்கு 600 தொன் (150 பார ஊர்தி அளவு) மணல் வீதம் 30 வருடங்களுக்கு அகழ்ந்தெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக காட்டப்படும் ஆவணங்கள் சட்டரீதியாக பெறப்பட்டிருக்க வில்லை என்பதுடன் குறித்த பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தவோ கருத்தறியவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை எனவும் மக்களது ஒப்புதல் பெறப்பட்டதாக இணைக்கப்படிருக்கும் கையொப்ப பட்டியல் கூட போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை நிரூபிக்கும் வகையில் குறித்த கையொப்ப பட்டியலில் இருப்பது தமது கையொப்பம் இல்லை என பலர் சத்தியக்கடதாசி மூலம் தந்துள்ளார்கள் என அப்பிரதேச சமூக செயற்பாட்டாளர்கள் எடுத்துக்கூறியிருந்தனர்.

இவ்விடயம் குறித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தம்மையும் தமது பிரதேசத்தையும் பாதுகாக்குமாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் வாகரை கதிரவெளி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததையடுத்து நேற்று ஞாயிறு நண்பகல் அவ்விடங்களுக்கு சென்று ஆராய்ந்ததுடன் ஆவணங்களை பரிசீலித்து மேல் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இலங்கை நீதித்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவரான நீங்கள் தான் இவ்விடயத்தில் எமக்கு உறுதுணையாக இருந்து நீதியை பெற்றுத்தர வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கேட்டுக்கொண்டார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 11 =

*