;
Athirady Tamil News

யாழ். நல்லூரில் பாரம்பரிய முறைப்படி பரிமாறப்பட்ட உணவுகள்!! (படங்கள், வீடியோ)

0

“பனை மான்மியம்” எனும் தலைப்பிலான வடக்கு மாகாண பனை எழுச்சி வாரம் இன்று திங்கட்கிழமை(22) முற்பகல்-09.30 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியுள்ளது. பனை எழுச்சிவாரத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக ஏழு தினங்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பனை எழுச்சி வாரத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது நிகழ்வில் கலந்து கொண்டிருந்த விருந்தினர்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவருக்கும் சாவகச்சேரி பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கத்தினரால் தயாரிக்கப்பட்ட பனங்கட்டிக் கூழ் பரிமாறப்பட்டது.

பனை ஓலையை வெட்டி மடித்துச் செய்யப்படும் ‘பிளா’ மூலம் பாரம்பரிய முறைப்படி மேற்படி கூழ் பரிமாறப்பட்டது. அத்துடன் கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவருக்கும் பனங்காய்ப் பணியாரமும் பரிமாறப்பட்டது.

இயற்கையோடு இயைந்த வகையில் தயாரிக்கப்பட்ட பனங்கூழ் மற்றும் பனங்காய்ப் பணியாரத்தை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் இயற்கையான சூழலில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் இரசித்துச் சுவைத்து உண்டனர்.
இதேவேளை, யாழில் இடம்பெறும் ஏனைய நிகழ்வுகளிலும், விழாக்களிலும் இவ்வாறான இயற்கை சார்ந்த உணவுப் பொருட்களையும், பானங்களையும் பரிமாறுவது வழக்கமாக கொண்டு வரப்பட வேண்டுமென மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சமூக ஆர்வலரொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

எமது முன்னோர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்ததுடன் மாத்திரமல்லாமல் இயற்கை சார் உணவுப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கிய காரணத்தால் தான் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். காலம் செல்லச் செல்ல வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப மனிதன் ஏற்படுத்திக் கொண்ட மாற்றங்கள் இன்று மனித இனத்துக்கே எதிரியாக மாறுகின்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. காலமாற்றத்திற்கேற்ப புதுமைகளை எமக்குள் உள்வாங்கும் அதேவேளை எமது வாழ்க்கைக்கு இனிமை சேர்க்கக் கூடிய பழமைக்கும் மதிப்புக் கொடுப்போம்.

எமது முன்னோர் வகுத்தளித்த பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களை எமது அடுத்த சந்ததியினரும் அறிய வழி வகுப்போம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − four =

*