;
Athirady Tamil News

தாய்மொழியை மறக்கும்படி புரளியை கிளப்பி விடாதீர்கள் – மனோ!! (படங்கள்)

0

நான் தலைவர்களை மேடையில் அமர்த்தி விட்டு மாணவர்களுடன் இணைந்து தரையில் இருப்பவன்.ஏதோ மனோ கணேசன் நாடு முழுவதும் உள்ள தலைவர்களை ஒன்றிணைத்து எல்லோருக்கும் பொதுவான பெருந் தலைவனாக பார்க்கின்றாரா என எண்ணுகின்றனர் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (22) மதியம் மட்டக்களப்பு பட்டிருப்பு துறைநீலாவணை மகா வித்தியாலயத்திற்கு பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்த அவர் அங்கு இடம்பெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

சிங்களம் படித்த தமிழர்களை படிக்காமல் அன்றைய முட்டாள்தனமான ஆட்சியாளர்கள் செய்துவிட்டார்கள் . நாங்கள் இவற்றை மாற்றியமைத்திருக்கின்றோம். மொழிக் கல்வியை நாங்கள் விருத்தி செய்வதால் தான் அறிவு வளர்ச்சியைப் பெற முடியும். எனக்கு மூன்று மொழிகள் தெரியும். அதனால் எனக்கு அறிவு வளரும். ஒரு மொழி காரர்களை விட எனக்கு அதிகமாக வளர்ந்து உள்ளது. அதுதான் தற்போதைய பிரச்சினை ஆகும்.

எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால் தான் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ் முடியும். சிங்கள மக்களுடன் ஒன்று சேர்ந்தால் தான் ஏனைய முஸ்லிம் மக்களுடனும் ஒன்று சேர முடியும். அப்போதுதான் இலங்கை நாட்டை ஐக்கியத்துடன் கட்டியெழுப்ப முடியும்.

நான் நாடு முழுக்க உள்ள தமிழ் மக்களை ஒன்று சேர்க்க முயல்கிறேன். அது வடக்காக இருந்தால் என்ன கிழக்காக இருந்தால் என்ன மலையகமாக இருந்தால் என்ன இலங்கைத் தீவுக்குள் எங்கிருந்தாலும் தமிழர்கள் ஐக்கியப்பட வேண்டும்.

ஆனால் ஏதோ மனோ கணேசன் நாடு முழுவதும் உள்ள தலைவர்களை ஒன்றிணைத்து எல்லோருக்கும் பொதுவான பெருந் தலைவனாக பார்க்கின்றாரா என எண்ணுகின்றனர்.அவர்களிடம் ஒன்றை கூற விரும்புகின்றேன். எனக்கு தலைமை தேவையில்லை.

நான் தலைவர்களை மேடையில் அமர்த்தி விட்டு மாணவர்களுடன் இணைந்து தரையில் இருப்பவன். அவர்கள் நாடு முழுக்க காதலர்களை சேர்த்து உயர்ந்த பெரும் தலைவனாக மாறிவிடுவானோ என்று அஞ்சுகிறார்கள் சந்தேகப்படுகிறார்கள் நான் அப்படியான எண்ணத்தோடு இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

வடக்கிலோ கிழக்கிலோ மலையகத்திலோ வாழும் தமிழர்கள் எனது உறவுகள் அனைத்து ஊர்களும் எனது ஊர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இனியன் பூங்குன்றனாரின் வாக்கிற்கேற்ப வாழ வேண்டும். அதைவிடுத்து பிரதேசவாதம் பேசினால் தந்தை செல்வா அவர்களின் வாய்ச்சொல் போல தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

என்னை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எனது கருத்துக்களை எதிர்க்க வேண்டாம். நான் உழைப்பது தமிழ் மக்களுக்காக மாத்திரமல்ல சிங்கள இமுஸ்லிம் மக்களுக்காகவும் சேர்த்து உழைக்கிறேன்.சிங்கள மக்கள் நல்லவர்கள் என்பதற்கு நானே சாட்சி ஒரு சில அரசியல்வாதிகளை அம்மக்கள் பிழையான வழிக்கு இட்டுச் செல்கின்றனர்.

நமது நாட்டிலே நிறைய பேர் இருக்கின்றனர் தாங்களும் செய்ய மாட்டார்கள் செய்கின்றவனையும் விட மாட்டார்கள். முடியாது என்று சவால் விட்டால் செய்து காட்டுவது எனது குணம்.

தாய்மொழியை மறக்கும்படி மனோ கணேசன் சொன்னார் என புரளியை கிளப்பி விடாதீர்கள் என்று ஊடகவியலாளர்களை கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இதை அரைகுறையாக கேட்ட அரசியல்வாதிகள் அப்படி செய்வார்கள்.

வடக்கு கிழக்கில் வந்து சிங்களம் படியுங்கள் என்று மாணவர்களை கூறும் இதேவேளை தெற்கிலே போய் தமிழ் படியுங்கள் என சிங்கள மாணவர்களுக்கு கூறிவருகிறேன் இதுவே உண்மை.

இளைஞர்கள் நாட்டை பொறுப்பெடுக்க வேண்டும் எனக்கூறும் தலைவர்கள் இளைஞர்கள் அரசியலுக்கு வரும் வேளை இடம் கொடுக்காமல் படுத்துக் கொள்கின்றனர். விட்டுக்கொடுக்காமல் இருப்பவர்கள் ஏன்தான் இளைஞர்களை அரசியலுக்கு வரவேண்டும் என கூறுகிறார்களோ தெரியவில்லை. நான் அப்படிப்பட்டவர்களே இளைஞர்கள் அரசியலுக்கு வரும்போது நான் அவ்விடத்திலேயே இருக்கமாட்டேன் . இருக்கும் வரை இந்த மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன்.

மட்டக்களப்புத் தமிழர்கள் பேசும் மொழியில் இனிமை இருக்கிறது பேசும்போது சங்கீதம் போல் இருக்கும் அவர்கள் உச்சரிப்பில் ஒரு தெளிவு இருக்கிறது இதுவே எனக்கு கிழக்கு மண்ணில் உள்ள காதலுக்குக் காரணம் என தெரளிவுபடுத்தினார்.

மேற்படி நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கிழக்கு இளைஞர் முன்னணியின் தலைவரும் அரச கரும மொழிகள் அமைச்சின் கிழக்கு மற்றும் மட்டக்களப்பு மாவட்டஇணைப்பாளருமான க.கோபிநாத் மற்றும் பாடசாலை அதிபர் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*