ஆஸ்பத்திரியை விலைக்கு வாங்கியதால் இந்திய கம்யூ. எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து சஸ்பெண்டு..!!

கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை அந்த கட்சியின் தலைவராக இருந்தாலும் தொண்டராக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும்.
சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வெள்ளறடை பகுதி செயலாளராக பணியாற்றியவர் கட்சி மேலிடத்திடம் உரிய தகவல் தெரிவிக்காமலும் அனுமதி பெறாமலும் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதால் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வையும் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொல்லம் மாவட்டம் சாந்தனூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெயலால். இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த இவர், கொல்லம் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றை ஜெயலால் ரூ.5.25 கோடிக்கு வாங்க விலை பேசப்பட்டது. முதல் கட்டமாக ரூ.1கோடி முன்பணம் கொடுக்கப்பட்டு அட்வான்ஸ் பத்திரமும் பதிவு செய்யப்பட்டது.
ஆனால் இதுபற்றி கட்சி மேலிடத்திடம் ஜெயலால் எம்.எல்.ஏ. எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதை தொடர்ந்து அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கானம் ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கம் கேட்டும் எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.