;
Athirady Tamil News

முறைப்படியான அழைப்பு கிடைக்கவில்லை; சிவமோகன் எம்.பி!!

0

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து முறைப்படியான அழைப்பு கிடைக்கவில்லை; சிவமோகன் எம்.பி

அமைச்சர் மனோகணேசன் அவர்களின் ஏற்பாட்டில் கன்னியா வெந்நீருற்று விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து எமக்கு முறைப்படியான அழைப்பு கிடைக்கவில்லை என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் இன்று ஊடகவியலாளர் ஓருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அமைச்சர் மனோகணேசன் அவர்களின் ஏற்பாட்டில் கன்னியா வெந்நீருற்று விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து எமக்கு முறைப்படியான அழைப்பு கிடைக்கவில்லை. வழமையாக ஜனாதிபதியுடனான சந்திப்புக்கள் அவருடைய செயலாளர்கள் அல்லது உதவியாளர்களால் முறைப்படி அறிவிக்கப்படும். கால இடைவெளிகள் இருக்கும். அப்படியான நிலையில் நாங்கள் சந்தித்து வந்திருக்கின்றோம். எந்த சந்திப்புக்களையும் நாம் ஒதுக்கி விடவில்லை. இப்படி ஒரு சந்திப்பு இருக்கு என்பது காலை வரை தெரியாது. காலையில் தொலைபேசியை சீர் செய்த போது இரவு 10, 10 அரை போல் ஒரு தகவல் வந்திருந்தது தெரிந்தது. எனவே அது பெரிய விடயமல்ல. தொடர்பாடலும் ஏற்பட்ட இடைவெளி தான் நாம் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளாமைக்கு காரணம்.

அடுத்து ஜனாதிபதி தேர்தலில் யார் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பதற்கான சீரான தகவல்கள் இதுவரை இல்லை. மொட்டுக்கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாக கேட்கப் போகினறார்களா அல்லது தனியாக கேட்கப் போகின்றார்களா என்பது ஒரு விடயம். இரண்டாவது ஐக்கிய தேசியக் கட்சியில் யார் கேட்கப் போகின்றார்கள் என்பது, மூன்றாவது ஜேவிபியும் கேட்கிறதா இல்லையா என்ற ஒரு விடயமும் இருக்கிறது. முஸ்லிம் கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கேட்பதாகவும் ஒரு தகவல் உண்டு. ஆகவே யார் கேட்கப் போகின்றார்கள் என்ற தீர்மானம் வரும் வரை எதனையும் சொல்லிவிட முடியாது. இவர்கள் எப்படி செயற்படப் போகின்றார்கள் என்பதை வைத்து தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானங்களை எடுக்கும்.

மேலும், தற்போது ஜனாதிபதியால் கொண்டு வரப்படுகின்ற போதை ஒழிப்பு என்பது நல்லதொரு விடயம். போதை ஒழிப்பு குற்றத்திற்கு உள்ளானவர்கள் உண்மையிலேயே அவ்வளவு போதைப் பொருட்களையும் தமது கைகளில் வைத்துக் கொண்டு பிடிபட்டார்களா இல்லையா என்பது சந்தேகத்திற்குரியது. ஏனெனில் கடந்த காலத்தில் எந்தவித குற்றமும் செய்யாது பிடிபட்ட பல தமிழர்கள் மீது சோடிக்கப்பட்ட வழக்குகள் மூலம் இன்று பாரிய குற்றங்களிலே சிக்க வைக்கப்பட்டுள்ளார்கள். அதனால் அரசியல் கைதிகளாக விடுதலையின்றி இருக்கிறார்கள்.

எனவே அங்கு நியாயம் இருந்ததா இல்லையா என்ற கேள்வி இருக்கிறது. யுத்த காலத்தில் தென்பகுதியில் நடந்த குண்டு வெடிப்புக்களில் சாதரணமாக பற்றி வழங்கியதற்காகவே சில கடை உரிமையாளர்கள் பிடிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இவர்கள் எல்லாம் பயங்கரவாதத்திற்கு உடந்தை என பயங்கரவாத சட்டத்தை வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல் போதைப் பொருள் தொடர்பான விடயத்தில் உண்மையாக கைது செய்யப்பட்டார்களா அல்லது சோடிக்கப்பட்டு சிக்க வைக்கப்பட்டார்களத என்பது பார்க்கபட வேண்டிய ஒரு விடயம். மக்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தி இனிவரும் காலங்களில் போதைப் பொருள் வைத்திருந்து கைது செய்யப்பட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு இனிவரும் காலங்களில் மரண தண்டனை விதிக்கப்படும் என தெளிவு படுத்தி அதனை நடைமுறைப்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − seven =

*