;
Athirady Tamil News

பியர் கிரில்ஸின் கேள்விகளுக்கு பிரதமர் மோடியின் பதில்கள் – முழுத்தொகுப்பு..!!

0

“வாவ்…” என்று வியக்காமல் இருக்க முடியாது, அதைப் பார்த்தவர்களுக்கு.

ஏன், அவரது அரசியல் எதிரிகள்கூட அட, 68 வயதில்கூட மனிதர் இத்தனை துணிச்சலுடன் ஆபத்தோடு கை குலுக்கி வந்திருக்கிறாரே என மனதுக்குள் வியந்து பாராட்டி இருப்பார்கள்.

டிஸ்கவரி குழும சேனல்களில் நேற்று முன்தினம் இரவு 180 நாடுகளில் ஒளிபரப்பாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியைத்தான் சொல்கிறோம்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 45 வயதே ஆன பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிற இந்த நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அடர்ந்த காட்டுக்குள் போய், சவால்களை சந்தித்து, ஆபத்துகளோடு கை குலுக்கி உயிர் பிழைத்து வருவது என்னவோ, இந்த மனிதருக்கு குற்றால சாரலில் நனைந்து கொண்டு, திருநெல்வேலி அல்வாவை சுடச்சுட வாழை இலையில் பரிமாறி சாப்பிடுவதுபோலத்தான் இருக்கிறது.

இந்த ஆபத்தான பயணத்தில் தன்னுடன் அவர் சிறப்பு விருந்தினராக பிரபலங்களை அழைத்துச் செல்வது வாடிக்கை.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவைக்கூட அப்படி பியர் கிரில்ஸ் அழைத்துப்போனது உண்டு.

இந்த முறை, அவருடைய சிறப்பு விருந்தினர் நமது பிரதமர் மோடி.

பிரதமர் மோடி – பியர் கிரில்ஸ்

உத்தரகாண்ட் மாநிலத்தில் யானைகளும், புலிகளும், மான்களும் “இது எங்களின் சொர்க்க பூமியாக்கும்” என்று தலை நிமிர்த்திக்கொண்டு உலா வருகிற ஜிம் கார்பெட் தேசிய பூங்காவின் அடர்ந்த காட்டுக்குள், நடுங்க வைக்கும் குளிரிலும் மோடியும், பியர் கிரில்ஸ்சும் மேற்கொண்ட சாகச பயணம், மயிர் கூச்செறிய வைக்கிறது.

அதனூடே பியர் கிரில்ஸ்சும் மோடியும் கலந்துரையாடுவது தனி சுகம். முன்னவர் ஆங்கிலத்திலும், பின்னவர் இந்தியிலும் கலந்துரையாடினாலும் அதில் ஒரு திரில் கலந்த மகிழ்ச்சியை அனுபவிக்காமல் இருக்க முடியவில்லை.

“நீங்கள் இந்தியாவின் மிக முக்கியமான மனிதர். உங்களை உயிரோடு வைத்துக்கொள்வது எனது வேலை” என பியர் கிரில்ஸ் தமாஷாக சொன்னாலும், அது தமாஷ் அல்ல. உண்மைதான். அத்தனை கடினமான பயணம்தான் அது. 130 கோடி மக்களின் பிரதமர் அவர் கைகளில்.

மோடியின் பள்ளிப்பருவம் எப்படி இருந்தது என்று பியர் கிரில்ஸ் கேட்டபோது, மோடி அந்தக் காலத்துக்கே சென்று விடுகிறார்.

“எனது இளம்பருவம் ஒன்றும் அதிநவீனமானது இல்லை. எங்கள் குடும்பம் ஏழ்மையானது. ஆனாலும் நான் பள்ளிக்கு சென்றபோது என்னை நான் சரியாக வைத்துக்கொண்டேன். எங்கள் வீட்டிலே ஒரு அயர்ன் பாக்ஸ்கூட கிடையாது. இருந்தாலும் எனது சட்டையை ஒரு கோப்பையில் எரியும் கரியைப் போட்டு அயர்ன் செய்து கொள்வேன்” என நினைவுகூர்ந்தார்.

டீ விற்ற அனுபவத்தையும் மோடி பகிர்ந்து கொண்டார்.

“எங்கள் அப்பா ஒரு சிறிய டீக்கடை நடத்தினார். பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக நான் ரெயில் நிலையத்துக்கு போய் டீ விற்று உதவி செய்வது உண்டு. ரெயில்வே எனது வாழ்க்கையில் முக்கிய பங்களிப்பு செய்திருக்கிறது” என்றும் சொன்னார்.

“அது சரி, நீங்கள் நல்ல மாணவரா?” என பியர் கிரில்ஸ் கேட்டபோது சிரித்து விட்டார் மோடி. “நான் நல்ல மாணவன் என்று என்னால் சொல்ல முடியவில்லை”.

இளம் வயதிலேயே இமயமலைக்கு சென்ற மோடியின் அனுபவம் இது…

“அப்போது எனக்கு வயது 17, 18 இருக்கும். வீட்டை விட்டு வெளியேறினேன். வாழ்க்கையில் இனி என்ன செய்யலாம் என சிந்தித்தேன். அப்போதே ஆன்மிக உலகைக் காணும் தேடல் எனக்குள் வந்தது. நான் இயற்கையை நேசித்தபடியால், இமயமலைக்கு போய் தங்கினேன். அங்கு நிறைய மனிதர்களை சந்தித்தேன். அவர்களுடனே தங்கினேன். அது ஒரு அற்புதமான அனுபவம். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அங்கே நீண்ட காலம் இருந்தேன்” என்றார் மோடி.

காட்டுக்குள் குறிப்பிட்ட அந்த இடம் வந்தபோது, அது ஆபத்தான இடம், பயங்கரமான புலிகளின் நடமாட்டம் உண்டு என்று பியர் கிரில்ஸ் சுட்டிக்காட்டுகிறார். மரக்கிளையில் இருந்து ஈட்டி போன்ற ஆயுதத்தை உருவாக்கிக்கொள்கிறார்.

ஆனால் அச்சம் என்பது எனக்கு இல்லை என்று சொல்கிறார் மோடி இப்படி…

“இதை ஆபத்தான பகுதி என்று நாம் கருதவே தேவையில்லை. கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். விடுங்கள். நாம் இயற்கைக்கு எதிராக போகிறபோதுதான் இயற்கை நமக்கு எதிராக ஆபத்தானதாகிறது. மனிதர்கள்கூட ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள். நாம் இயற்கையோடு ஒத்துழைக்கிறபோது, இயற்கையும் நம்மோடு ஒத்துழைக்கிறது” என்று கூறிக்கொண்டே “உங்களுக்காக இதை நான் வைத்துக்கொள்கிறேன்” என்று பியர் கிரில்ஸ் தந்த ஈட்டியை கையில் வாங்கிக்கொள்கிறார்.

“உங்களுக்கு பயமே வராதா?” என்று பியர் கிரில்ஸ் கேட்டபோது மோடியிடம் இருந்து பதில் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக வருகிறது.

“ம்கூம்… எனது பிரச்சினையே நான் ஒருபோதும் பயத்தை அனுபவித்தது இல்லை என்பதுதான். ஏனென்றால் எனக்குள்ளான மனநிலை, எப்போதும் நேர்மறையானது. பதற்றம் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. எல்லாவற்றிலும் நான் நேர்மறைத்தன்மையை காண்கிறேன். அதனால் நான் ஏமாற்றங்களை சந்தித்ததே கிடையாது. இளைய தலைமுறையினருக்கு நான் சொல்லிக்கொள்ள ஒன்று உண்டு. வாழ்க்கையை துண்டு துண்டுகளாக நாம் சிந்திக்கக்கூடாது. வாழ்க்கையை முழுமையாக நாம் எடுத்துக்கொள்கிறபோது அதில் ஏற்றங்களும் உண்டு, இறக்கங்களும் உண்டு. நீங்கள் கீழே இறங்கினால் அதுபற்றி சிந்திக்கக்கூடாது. ஏனென்றால் உங்கள் வாழ்வின் உயர்வு அங்கேதான் தொடங்குகிறது”.

முக்கியமான கேள்வியை கேட்க பியர் கிரில்ஸ் தவறவில்லை.

“ஆமாம், நீங்கள் பிரதமர் ஆவோம் என கனவு கண்டீர்களா?”

மோடியின் பதில் இது.

“நான் முதலில் ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியாக இருந்தேன். 13 ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்திருக்கிறேன். அது எனக்கு புதிய பயணம். அதன்பிறகு இந்த நாடு, நான் பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பியது. எனவே கடந்த 5 ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறேன். எப்போதுமே எனது கவனம் எல்லாம் நாட்டின் வளர்ச்சி மீதுதான் இருந்தது. அதில் நான் திருப்தி காண்கிறேன். இந்தப் பயணத்தை நான் விடுமுறை என எடுத்துக்கொண்டால், கடந்த 18 ஆண்டுகளில் நான் எடுத்துக்கொண்ட முதல் விடுமுறை இதுதான்”.

“நாட்டின் பிரதமர் நீங்கள்… நம்ப முடியாமல் உங்களை நீங்கள் கிள்ளிப்பார்த்துக்கொண்ட அனுபவம் உண்டா?” என்று கேட்டபோது மனம் திறக்கிறார் மோடி.

“ இல்லை. நான் யார் என்று எனக்குள் ஒருபோதும் தோன்றியது இல்லை. நான் முதல்-மந்திரியாக இருந்தபோதும் சரி, பிரதமராக ஆனபோதும் சரி, நான் எனது வேலையைப்பற்றியே சிந்தித்தேன். என் கடமையைப் பற்றித்தான் நினைத்தேன். எனது இந்த நிலையை (பிரதமர் என்ற நிலையை) ஒரு போதும் நான் தலைக்குள் ஏற்றிக்கொண்டதே கிடையாது”.

“உலகத்துக்கு இந்தியா விடுக்கிற செய்தி என்ன?” என்று பியர் கிரில்ஸ் கேட்க மோடியின் பதில் என்ன தெரியுமா?

“உலகத்துக்கு இந்தியாவின் செய்தி என்றால் அது வாசுதெய்வ குதும்பகம்.. அதாவது ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்பதுதான்”.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*