;
Athirady Tamil News

கோத்தபாய நிற்பதற்கு TNA காரணம்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி!!

0

கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்கு ரணில் அரசாங்கமும், தமிழ் தேசியக் கூட்டமைப்புமே காரணம்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கால நீடிப்பும் தான் கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக இன்று நிற்பதற்கு காரணம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்னும் நான்கு மாதங்களில் ஒரு ஜனாதிபத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் இரண்டு பிரதான கட்சிகளும் தமது வேட்பாளர்களை அறிவிப்பதில் உட்கட்சி போட்டியிலே இருக்கின்றன. பொதுஜன முன்னனி தனது வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அவர்களை அறிவித்து இருக்கிறது. அதேபோல் ஐக்கிய தேசிய முன்னனி தனது வேட்பாளர் சஜித்தா அல்லது ரணிலா என்ற இழுபறியில் இருக்கிறது. இரண்டு பிரதான கட்சிகளும் கடந்த 65, 70 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள். 2015 ஆம் ஆண்டு இரண்டு பிரதான கட்சிகளும் மைத்திரிபால சிறிசேன அவர்களை பொதுவேட்பாளராக இறக்கி தமிழ் மக்களின் பேராதரவுடன் இவரை ஜனாதிபதி ஆக்கியது. இவர்களுடைய கடந்த நான்கரை வருட ஆட்சியில் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

விசேடமாக போர்க்குற்றம், பொறுப்புக்கூறல், மனிதவுரிமை மீறல்கள் இன்னும் அரசியல் தீர்வுகள் தொடக்கம் அன்றாட பிரச்சனைகள் வரை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த நான்கரை வருடங்களில் அபிவிருத்தி சம்மந்தமாக ஒரு சரியான தீர்வும் எடுக்கப்படவில்லை. புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டு வரப்பட்டு அதற்கூடாக தீர்வு காணப்படும் என்று கூறப்பட்டாலும் புதிய அரசியல் யாப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை முற்று முழுதாக புறக்கணித்துள்ளது. மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் இந்த இரண்டு பிரதான கட்சிகளும் போட்டியிட இருக்கின்றன.

கோத்தபாய ராஜபக்சவை பொறுத்தவரை இறுதிக்கட்ட போரில் அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர். இந்த யுத்தத்ததை முடித்து வைப்பதற்கும், மனிதவுரிமை மீறல்களுக்கும், அழிவுகளுக்கும் காரணமான பிரதான பாத்திரத்தை வகித்தவர். கோத்தபாயவின் வழிகாட்டலில் நேரடியாக யுத்தத்தை வழிநடத்தியவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கக் கூடிய சரத்பொன்சேகா. முன்னாள் இராணுவத்தளபதியாக இருந்து இந்த யுத்தத்தை நேரடியாக வழிநடத்தியவர். ஐககிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளில் இன்றைக்கு மஹிந்த தலைமையில் அல்லது கோத்தபாய தலைமையில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இருக்கக் கூடிய இந்த அரசாங்கம் யுத்தம் முடிவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மேல் ஏற்பட்டுள்ள போர்க்குற்றம், மனிதவுரிமை மீறல்கள் போன்ற கறை படிந்த இந்த குற்றங்களுடன் தொடர்புடையர்களை பொறுப்புக் கூறலில் இருந்து விசேடமாக மஹிந்தராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய, 40 இற்கு மேற்பட்ட இராணுவத் தளபதிகள் மேல் இருக்கின்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து பிரதமரும், ஜனாதிபதியும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவையில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் 3 தடவை கால நீடிப்பை பெற்று பாதுகாத்துள்ளது. இன்றைக்கு கோத்தபாய ஒரு ஜனாதிபதி வேட்பாளராக நிற்கின்றார் என்றால் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கால நீடிப்பும் தான் அதற்கு காரணம்.

இந்த நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளில் ஒன்று யுத்தத்தை நடத்தியுள்ளது. மற்றது குற்றவாளிகளை காப்பாற்றி இன்று ஜனாதிபதி வேட்பாளர் வரை கொண்டு வந்து விட்டுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரைர இந்த இரண்டு பிரதான கட்சிகளாலும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. ஆகவே எங்களைப் பொறுத்தவரை இந்த இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுடன் மட்டும் பேசாது, இந்த இரண்டு பிரதான வேட்பாளருக்கு பின்னால் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதில் அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் செல்வாக்கும் இருக்கிறது.

சர்வதேச சமூகம் ஜனாதிபதித் தேர்தலில் யாரை கொண்டு வரவேண்டும் என்று அக்கறையாக இருக்கக் கூடியவருர்களுடனும், உறுதிமொழியைப் பெற வேண்டிய தேவையுள்ளது. காரணம் 2015 ஆம் ஆண்டு ஒரு ஆட்சி மாற்றம் வரும்போது அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மிகத்தீவிரமாக நின்று அந்த தேர்தலில் தாம் விரும்பியவர்களை ஆட்சிக்க கொண்டு வந்தார்கள். தமிழ் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த பின் சர்வதேச சமூகம் எந்தவித அழுத்தங்களையும் கொடுக்காது வெறுமனே தங்களது நாடுகளின் நலன்களுடன் மட்டும் கவனத்தை செலுத்தி தமிழ் மக்களை சர்வதேச சமூகம் ஏமாற்றியிருக்கிறது. தைத்திரி, ரணில் ஆகியோரும் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்கள்.

ஆகவே சர்வதேச சமூகம் தமிழ் மக்களது அரசியல் தீர்வுக்கும், அன்றாட பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் வரப்போகும் ஜனாதிபதியிடம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தில் ஈடுபட வேண்டும். அதேபோல் போட்டியிடும் வேட்பாளர்களும் தமிழ் மக்கள் தொடர்பில் தமது அரசியல் தீர்வு, அன்றாட பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்து நேரடியாக பேச வேண்டும். சர்வதேச இராஜதந்திகளிடமும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஊடாக உறுதி மொழி எடுத்து தான் ஆதரவு வழங்க வேண்டும்.

இது குறித்து பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், ஏனைய கட்சிகள், மதத்தலைவர் என அனைவரும் தமது தனிப்பட்ட காழ் புணர்ச்சிகளை விடுத்து இந்த தேர்தலில் தமிழ் மக்கள் எப்படியான முடிவை எடுக்க வேண்டும் என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்த வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 6 =

*