;
Athirady Tamil News

எமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் !!

0

நாட்டில் மூவின மக்களும் எதிர்பார்க்கும் சகல தகுதிகளும் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரையே நாளை களமிறக்கவுள்ளோம். நிச்சயமாக வேட்பாளர் கட்சியின் ஒருவராகவே இருப்பார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. பிரதான கட்சிகளின் பொய்களையும் ஊழல் குற்றங்களை நிராகரிக்கும் சகல மக்களும் தம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிக்க வருமாறும் மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் நேற்று கலந்துகொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

கடந்த ஜனாதிபதி தேர்தல் வரையில் அப்போது ஆட்சியில் இருந்த ராஜபக் ஷ அணியின் மோசமான ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் சகல சக்திகளும் ஒன்றிணைந்து அந்த ஆட்சியை வீழ்த்தின. அதற்கான பொது அணியாக உருவாக நேர்ந்தது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய அரசாங்கம் எவற்றை சாதித்தது என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது. ராஜபக் ஷவை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் மீண்டும் ராஜபக் ஷவை பலப்படுத்தும் வேலைதிட்டங்கலையே முன்னெடுத்தது. இந்த ஆட்சியில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றன. ஊழல் மோசடிகள் குறித்து பேசியவர்கள் மத்திய வங்கி ஊழலில் ஈடுபட்டனர். ஆகவே 2015 ஆம் ஆண்டும் ஊழல் ஆட்சியே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் ஆட்சிகள் இனியும் இடம்பெறக் கூடாது. மாறி மாறி இவர்களின் ஊழலை முன்னெடுக்க இடமளிக்க முடியாது.

ராஜபக் ஷ அணியை தோற்கடிக்க வேண்டும். அதேபோல் இந்த ஆட்சியையும் தோற்கடிக்க வேண்டும். இந்த இரண்டு தப்பின் மீதும் அதிருப்தியில் உள்ள மக்கள் புதிய அணியான எம்முடன் கைகோருங்கள். மாற்று அணியாக நாம் உருவாக வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம். ஆகவே மக்கள் எம்மை நம்பி எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேம்.

இந்த நாட்டில் தனி ஒருவரால் மாற்றங்களை கொண்டுவர முடியாது. ஊழல் வாதிகளை பக்கத்தில் வைத்துகொண்டு தனி ஒருவரால் எதனையும் மாற்றிவிட முடியாது. அத்துடன் அரசியல் அறிவில்லாத நபர்களால் மக்களின் நிலைமையை அறிந்துகொள்ளாத நபர்களினால் நாட்டினை சரியான திசைக்கு கொண்டுசெல்ல முடியாது. அதனை மக்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆகவே நாட்டினை மாற்றியமைக்க முடியும் என்ற நோக்கத்தில் மத்திய நிலையமாக எமது கூட்டணி அமையப்பெற்றுள்ளது. எம்மால் ஜனநாயக ரீதியில் உறுதியான மாற்றத்தினை உருவாக்க முடியும். ஆகவே இந்த ஜனாதிபதி தேர்தலை தீர்மானம் மிக்க தேர்தலாக கருத வேண்டும். மூன்று பிரதான அணிகளின் போராட்டம் என்று விமர்சனப்படுத்துவதை விடவும் ஊழல் மோசடி குற்றங்களை செய்துவரும் இரண்டு அணிகளுக்கு எதிராக ஜனநாயகத்தை கையில் எடுத்து நாட்டினை மீட்கும் அணியாக நாம் உள்ளோம். ஆகவே இதனை இரண்டு தரப்பினரின் போராட்டமாகவே கருத வேண்டும். நாட்டில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைக்கும் மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.

எதிர்வரும் 18 ஆம் திகதி காலிமுகத்திடல் மைதானத்தில் எமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து எமது கொள்கை திட்டங்களை நாம் முன்வைப்போம். எம்முடன் மக்கள் கூட்டணி அமைக்க வேண்டும் என்றே நாம் கேட்டுக்கொள்கிறோம். இந்த நட்டு மக்கள் எதிர்பார்க்கும் சகல தகுதிகளும் கொண்ட வேட்பாளரையே நாம் களமிறக்குவோம். அதுவும் மக்கள் விடுதலை முன்னணியின் ஒருவரையே களமிறக்குவோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*