;
Athirady Tamil News

முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம் இன்று நடக்கிறது..!!

0

உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று மரணமடைந்தார்.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில் நிதித்துறை மந்திரியாகவும் இருந்தவர், அருண் ஜெட்லி (வயது 66). மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

நீரிழிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லிக்கு, கடந்த ஆண்டு மே மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜெட்லியின் உடல்நிலை மோசமடைந்தது.

இதற்கிடையே திசு புற்றுநோயும் அருண் ஜெட்லியை தாக்கியது. இதனால் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். அத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தனது உடல்நலத்தை அடிக்கடி பரிசோதித்து வந்தார்.

தொடர்ந்து வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த அருண் ஜெட்லிக்கு கடந்த 9-ந்தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல், உடல் சோர்வு போன்றவற்றால் அவதிப்பட்ட அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஜெட்லியின் உடல்நிலையை பல்துறை நிபுணர்கள் கொண்ட மருத்துவக்குழு ஒன்று தொடர்ந்து கவனித்து வந்தது.

இந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்த அருண் ஜெட்லியின் உடல்நிலை நேற்று முன்தினம் இரவில் மோசமடைந்தது. அவரது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக போராடினர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் 12.07 மணியளவில் அருண் ஜெட்லி காலமானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பா.ஜனதா மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மருத்துவ மனைக்கு சென்று ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பா.ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் மலர்வளையம் வைத்து ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அருண் ஜெட்லி உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்திய காட்சி

இதைத்தொடர்ந்து பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் ஜெட்லியின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. இதில் ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் பிற்பகலில் அருண் ஜெட்லியின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நிகம்போத் காட் பகுதியில் தகனம் செய்யப்படுகிறது. இந்த தகவலை பா.ஜனதா தலைவர் சுதான்ஷு மிட்டல் தெரிவித்தார்.

உடல் நலக்குறைவால் காலமான அருண் ஜெட்லிக்கு மனைவி, ஒரு மகன், மகள் ஆகியோர் உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அருண் ஜெட்லி, கடந்த தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடுவதை தவிர்த்தார். மேலும் தற்போதைய மத்திய அரசில் மந்திரி பதவி வேண்டாம் என பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

அருண் ஜெட்லியின் மரணத்துக்கு பிரதமர் மோடி உள்பட ஏராளமான தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

அமீரக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், ‘அருண் ஜெட்லிஜியின் இறப்பால் எனது மதிப்புமிக்க ஒரு நண்பரை இழந்துள்ளேன். அவரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். பிரச்சினைகள் பற்றிய அவரது நுண்ணறிவும், விஷயங்கள் குறித்த நுணுக்கமான புரிதலும் அனைவரிடமும் இல்லாதது. அவர் நன்றாக வாழ்ந்தார். எண்ணற்ற மகிழ்ச்சியான நினைவுகளை நமக்கு விட்டு சென்றுள்ளார். அவரது இழப்பை நாம் உணர்வோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட இரங் கல் செய்தியில், ‘ஒரு புத்தி சாலித்தனமான வக்கீலாக, ஒரு அனுபவமிக்க நாடாளுமன்ற உறுப்பினராக, புகழ்பெற்ற மந்திரியாக தேசத்தின் கட்டுமானத்தில் மிகப்பெரிய பங்களிப்பை அருண் ஜெட்லி வழங்கி உள்ளார். அவரது மறைவு பொது வாழ்விலும், அறிவுசார் சூழலிலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்’ என்று கூறியிருந்தார்.

நீண்ட கால நண்பர் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரை இழந்து விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஜெட்லியின் மறைவு நாட்டுக்கும், தனக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என தெரிவித்து உள்ளார். தனது துயரத்தை வெளியிட வார்த்தைகள் இல்லை எனவும் கண்ணீருடன் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இரங்கலில், ‘அருண் ஜெட்லி மறைவு குறித்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். ஒரு பொது மனிதராக, நாடாளுமன்றவாதியாக, மந்திரியாக பொதுவாழ்வில் அவர் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவில் கொள்ளப்படும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி இரானி, ராம்விலாஸ் பஸ்வான், முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, கபில்சிபல், சசிதரூர், பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இதைப்போல காங்கிரஸ் கட்சியும் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் வெளியிட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 − six =

*