;
Athirady Tamil News

நாங்கள் மாற்றுக் கருத்து உடையவர்களாக இருக்கின்றோம்: றிசாட்.!!

0

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கின்ற விடயத்தில் நாங்கள் மாற்றுக் கருத்து உடையவர்களாக இருக்கின்றோம்: அமைச்சர் றிசாட்

சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கின்ற விடயத்தில் நாங்கள் மாற்றுக் கருத்து உடையவர்களாக இருக்கின்றோம் என வர்த்தக கைத்தொழில் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர் நிநாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அதிதியாக கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் மனோகணேசன், அமைச்சர் ரவூக் ஹக்கீம், அமைச்சர் திகாம்பரம், நான் உட்பட்ட சிறுபான்மை கட்சிகள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்து பேசியிருக்கிறோம். அதேபோல் ஐக்கிய தேசிய முன்னனியின் கூட்டனிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒன்றுபட்ட தீர்மானம் எடுப்பதற்கு நாங்கள் தீர்மானித்து இருக்கின்றோம்.

வேட்பாளர் தெரிவு பிரச்சனையை ஐக்கிய தேசியக் கட்சி தான் சுமுகமாக தீர்க்க வேண்டுமே தவிர, இதை சிறிய கட்சிகளின் மேல் தள்ளுவது அல்லது திணிப்பது பொருத்தமானது அல்ல. ஐக்கிய தேசிய முன்னனி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட ஒவ்வொரு கஸ்ரங்களின் போதும் சிறுபான்மை கட்சிகள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்கி இந்த அரசாங்கத்தைப் பாதுகாத்து இருக்கிறது. இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் வேட்பாளரை தெரிவு செய்கின்ற விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அவசரமாக ஒரு முடிவெடுக்க வேண்டும்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அவசர அவசரமாக கொண்டு வந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு எங்களுடைய எதிர்ப்பை நாங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றோம். அது மாத்திரமல்லாமல் இது அதற்குரிய தருணமும் இல்லை. சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கின்ற விடயத்தில் நாங்கள் மாற்றுக் கருத்து உடையவர்களாக இருக்கின்றோம். ஒரு ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டுள்ள நேரத்தில் அவசர அவசரமாக பிரேரணை கொண்டு வந்தது பொருத்தமற்ற விடயம். அதை நாங்கள் நிராகரித்து இருக்கின்றோம். அதற்கு நாங்கள் எந்தவிதமான ஒத்துழைப்பையும் கொடுக்கவும் மாட்டோம்.

சிறுபான்மைக் கட்சிகளைப் பொறுத்தவரையில் அதாவது மலையகம் மற்றும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் நாங்கள் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றோம். எல்லா இனத்தவர்களும், மதத்தவர்களும் ஒற்றுமையாக வாழக் கூடிய வகையில் இந்த நாடு இருக்க வேண்டும். இந்த நாட்டுக்கு நல்ல தலைவர் தேவை. அதனை தெரிவு செய்வதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம். எங்களுக்கிடையில் பல சந்திப்புக்களை நாங்கள் ஏற்படுத்தியிருக்கின்றோம். தொடந்தும் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம். நல்ல முடிவை நாங்கள் எடுப்போம் எனத் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − eight =

*