;
Athirady Tamil News

முல்லைத்தீவு ஆலய வளாகத்தில் பெளத்த பிக்குவின் உடல் தகனம்: கூட்டமைப்பே பொறுப்பு!

0

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று நடந்த சம்பவம் தொல்பொருள் திணைக்களத்துடன் தொடர்புடையதொன்றாகவே காணப்படுகிறது. தொல்பொருள் திணைக்களம் தற்போது அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பொறுப்பிலுள்ள ஒரு திணைக்களமாகும். இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏன் நாடாளுமன்றத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் தமிழ்மக்கள் எதிர்நோக்கி வரும் ஆபத்துக்களை எடுத்து விளக்கி, அழுத்தம் வழங்கி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பின்னிற்கிறது? எனத் தெரிவித்துள்ள ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் நடந்த சம்பவம் தொடர்பிலும் தமிழ்மக்களுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று யாழ். நகரிலுள்ள ஈபிடிபி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயச் சுற்று வட்டாரத்தில் பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை நீதிமன்றத்தின் உத்தரவை மீறியும், பொதுமக்களின் உணர்வுகளை மீறியும் எரித்துள்ளார்கள். இது தவறான விடயம்.

ஆகவே, இவ்வாறான சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் மாத்திரமல்ல எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் குறித்த சம்பவத்திற்கெதிராக குரல் கொடுக்கவும் தீர்மானித்துள்ளேன்.

ஊடகங்களுக்காக கதைப்பதையே ஏனைய தமிழ் பிரதிநிதிகள் செய்கிறார்கள். ஆனால்,எங்களுடைய செயற்பாடு நாங்கள் எதனை முன்வைக்கின்றோமோ அல்லது பேசுகின்றோமோ அந்தவிடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதுதான் எங்களுடைய நோக்கம்.

தற்போதைய அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கடந்த நான்கரை வருடங்களாகத் தமிழ்மக்களுக்கு உருப்படியாக என்ன செய்துள்ளது? இதுதொடர்பிலும் நாங்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கவுள்ளோம்.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு காரணமாகவிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்திற்குள் தீர்வு கண்டிருக்க வேண்டும். எனினும், தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்ற எண்ணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அறவேயில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − 2 =

*