;
Athirady Tamil News

ஜனாதிபதி மைத்திரிக்கு பிரதமர் ரணில் பதிலடி!!

0

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க விவகாரத்தில் ஜனாதிபதி என்மீது முன்வைத்த குற்றச்சாட் டுக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அரசியல் அமைப்பை மீறி செயற்பட்டு அவமானப்படும் நிலைமைக்கு நான் இன்னமும் தள்ளப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலும் என்மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் பதில் கூறிகொண்டிருக்க மாட்டேன் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைகுழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக் ஷி டயஸ் விக்ரமசிங்க விடயத்தில் பிரதமர் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியிருந்த நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் அவர் நேற்று விடுத்திருந்த விசேட அறிக்கையிலேயே பிரதமர் இவற்றை சுட்டிக்காட்டியுள்ளார். இதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைகுழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக் ஷி டயஸ் விக்ரமசிங்க தொடர்பில் ஜனாதிபதி என்மீது குற்றம் சுமத்தியிருந்தார். இலங்கையின் அரசியல் அமைப்பு பிரகாரம் உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்தில் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் பிரதமர நீதியரசருக்கும் சட்டமா அதிபருக்கு மட்டுமே உள்ளது. இந்த விடயத்தில் நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் அமைப்பிற்கு அப்பால் சென்று செயற்பட்டதில்லை. அரசியல் அமைப்பிற்கு அப்பால் சென்று செயற்பட்டவர்கள் குறித்து உயர் நீதிமன்ற தீர்மானங்கள் உள்ளன. அந்த நிலைமைக்கு நான் விழவில்லை. தில்ருக் ஷி விக்ரமசிங்கவிற்கோ அல்லது வேறு எந்தவொரு நபருக்கோ உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு யாரையும் நியமிக்கக்கோரி எந்தவொரு கடிதமும் நான் அனுப்பியதில்லை. அவ்வாறு இருக்கையில் நான் அவ்வாறு கடிதம் அனுப்பியதாக கூறும் காரணிகள் உண்மைக்கு புறம்பானவை. நான் அவற்றை நிராகரிக்கிறேன்.

தில்ருக் ஷி விக்ரமசிங்கவின் அறிவிப்பு தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற காரணியை சட்டமா அதிபர் அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு வேண்டுகோள் விடுத்தள்ளார். ஆகவே அந்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். அப்போதுதான் இந்த விடயத்தில் தலையீடு செய்த அரசியல்வாதிகள் யார் என்பதும் வெளிப்படும். அதேபோல் அவர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அதனையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

தில்ருக் ஷி விக்ரமசிங்க ஒருபோதும் அலரிமாளிகையில் பணிபுரிந்தவர் அல்ல. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இயங்கியதும் அலரிமாளிகையில் அல்ல. இதன் பணிப்பாளராக ஆனந்த விஜேபால கடமையாற்றினார். இந்த ஆணைக்குழுவின் கலந்துரையாடலுக்காக சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதியாக பிரதி மன்றாடியார் (சொலிசிட்டர் ஜெனரல்) துசிதா முதலிகே கலந்துகொண்டார். ஆகவே ஜனாதிபதி அவர்கள் கூறிய காரணிகள் உண்மைக்கு புறம்பானது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி என்னை இலக்கு வைத்து இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது என்ன நோக்கத்தில் என எனக்கு தெரியாது. என்மீதோ அல்லது அமைச்சர்கள் மீதோ குற்றச்சாட்டுக்கள் இருந்தால் சந்தேக காரணிகள் இருந்தால் அவை குறித்து பேசக்கூடிய உகந்த இடம் அமைச்சரவையாகும். அல்லது தனிப்பட்ட முறையில் கேட்டறிவது உகந்ததாகும். அவ்வாறு இல்லாது வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைப்பது ஜனநாயக ஆட்சியில் அடையாளம் அல்ல என்பதை கூற விரும்புகிறேன். அது பொறுப்புமிக்க ஒருவரின் செயற்பாடும் அல்ல. இதற்கு பின்னர் என்மீது இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தால் அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கும் நேரங்களில் நான் பதில் கூறிக்கொண்டு இருக்க மாட்டேன். ஆகவே உரிய முறையில் எதனையும் கூறுமாறு உரிய நபர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். அரசியல் அமைப்பு பிரகாரமும் ஜனநாயக ரீதியிலும் இதுவே உகந்தது என கூறுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + one =

*