எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணை நாளை!!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை தடைச் செய்ய உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நாளைய தினம் (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இது குறித்த மனு இன்று (24) நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர்கள் இடைக்கால தடை உத்தரவை கோரியுள்ளதால் குறித்த மனுவை மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு முன் பரிசீலிக்க மேற்கூறிய இரு நீதியரசர்களும் தீர்மானித்தனர்.
இதற்கமைய நாளைய தினம் மூவரடங்கிய நீதியரசர்கள் அடங்கிய குழு முன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
எல்பிட்டியவில் வசிக்கும் ஹெசான் நயனஜித் உள்ளிட்ட மூன்று வாக்களர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய உள்ளிட்ட ஆணைக்குழுவின் ஏனைய நான்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
தேர்தல்கள் ஆணையகத்தின் கூட்டத்தில் எல்பிட்டி பிரதேச சபை தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படவில்லை என மனுதாரர்கள் கூறியுள்ளனர்.
எனவே திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கு எதிரானது என மனுதார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், 2017 வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய மீண்டும் தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு விரோதமானது எனவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே தேர்தல்கள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை சூன்யமாக்குமாறும் வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலைத் நடத்தாமல் இருக்க இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.