மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் பலி!!

பாலாவி, புழுதிவயல் பிரதேசத்தில் நேற்று (29) மாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாலாவி, புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த முகம்மது சிராஜ் (வயது 37) எனும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.
நேற்று கடும் மழை பெய்துகொண்டிருந்த போது பாலாவி புழுதிவயல் பகுதியைச் சேர்ந்த மூவர், புழுதிவயல் பிரதேசத்தில் உள்ள சிறுகடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே குறித்த நபர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் குறித்த நபரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரின் ஜனாஸா, புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணை என்பனவற்றின் பின்னர் மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட திடீர் மரணம் எனத் தீர்ப்பு வழங்கி ஜனாஸாவை இன்று (30) அவரது மனைவிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம், கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் குறிப்பிட்டார்.
அத்துடன் கடும் மழை, இடி, மின்னல் ஏற்படும் காலங்களில் இவ்வாறு கடலுக்குச் செல்வதை மீனவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் புத்தளம், கற்பிட்டி பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் கேட்டுக்கொண்டார்.