;
Athirady Tamil News

காய்ச்சல் வருது…கவனம் ப்ளீஸ்!! (மருத்துவம்)

0

Take Care

இன்றைய சூழலில் சீரான தட்பவெப்பம் நிலவுவது கிடையாது. திடீர்திடீரென மழை, வெயில் என மாறிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக, டெங்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் விஸ்வரூபம் எடுத்து உலா வரத் தொடங்குகின்றன. குறிப்பாக, மழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு ஜுரம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. இதன் பின்னர் எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைச் சொல்கிறார் பொதுநல மருத்துவர் செல்வி.

முதலில் டெங்கு பற்றி சில விஷயங்களை நினைவுகொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தினால்தான் டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிற Aedes Egepti கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகின்றன. எனவே, குடியிருப்பு பகுதிகளிலும், அதைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். நீர்த்தொட்டி, பால்கனி, மொட்டை மாடி மற்றும் பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் சின்னசின்ன தட்டுக்கள், பழைய டயர்கள், தேவையில்லை என தூக்கி எறியப்படும் கொட்டாங்குச்சி போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை இவ்விடங்களில் நீர் தேங்கினால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அகற்றிவிடுவது பாதுகாப்பானது. ஏனென்றால், இவ்வாறு தண்ணீர் தேங்குவது நமக்குப் பெரிதாக தெரியாது. அதைக் கவனிக்காமல் விட்டுவிடுவோம். எனவே, டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்கள் முட்டை இட்டு உற்பத்தி ஆவதைத் தடுக்க வேண்டும். மேலும்,. மாநகராட்சியினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமலும் இருப்பதும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதும் அவசியம். கொசுக்களின் அபாயகரமான கடியில் இருந்து தங்களைக் காப்பாற்றி கொள்வது நல்லது. ஜன்னல்களில் வலை பொருத்த வேண்டும்.

கொசுவர்த்தி சுருள், மேட் போன்றவற்றால் சிலருக்கு ஒவ்வாமை உண்டாகும். அவர்கள் சிறிதளவு க்ரீம் தடவிக் கொள்ளலாம். மேலும், படுக்கையில் கொசுவலை கட்டி பாதுகாப்பாக உறங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் முதலில் மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைகள், பரிசோதனைக்கூடங்கள் மூலமாகவும் அவர்களுக்கு இத்தகவல் அனுப்பப்படும். அவர்கள் உடனடியாக அப்பகுதியில் கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையில், கொசு மருந்து அடித்தல், நீர்த்தொட்டி, கிணறு ஆகியவற்றில் மருந்து ஊற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர்.

காலநிலை திடீரென மாறும்போது சாதாரண வைரஸ் காய்ச்சலும் இருக்கும். டெங்கு நோயும் வரும். முன்னது, சளியோடு 2,3 நாள் நீடிக்கும். தீவிர காய்ச்சல், அதிகமான தலைவலி மற்றும் முதுகு வலி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் போன்றவை இரண்டு நாளுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு நோய்க்கான பரிசோதனைகள், ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள்(Platelet) எந்த அளவுக்கு உள்ளது என்பதை மருத்துவர்கள் கவனிப்பார்கள். தட்பவெப்பம் அடிக்கடி மாறும் சூழலில் எலிக்காய்ச்சல்(Leptospirosis) பரவ வாய்ப்புகள் அதிகம்.

குறிப்பாக மழைநீரில் கலக்கும் இதனுடைய சிறுநீர், நம்முடைய கால்களில் உள்ள சின்னச்சின்ன வெடிப்புகள் வழியாக உடலினுள் செல்வதால் எலிக்காய்ச்சல் வரும். எனவே, வெளி இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டால் ஆன்டிபயாட்டிக் கொடுக்கலாம். மேலும், சுத்தமான குடிநீரை அருந்த வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். ஐஸ் சேர்த்த ஜூஸ், ஐஸ்க்ரீம் முதலானவற்றைத் தவிர்ப்பது நல்லது.

இத்தகைய நோய்களால், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு உடலில் இருந்து நீர்ச்சத்து அதிகம் வெளியேறும். அதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் இளநீர், மோர் போன்ற நீர் ஆகாரங்களை நிறைய உட்கொள்ள வேண்டும். சீதோஷ்ண நிலை திடீரென மாற்றம் அடையும்போது உணவு விஷயத்தில் எந்த அளவிற்குக் கவனமாக இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு உடை விஷயத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். கொளுத்தும் வெயில் என்றால், குடையும், உடலை உறைய வைக்கும் மழை, பனி என்றால் கம்பளி ஆடைகளையும் பயன்படுத்த வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*