;
Athirady Tamil News

தேர்தலை பகிஷ்கரிப்பதே தமது கட்சியின் நிலைப்பாடு – கஜேந்திரகுமார்!!

0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் தொடர்பில் எந்த உத்தரவாதத்தையும் தர தயாராக இல்லாததால், தேர்தலை பகிஷ்கரிப்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இன்று (9) யாழிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, தம்மை கோட்டாபய ஆதரவாளர்கள் என பொய் பிரச்சாரம் செய்பவர்கள், ஐ.தே.க ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகாவை ஆதரித்த இவர்கள், கோட்டாபயவிற்கும், சரத் பொன்சேகாவிற்குமிடையில் உள்ள வித்தியாசத்தை தெரிவிக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும், ஜேவிபியின் வேட்பாளரும் தங்களுடைய நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி விட்டனர். அவர்களின் கருத்துககளை கவனித்தால், மூவரிடமும் பொதுநிலைப்பாடு உள்ளது. அதாவது, இலங்கை சிங்கள பௌத்த நாடு என்றும், அதைவிட குறிப்பாக ஐ.தே.கவும், பெரமுனவும் இலங்கை ஒற்றையாட்சி நாடென்றும், அதை பலப்படுத்தவதே நோக்கமென்றும் தெளிவாக கூறியுள்ளனர்.

தமிழர்களிற்கு எதிராக நடந்த இனப்படுகொலை யுத்தம், அவர்களை பொறுத்தவரை நாட்டை காப்பாற்றிய யுத்தமென்றும், அதில் போரிட்டவர்களை தேசிய வீரர்கள் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதென்றும் தெளிவாக கூறியுள்ளனர்.

ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ் தேசம் அங்கீகரித்த சமஷ்டி தீர்வுதான் எமது மகக்ளை பாதுகாப்பதற்கு வழி. முள்ளிவாய்க்கால் போன்ற இனவழிப்பு செயல்கள் இனியும் நடக்காமலிருக்க, நடந்த சம்பவங்களிற்கு பொறுப்புக்கூறல் அவசியம். இதுதான், எதிர்காலத்தில் அப்படியான செயல்களில் ஈடுபடுபவர்களிற்கு எச்சரிக்கையாக இருக்கும்.

இந்த இரண்டிலும் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்ய முடியாது.

ஆனால் இந்த சிங்கள வேட்பாளர்கள் இருவரும் இதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். அவரகள் எந்த ஒப்பந்தங்களையும் செய்ய தயாராக இல்லையென்றும் தெரிவித்து விட்டனர். இனிமேல் இந்த தேர்தலில் தமிழ் மக்கள் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் தமிழ் மக்களின்ந லன்கள் என பார்ப்பதென்றால், இந்த தேர்தலில் எமக்கு ஒரு அக்கறையும் இருக்காது. எனெனில் இது எமக்கான தேர்தல் அல்ல.

ஆகவே, எமது கட்சியின் நிலைப்பாடு, தேர்தலை பகிஸ்கரிப்பதை விட வேறு வழி கிடையாது.

ஆனால் வேட்பாளர்களிற்கிடையில் கடும் போட்டி நடக்கும் போது, இந்த பகிஷ்கரிப்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். சிங்கள வாக்குகளிற்கிடையில் கடும் போட்டி நிலவி, வெற்றி பெறுவதற்கு தமிழ் வாக்குகள் அவசியமென்றால், நாங்கள் பகிஷ்கரிப்பை கைவிடுவதென்றால், தமிழ் மக்களின் அடிப்படை, அன்றாட பிரச்சனைகளை உள்ளடக்கிய எழுத்துமூலமான நிலைப்பாட்டை தயாரித்துள்ளோம்.

எமது அமைப்பை பொறுத்தவரை வேட்பாளர்களில் நம்பிக்கை கொள்ளவில்லை. தேர்தலிற்காக எதையும் சொல்வார்கள். 70 வருடமாக பலதையும் சொல்லியும் ஏமாற்றியதுதான் எமது அனுபவம். சஜித்திற்கு பின்னாலுள்ள மேற்குலக சக்திகள், கோட்டாபயவின் பின்னாலுள்ள சீனா போன்ற சக்திகள்தான் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அந்த வல்லரசுகள் இதில் வாக்குறுதியளிக்க வேண்டும். அப்படியில்லாமல் மக்களை ஏமாற்ற நாம் தயாராக இல்லை.

இதேவேளை ஐக்கியதேசியக் கட்சியை விரும்புகின்றவர்கள் கோட்டாபய ராஜபக்சவின் பின்னாலுள்ள சீனாத் தரப்புக்களை தோற்றகடிக்க விரும்புகின்ற தரப்புகளோ நாங்கள் பகிஷ்கரிப்பு எனஅறிவித்தால் கோட்டாபய ராஜபக்சவை வெல்ல வைப்பதுதான் நோக்கம் என்ற கருத்துருவாக்கம் செய்ய முற்படுகின்றார்கள்.
போரை நடாத்தி தமிழ் மக்களை அழித்த கோட்டாபய ராஜபக்சவிற்கு நாங்கள் ஆதரவு என்று கடந்த 10 வருடமாக சொல்லி வந்த பொய்ப்பிரச்சாரத்தை கூறுவதற்கு முற்படுகின்றார்கள். எங்களுடைய மக்கள் ஆழமாக யோசிக்க வேண்டும். தமிழ் ம்ககளைப் பொறுத்தவரையில் இரு வேட்பாளர்கள் மத்தியில் வேறுபாடு இருக்காது.

தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கின்றபோது போர் நிறுத்த உடன்பாட்டை கைக்சாத்திட்டவேளை இலங்கையில் முப்படைகள் மூன்று மடங்கு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பலப்படுத்தல் மேற்கு நாடுகளினால் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தகாலத்தில் தான் நடந்தது.

ஆக ஒருபுறம் போர்நிறுத்த உடன்படிக்கை மறுபுறம் முப்படையினரின் பலப்படுத்தல் என அவர்கள் தமது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். இதே கட்சிதான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணாவைப் பிரித்தது. போரை வெற்றிகரமாக கொண்டு சென்றதும் இந்தத்தரப்பே. இது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

போர் முடிந்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத் பென்சேகா போட்டியிட்டார்கள். அன்று சரத் பென்சேகாவுக்கு ஆதரவளித்தவர்கள் இன்று கோட்டாபயவுக்கு நாங்கள் ஆதரவு அளிப்பதாகக் கூறுகின்றார்கள். எங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கூறுகின்றவர்கள் கோட்டாபயவுக்குக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை எங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இதனைத் தெளிவுபடுத்தாது குற்றம் சாட்டுவது மக்களை தவறாக வழிநடாத்தி திசைதிருப்புவதற்காக கூறுகின்ற போலிக்குற்றச்சாட்டாகவே இதை நாம் பார்க்கின்றோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*