;
Athirady Tamil News

எல்லா கட்டிகளும் புற்றுநோய் அல்ல! (மருத்துவம்)

0

உடலில் புற்றுநோய்க் கட்டி ஏற்பட்டிருப்பதைக் கூட உணராமல் இருக்கும் அப்பாவிகள் முதல் வகை. கடந்த இதழில் நாம் பார்த்த அந்த ஆசிரியை இதற்கு சரியான உதாரணம். இரண்டாவது வகையினர் விழிப்புணர்வு கொண்டவர்கள். உடலில் எந்தக் கட்டி உருவானாலும் உஷாராகி மருத்துவர்களிடம் ஓடி வருகிறவர்கள்.

அன்றைய தினம் என்னுடைய ‘ஓ.பி.’யில் முகம் முழுக்க வியர்வையும் அச்சமும் கலந்து இறுக்கமாக அமர்ந்திருந்தனர் நடுத்தர வயது அம்மாவும் கல்லூரியில் படிக்கும் மகளும். இரண்டு பேருமே எனக்கு நெருங்கிய உறவினர்கள்தான். எனவே, நான் சகஜமாக, ‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். வலது மார்பில் சிறிய கட்டி இருக்கிறது’ என்றார் மகள் மிகுந்த தயக்கத்துடன். எப்போதிலிருந்து இருக்கிறது?’ – என் தொழில் முறைப்படி கேட்கத் தொடங்கினேன். சில மாதங்களாக!’ என்றார் பதிலுக்கு. வலிக்கிறதா? என்று கேள்விக்கு ‘இல்லை’ என்றார்.

‘பரிசோதிக்க வேண்டுமே!’ என்றேன். ஏற்கெனவே ஒரு பெண் மருத்துவரைப் பார்த்ததையும், சில பரிசோதனைப் படங்களையும் காண்பித்தார். அந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் அவருக்கு ‘ஃபைப்ரோ அடினோமா’ (Fibroadenoma) என்னும் கட்டி இருப்பதை ‘முத்திரை’ குத்தின. சென்ற இதழில் நான் சொன்ன ஆசிரியைக்கு நேர் எதிர் இவர். கட்டி என்றதும் பயந்துவிட்டார். செகண்ட் ஒப்பீனியனுக்காக என்னிடம் வந்திருக்கிறார். இந்தக் கட்டியால் எந்த ஆபத்தும் இல்லை. இது மிகச் சிறிதாகவே இருக்கிறது. இதை அகற்ற வேண்டிய அவசியமும் இல்லை’ என்றேன்.

போகப்போக இது புற்றுநோயாக மாறிவிடலாம் அல்லவா?’ – அம்மாவின் மனம் முழுக்க புற்றுநோய் பயம் அப்பியிருந்தது அவர் வார்த்தைகளில் தெரிந்தது. ‘இல்லை. இது புற்றுநோயாக மாறாது’ – நான் உறுதியாகச் சொன்னதும்தான் இருவருக்கும் உயிரே வந்தது. ‘இதற்கு என்ன சிகிச்சை, டாக்டர்?’ என்று மகள் கேட்டார். ‘வெயிட் அண்ட் வாட்ச்… தொடர்ந்து கவனிப்போம். தேவைப்படும்போது சிகிச்சை அளிப்போம். அதுவரை கட்டி இருப்பதையே மறந்துவிட்டு படிப்பைக் கவனி!’ என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினேன். 6 ஆண்டுகள் ஓடிவிட்டன.

அவர் வேலையிலும் சேர்ந்துவிட்டார்; திருமணமும் ஆகிவிட்டது. அவர் கர்ப்பமாக உள்ள செய்தியை என்னிடம் சொல்ல சமீபத்தில் அவருடைய அம்மா வந்திருந்தார். மகளின் மார்பகக் கட்டி குறித்தும் பேச்சு வந்தது. ‘கட்டியில் எந்தவொரு மாற்றமும் இல்லை’ என்று பெண் மருத்துவர் கூறியதாக அந்த அம்மா சொன்னார். அவருடைய முகத்தில் புற்றுநோய் குறித்த பழைய பயம் துப்புரவாக இல்லை. வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதுபோல், எல்லாக் கட்டிகளும் புற்றுக்கட்டிகள் இல்லை என்பதற்கு இந்த உண்மை நிகழ்வு ஓர் உதாரணம்.

கட்டிகளின் வகைகள்

சாதாரண கட்டி(Benign tumor), புற்றுநோய்க் கட்டி(Malignant tumor) என்று கட்டிகளில் இரண்டு வகை. சாதாரண கட்டியில் செல்கள் வழக்கத்துக்கு அதிகமாக வளர்ச்சி பெற்றிருக்கும். ஆனால், அவை இயல்பான செல்களாகவே இருக்கும். உறை போட்ட கத்திபோல் உடலில் அந்தக் கட்டி உறங்கிக் கொண்டிருக்கும். அருகில் உள்ள உறுப்புகளையோ திசுக்களையோ அது எட்டிக்கூடப் பார்க்காது. தேவையில்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும் ஆறாவது விரல் மாதிரி இதனால் ஒரு பலனும் இருக்காது. ஆனால், புற்றுக்கட்டி அப்படியில்லை.

தானும் கெட்டு, தனக்கு அருகில் உள்ள/அடுத்து உள்ள உறுப்புகளையும் கெடுத்து நம் ஒட்டு மொத்த ஆரோக்கியத்துக்கே வேட்டு வைக்கும். ஆகவே, எந்த ஒரு கட்டியாக இருந்தாலும் அதை ஆரம்பத்திலேயே கவனித்து, எந்த வகை கட்டி என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சாதாரண கட்டி என்றால் அதற்கு சிகிச்சை தேவைப்படாது. கட்டி பெரிதாகிறது; உடல் அழகைக் கெடுக்கிறது; ரத்தக்குழாயை அழுத்துகிறது; நரம்பின் கழுத்தை நெருக்குகிறது என்றால் சிகிச்சை தேவைப்படும். மற்றபடி அதை மறந்து விடுவது நல்லது. புற்றுநோய்க் கட்டி என்றால் அதற்குண்டான சிகிச்சையை உடனடியாக ஆரம்பித்துவிட வேண்டும். யோசிக்கவே கூடாது. இதுதான் கட்டி உள்ளவர்களுக்கான அடிப்படைப் பாடம்.

ஃபைப்ரோ அடினோமா’ கட்டி!

இளம் பெண்கள் பலருக்கும் ஏற்படும் ஒருவகை மார்பகக் கட்டி, ‘ஃபைப்ரோ அடினோமா’. இது ஏற்படுவதற்கான காரணம் இன்னும் புலப்படவில்லை. ஈஸ்ட்ரோஜென் போன்ற சில இனப்பெருக்க ஹார்மோன்களின் ‘வினையாகும் விளையாட்டாக’ இருக்கலாம் என்று ஊகிக்கவே முடிகிறது; உறுதியில்லை. இளம் வயதில் தொடர்ந்து கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு இது ஒரு ‘போனஸாக’ ஏற்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. ஆனாலும், கருத்தடை மாத்திரைதான் அதற்குக் காரணம் என்று கை காட்ட முடியவில்லை. இந்தக் கட்டி ஒரு பக்க மார்பகத்திலும் வரலாம்; ஒரே சமயத்தில் இரண்டு பக்கங்களிலும் வரலாம்.

ஒரே பக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட சிறிய கட்டிகளும் தோன்றலாம். கட்டியைத் தொட்டால் ஒரு திராட்சைப் பழத்தைத் தொடுவது மாதிரியோ, ரப்பர் பந்தைத் தொடுவது மாதிரியோ உணர்வு இருக்கும்; ஆனால், வலிக்காது. கொஞ்சம் அழுத்தினால் தோலுக்கு அடியில் கோலிக் குண்டு நகர்வதுபோல் அது நகரும். மருத்துவரிடம் சென்றால் மார்பகத்தைப் பரிசோதித்துவிட்டு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்(Ultra sound scan) ஆய்வுக்கு அனுப்புவார். அதில் ‘ஃபைப்ரோ அடினோமா’ கட்டி இருப்பது உறுதியானால், அத்தோடு முதல் கட்டப் பரிசோதனையை நிறுத்திக்கொள்வார். கட்டியில் ஏதேனும் சந்தேகமென்றால், ‘மேமோகிராபி’க்குப்(Mammography) பரிந்துரைப்பார்.

மேமோகிராம்(Mammogram) என்று அழைக்கப்படும் இந்தப் பரிசோதனைப் படம் மார்பகத்தில் மிகச் சிறிய கட்டி இருந்தாலும் தெளிவாகக் காண்பித்துவிடும். பொதுவாக, கட்டியின் அளவு 3 செ.மீ.க்குக் குறைவாக இருக்குமானால், பயாப்சி(Biopsy) பரிசோதனை தேவையில்லை; தொடர் கவனிப்பு இருந்தாலே போதும். கட்டி 3 செ.மீ.க்கு அதிகமாக இருந்தால், ‘பயாப்சி’ செய்யப்படும். சிறிய ‘வெட்டறுவை’(Excision biopsy) முறையில் கட்டியிலிருந்து சிறிதளவு திசுவை நேரடியாக அகற்றியோ, ஊசி உறிஞ்சல்(Fine-needle aspiration) முறையில், சிறிய ஊசியை மார்பகத்தில் செலுத்தி, திசுவை உறிஞ்சி எடுத்தோ, ஆய்வுக்கு அனுப்புவார்கள்.

அங்கு கட்டியின் உண்மையான நிலைமை தெரிந்துவிடும். சாதாரண கட்டியா, புற்றுக்கட்டியா என்பது உறுதியாகிவிடும். கட்டியின் செல் வகையும் புரிந்துவிடும். அதை வைத்து சிகிச்சையைச் சொல்வார்கள். பரம்பரையில் புற்றுநோய் சரித்திரம் இருக்கும் பட்சத்தில் 35 வயதைத் தாண்டிய பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி இருக்குமானால் இந்தப் பரிசோதனையை அவர்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டும். ‘ஃபைப்ரோ அடினோமா’ கட்டிக்கு சிகிச்சை எதுவும் தேவையில்லை. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொண்டு, கட்டியின் நிலைமையைத் தெரிந்துகொண்டால் போதும். பெரும்பாலும் ஒரு கட்டத்தில் அது தானாகவே சுருங்கிவிடும்.

மாதவிலக்கு காலத்தில் ஒரு சிலருக்கு இந்தக் கட்டி வலிப்பதுண்டு. அப்போது மருத்துவரின் ஆலோசனைப்படி வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். கட்டியில் அழற்சி ஏற்பட்டாலும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும். கட்டி பெரிதாகிறது என்றாலோ, கட்டியின் அளவு 5 செ.மீ.க்கு அதிகமாக இருந்தாலோ அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றுவது உண்டு. அதுகூட பயனாளியானவர் திருமணத்துக்கும் தாம்பத்தியத்துக்கும் மனதளவில் தயாராக வேண்டுமே என்ற யோசனையில்தான் அகற்றப்படுகிறது. இப்போது அறுவை சிகிச்சைக்குப் பதிலாக, ‘கிரையோ அப்லேஷன்’ (Cryoablation) முறையில் அதைக் குளிரூட்டிச் சுருங்க வைக்கும் சிகிச்சையும் உள்ளது. பயனாளியின் தேவைக்கு ஏற்றாற்போல் மருத்துவர் இந்த சிகிச்சையைத் தேர்வு செய்வார்.

புற்றுநோயை ஜெயித்தவர்!

மனீஷா கொய்ராலா இந்தியாவில் புகழ்பெற்ற நடிகை. 2012ல் அவர் திரைத்துறையில் புகழின் உச்சியில் இருந்தபோது, அவருக்குச் சோதனையாக ஏற்பட்டது சினைப்பையில் புற்றுநோய்(Ovarian cancer). என்றாலும், அதிலிருந்து முற்றிலுமாக மீண்டு வந்திருக்கிறார். தம்மைப் போலவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு ஊக்கம் தரும் வகையில் Healed: How cancer gave me a new life? எனும் தலைப்பில் புத்தகமாகவும் எழுதியிருக்கிறார். அதில், தனக்கு வந்த நோயை எப்படிக் கடந்து வந்தேன் என்பதை விவரமாகச் சொல்லியிருக்கிறார்.

அதிலிருந்து கொஞ்சம் இங்கே… ‘என் வாழ்வின் அதிர்ச்சி நாட்கள் அவை. எனக்கு சினைப்பையில் புற்றுநோய் வந்தபோது வாழ்க்கையையே புரட்டிப்போட்டதுபோல் இருந்தது. உதவிக்கு ஆட்கள் இல்லை. உறவுகள் எட்டிப்போயிருந்தனர். ஆனால், தலைசிறந்த மருத்துவர்கள் உடனிருந்தனர். ஆசீர்வதிக்கப்பட்ட மருத்துவ உதவிகள் கிடைத்தன. நம்பிக்கை வார்த்தை சொல்ல என் தாயார் இருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நோயை எப்படியும் கடந்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் எனக்குள் அதிகமாக இருந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஒரு நடிகையாக நான் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தேன். வாழ்க்கையின் இரண்டாம் அத்தியாயத்தை வாழ்ந்தே ஆக வேண்டும் என்று நான் நினைத்ததால், எந்தக் கடுமையான சிகிச்சைக்கும் தயார் என்று ஒத்துழைத்தேன். தலைமுடியை இழந்தேன். ‘கீமோதெரபி’ போன்ற சிகிச்சைகளை எடுக்கும்போது, நம் உடலிலும் பல மாற்றங்கள் ஏற்படும். அதையெல்லாம் எதிர்கொள்ள நான் மனதளவில் தயாரானேன். சிகிச்சை முடிந்தபிறகு, என்னைப் பார்த்தால் உடல் மெலிந்த ஓர் எலியன்போல் இருந்தேன். புருவம் கிடையாது. நான் பார்த்துப் பார்த்து ரசித்த அழகு ஒன்றுகூட என்னிடம் இல்லை.

மருத்துவமனையே என் உலகமாகிப்போனது. நான்கு சுவர்கள், ஒரு படுக்கை, என்னைச் சுற்றி எப்போதும் மருந்துக் குழாய்கள். உடல் தொய்ந்து போயிருந்தது. ஆனாலும், மனது மட்டும் திடகாத்திரமாகவே இருந்தது. நமக்கான உலகம் காத்திருக்கிறது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆன்மாவைப் பலப்படுத்திக்கொண்டே வந்ததால், உடலுக்குத் தெம்பு கிடைத்தது. இன்று என் வாழ்க்கையை நான் மீட்டிருக்கிறேன் என்றால், பல்வேறு சோதனைகளையும் கடந்து இன்று நான் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் என் குடும்பத்தினர் எனக்குக் கொடுத்த ஊக்கமும் கைகொடுத்ததுதான்!’

பயப்படாதீங்க…

* சாதாரண கட்டி தொந்தரவு எதுவும் செய்யாது.
* உடலுக்குள் பரவாது.
* தனக்கென ஓர் எல்லையை உருவாக்கியிருக்கும். அதைத் தாண்டாது.
* அருகில் உள்ள உறுப்புகளுக்கு இடைஞ்சல் செய்யாது.
* மிகவும் மெதுவாகவே வளரும்.
* கட்டியில் இருக்கும் செல்கள் இயல்பானதாகவே இருக்கும்.
* பெரும்பாலும் சிகிச்சை தேவைப்படாது.
* அப்படியே சிகிச்சை தேவைப்பட்டாலும் கட்டியை எளிதாக அகற்றிவிடலாம்.
* ஒரு முறை அகற்றப்பட்ட கட்டி மறுபடியும் வளராது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 13 =

*