;
Athirady Tamil News

கணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில்!!

0

2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 4 மாத காலங்களுக்கான அரசாங்க செலவீனங்களுக்காக 1474 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கும் கணக்கு வாக்கெடுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனை நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கவுள்ளார்.

இதற்கு மேலதிகமாக அரசாங்கத்தின் சார்பில் திரட்டப்பட வேண்டிய கடன்தொகை 721 பில்லியன் ரூபாவை விஞ்ஞாததாக இருப்பதற்கும் பாராளுமன்றத்தின் அனுமதி கோரப்படவுள்ளது.

அன்று முற்பகல் 10.30 முதல் 6.30 மணி வரை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன், மறுநாள் (24) திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக முன்னர் முடிவு எடுத்திருந்த போதும் அன்று பாராளுமன்றத்தைக் கூட்டாதிருப்பதற்கும் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் கணக்கு வாக்கெடுப்புக்கு மேலதிகமாக 3 சட்டமூலங்களுக்கான இரண்டாவது மதிப்பீட்டை அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதிச் சட்டமூலம், துறைமுகங்கள் மற்றும் விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள், உற்பத்தி வரிச் சட்டத்தின் கீழான கட்டளை, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் உள்ளிட்டவையும், விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான 6 ஒழுங்கு விதிகள், மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள், நிதிச் சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்கு விதிகளும் அன்று நிறைவேற்றப்படவுள்ளன.

கணக்கு வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன்னர் அன்று முற்பகல் 9 மணிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு கூடி இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தினார்.

கணக்கு வாக்கெடுப்புக்கான விவாதத்துக்கு அதிக நேரத்தை ஒதுக்கும் நோக்கில் 23 ஆம் திகதி ஒதுக்கப்பட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாக்களை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கவும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இணங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 12 =

*