;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விக்கிப்பீடியர்களின் மாநாடு!! (படங்கள்)

0

தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன் ஓர் அங்கமாகப் பொதுமக்களுக்கு அறிவூட்டும் வகையில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து அறிவியல் தமிழ் கருத்தரங்கை விக்கிப்பீடியா குழுமத்தினர் முன்னெடுத்திருந்தனர்.

கடந்த 19.10.2019 சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டபத்தின் ஹம்சியா மகாலில் நடைபெற்ற இந்நிகழ்வு விக்கிப்பீடியா குழுமத்தைச் சேர்ந்த பொறியியலாளர் மு. சிவகோசரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தமிழ்ச்சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையாற்றினார். கு.மிருபா, கு. ஜருணி, கு. யுகர்ணி ஆகியோரது வரவேற்பு நடனம் இடம்பெற்றது. வாழ்நாள் பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர் வாழ்த்துரை வழங்கினார்

தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தொடக்கவுரையாற்றினார். 2003 ஆம் ஆண்டில் தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடக்கிய கட்டடக் கலைஞர் இணுவிலூர் இ.மயூரநாதன் விக்கிப்பீடியா குறித்த அறிமுகவுரையை ஆற்றினார்.

தமிழ் விக்கிப்பீடியாவைத் தொடக்கி வைத்தமைக்காக இ. மயூரநாதன் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் அ. சண்முகதாசினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். இ.மயூரநாதன் ஆனந்த விகடன் சஞ்சிகையால் 2016 ஆம் ஆண்டின் டொப் ரென் மனிதர்களுள் ஒருவராகக் கணிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார் என்பதையும் நிகழ்வில் சுட்டிக் காட்டியிருந்தனர்.

தொடர்ந்து கலந்து கொண்டிருந்த ஆர்வலர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரையாளர்களாகப் பதிவு செய்வதற்கு வழிப்படுத்தப்பட்டனர். பதிவு மேற்கொண்டவர்கள் தமக்கு விரும்பிய துறைகளில் கட்டுரைகளை எழுதலாம் என வழிப்படுத்தப்பட்டனர்.

நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு ஈழத்தவர்களின் பங்களிப்பு என்ற பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் தி.செல்வமனோகரன் சிறப்புரையாற்றினார். தமிழ்ச் சங்கப் பொருளாளர் தி.வேல்நம்பி நிறைவுரையாற்றினார்.

தமிழ் விக்கிப்பீடியா பயநர்களிடையே நடத்திய போட்டிகளில் வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது. பரிசுகளை யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியர் மா. சின்னத்தம்பி வழங்கினார். போட்களில் தமிழகத்தைச் சேர்ந்த பலரே வெற்றி பெற்றிருந்தனர்.

தமிழ் விக்கிப்பீடியாவின் 16 ஆவது ஆண்டு மாநாட்டிற்காக தமிழகம் மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட விக்கிப்பீடியர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*