;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தனிநாயகம் அடிகள் நினைவரங்கம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 20.10.2019 ஞாயிறு மாலை 4 மணிக்கு யாழ். திருமறைக் கலாமன்றக் கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.

தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு தனிநாயகம் அடிகளார் முற்றத்தில் இடம்பெற்ற மலரஞ்சலியுடன் ஆரம்பமாகியது. இதன்போது தனிநாயகம் அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு நிகழ்வின் தலைவர் வண. ஜெறோ செல்வநாயகமும் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் மலர் மாலை அணிவித்து வழிபாடாற்றினர்.

தொடர்ந்து அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், யாழ். மாநகர ஆணையாளர் த. ஜெயசீலன், பல்கலைக்கழக, ஆசிரியகலாசாலை, பாடசாலைகளைச் சார்ந்த மாணவர்கள் மலர் வணக்கம் செலுத்தினர்.

கலையகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்கள் தமிழ்த்தெய்வ வணக்கப் பா இசைத்தனர். திருக்குடும்பக் கன்னியர்மட தேசியப் பாடசாலை மாணவர்கள் பக்கவாத்திய சகிதம் வரவேற்பு நடனம் மேற்கொண்டனர்.
தனித்தமிழ் ஆர்வலரும் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினருமாகிய நா.வை. குமரிவேந்தன் வரவேற்புரை ஆற்றினார்.

தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசன் தொடக்கவுரை ஆற்றினார். சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் துணைவியூர் சி. கேசவன் இயற்கையால் எழிலுறும் இலக்கியங்களும் இலக்கியங்களால் உயிர்ப்புறும் இயற்கையும் என்ற பொருளில் நினைவுப் பேருரை ஆற்றினார்.

சிறப்பு நிகழ்வாக தமிழ்ச்சங்கம் நடத்திய விவாதச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இனியும் இவ்வினம் உய்யும் வழி உண்டு? – இல்லை என நடைபெற்ற இவ்விவாதப் போட்டியில் உண்டு என்ற பொருளில் தேசக் கவி புதுவை இரத்தினதுரை பெயரால் அமைந்த அணி பங்கேற்றது. இதற்கு தொலைக்காட்சி ஊடகவியலாளர் உஷாந்தன் தலைமை தாங்கினார். இல்லை என்ற பொருளில் மகாகவி உருத்திரமூர்த்தி பெயரால் அமைந்த அணி வாதிட்டது. இதற்கு யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி ப. கதிர்தர்சினி தலைமை தாங்கினார்.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சாந்தினி அருளானந்தம், இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் வரணியூர் சிவா, இளைப்பாறிய ஆசிரியர்களான காரை ந. கணேசமூர்த்தி, குழையூரன் ச.மார்க்கண்டு, கலாசார உத்தியோகத்தர் தக்சாயினி செல்வகுமார் ஆகியோர் நடுவர்களாகச் செயற்பட்டனர். போட்டியை தமிழ்ச்சங்கச் செயலர் இ.சர்வேஸ்வரா நெறிப்படுத்தினார்.

போட்டியில் இனியும் இவ்வினம் உய்யும் வழி இல்லை என்று வாதிட்ட அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டு அணிகளுக்குமான வெற்றிக் கேடயங்களை தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர். அ.சண்முகதாஸ், உபதலைவர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், அருட்பணி ஜெறோ செல்வநாயகம், பொருளாளர் பேராசிரியர் தி. வேல்நம்பி, விசேட விருந்தினர்களாகக் கலந்து கொண்ட இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கு.வை.கா. வைத்தீஸ்வரக் குருக்கள், தமிழகத்தின் பிரபல சொற்பொழிவாளர் டாக்டர் வே. சங்கரநாராயணன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

நிகழ்வுகளை தொலைக்காட்சி ஊடகவியலாளர் கலிஸ் தொகுத்து வழங்கினார்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 18 =

*