;
Athirady Tamil News

ஒரு சமயத்தினர் இன்னொரு சமயத்தினரை கட்டுப்படுத்த முடியாது!!

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் நேற்று (22) அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு மெரைன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

இளைஞர்கள், தொழில்சார் நிபுணர்கள், வர்த்தக பிரமுகர்கள், மகளிர் சங்க பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜவிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர். இவர்கள் சமூகம் சார்பான தங்களது கேள்விகளை கேட்டபோது, சஜித் பிரேமதாச உரிய பதில்களை வழங்கினார். இந்நிகழ்வை கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் நெறிப்படுத்தினார்.

கேள்வி: நீங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், முஸ்லிம்களின் பாதுகாப்பு எவ்வாறு உறுதிப்படுத்தப்படும்?

பதில்: நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்போது சகல இனத்தவர்களும் பாரபட்சமற்ற முறையில் பாதுகாக்கப்படுவார்கள். முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்குவ அதில் ஓர் அங்கமாகும். அதேபோல் பொருளாதார பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, அரசியல் பாதுகாப்பு என்பனவும் உள்ளடங்கும்.

நான் ஒரு சிறந்த சிங்கள பௌத்தர். புத்தரின் கோட்பாட்டின் பிரகாரம் சகல உயிரினங்களும் துன்பமில்லாமல் வாழவேண்டும். எந்தவொரு இன பேதத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன். எனவே, இதனடிப்படையில் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் பூரண பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன்.

எமது நாட்டில் எந்தவொரு இனத்தவருக்கோ அல்லது மதத்தினருக்கோ அடிப்படைவாதத்தில் செயற்பட இடமளிக்க மாட்டேன் என்பதை விசேடமாக கூறவிரும்புகின்றேன். இனவாதம், மதவாதம் கடைப்பிடிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன்.

நான் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவது இந்த நாட்டுக்கு தீமூட்டுவதற்காக அல்ல. நாட்டை பாதுகாக்கவும், முன்னேற்றவும், அபிவிருத்தி செய்வதற்குமே நான் ஜனாதிபதியாக வர விரும்புகிறேன். இந்தப் பயணத்தில் யாரும் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. எல்லோரும் பாதுகாக்கப்படுவார்கள்.

கேள்வி: முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் மற்றுமொரு முக்கிய பிரச்சினைதான் முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம். எதிர்தரப்பு வேட்பாளருக்கு ஒத்துழைப்பு நல்கும் குழுவினர் இதற்கு விரோதமாக செயற்படுகின்றனர். இதுதொடர்பான உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்: எமது நாட்டிலுள்ள மதம் மற்றும் சமயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதுடன், ஏனைய மதங்களையும் இனங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்காள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மதங்களும் தனித்தனி கலாசாரத்தைக் கொண்டவை. அவற்றில் நாம் தலையீடு செய்யப் போவதில்லை.

இந்துக்கள் கோவில்களில் எவ்வாறு வழிபட வேண்டும், முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் எவ்வாறு வழிபட வேண்டும், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் எவ்வாறு வழிபட வேண்டுமென்று நாம் கூறவேண்டிய அவசியமில்லை. அதேபோல் பௌத்த வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சென்று அவர்கள் எவ்வாறு வணக்க வழிபாடுகளை செய்யவேண்டும் என்று எவராலும் ஆலோசனை கூறமுடியாது.

எனவே, அவை எல்லா மதங்களின் சம்பிரதாயங்களையும் பாதுகாப்பது எனது கடமை. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிப்பதுடன், பௌத்த மதம் கூறியுள்ள பிரகாரம் நாம் ஏனைய சமயங்களுக்கும் இடமளிக்க வேண்டும். நாங்கள் பௌத்த சமயம் கூறும் பிரகாரத்தின் படியே செயற்பட விரும்புகிறோம். அதேவேளை, பௌத்த மதத்தை திரிபுபடுத்துபவர்கள் தொடர்பில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

கேள்வி: 1990ஆம் ஆண்டில் வடக்கு முஸ்லிம்கள் பயங்கரவாத நடவடிக்கையின் காரணமாக இடம்பெயர்ந்தனர். அவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பில் நீங்கள் ஜனாதிபதியான பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்: யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது எனக்கு முக்கியமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிமா, இந்துவா, பௌத்தரா, கிறிஸ்தவரா என்பது முக்கியமல்ல. அவர்களின் காணி உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதுதான் என்னுடைய கொள்கையாகும்.

கேள்வி: வீடமைப்பு அதிகார சபையில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கு போதிய இடமளிக்கப்படவில்லை என்றொரு குற்றச்சாட்டு முஸ்லிம் இளைஙர்கள் மத்தியில் இருக்கிறது. நீங்கள் ஜனாதிபதியான பின்னர் இதனை நிவர்த்தி செய்ய என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

பதில்: வீடமைப்பு அதிகார சபையில் தொழில் வழங்கப்படும்போது, ஒரு வழிமுறைக்கமைய ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் பெறப்பட்ட இளைஞர், யுவதிகளின் விண்ணப்பங்களுக்கு ஏற்றவாறே தொழில் வழங்கியுள்ளேன். நாடு முழுவதிலுமுள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை அடிப்படையாக வைத்து, இரண்டு முக்கிய திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறேன்.

சர்வதேச மட்டத்தில் தொழில்நுட்பவியல் பயிற்சிகளை வழங்குவதற்கான தொழில்நுட்ப கல்லூரிகளை உருவாக்கி, அவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பம், கனணி தொழில்நுட்பம், இலத்திரனியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் முதலான பாடத்திட்டங்களை செயற்படுத்துவேன். மேலும் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கான பாடத்திட்டங்களையும் அறிமுகம் செய்வேன்.

இதன்மூலம் கொழும்பிலுள்ள வசதிபடைத்த இளைஞர், யுவதிகளுக்கு கிடைக்கின்ற அதே கல்வியை நாடு முழுவதிலுமுள்ள இளைஞர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வழியேற்படுத்தப்படும். அதேபோல் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும். அதன்மூலம் தங்களது ஊர்களிலிருந்து தமக்கான தொழிலை பெற்றுக்கொள்ள வழியேற்படும்.

கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின் காணிகள் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வன பரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள்?

பதில்: நான் உண்மையை பேசவேண்டும். நாட்டில் இருக்கின்ற அனைத்து சமூகத்தவரும் பின்பற்றக்கூடிய பாரம்பரிய கலாசாரம் சார்ந்த புராதன தொல்பொருள் நிலங்கள், அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் பகுதிகள் ஆகியவற்றை பாதுகாப்பது எமது கடமையாகும்.

வடக்கு, கிழக்கில் மக்களால் பல வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த காணிகள் வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்டதாக அறிகிறேன். அதன் உண்மை தன்மை குறித்து நிச்சயமாக ஆராய்வேன். அவை தேவையில்லாமல் அபகரிக்கப்பட்டிருந்தால் அவற்றை உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பேன்.

உண்மையில் அந்தக் காணிகளில் அரசாங்கத்தின் தேவைப்பாடுகள் இருப்பின், அதற்கான மாற்றுக் காணிகளை அல்லது அதற்குரிய நஷ்டயீடுத் தொகையை உரிய காணியின் உரிமையாளரிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

இவ்விடயத்தில் அனைத்து இனங்களையும் கருத்திற்கொண்டு, யாரையும் பாதிக்காத வகையில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்வேன். மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தி அவர்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கே முதலில் முக்கியத்துவம் கொடுப்பேன். வளங்கள் நீடித்து நிலைபெறும் செயற்பாட்டுக்கு கவனம் செலுத்துவேன்.

கேள்வி: புத்தளம், அருவக்காலு பிரதேசத்தில் குப்பை கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா? ஒரு மாவட்டத்திலுள்ள குப்பைகளை இன்னொரு மாவட்டத்தில் கொண்டுபோய் கொட்டுவதற்கு என்ன தீர்வு?

பதில்: இப்பிரச்சினையை தீர்த்து தருவதாக நான் புத்தளம் மக்களிடம் வாக்குறுதியளித்திருக்கிறேன். இந்த விடயத்தில் நான் தனிப்பட்ட கவனம் செலுத்துவேன். நான் அமைச்சராக இருப்பதற்கும் புத்தளம் மக்களும் ஒரு காரணமாகும். அதை நான் மறக்கவில்லை. ஆகவே, இம்மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கு நான் விரைவில் தீர்வை பெற்றுத் தருவேன்.

கேள்வி: மிகவும் வறியவர்களே விவசாயம் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உங்களிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கின்றதா?

பதில்: எவ்விதமான இன, மத பாகுபாடு பார்க்காமல், நாட்டில் விவசாயம் செய்யக்கூடிய அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பசளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று மீனவர்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளோம்.

கேள்வி: தனி நபர்களின் விருப்பத்திற்கமைய தேர்தல் முறைமைகளில் மாற்றம் ஏற்படுமா? இதனால் முஸ்லிம் பிரதேசங்களுக்கு பாதிப்பு வருமா?

பதில்: இதற்கு முன்னர் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவர முற்பட்டு எல்லாமே வீணாகப்போனதை நாமறிவோம். தற்போது நடைமுறையிலுள்ள பழைய தேர்தல் முறை நீடிப்பதே சிறந்தது என நான் நினைக்கிறேன். இருப்பினும், இத்தேர்தல் முறையிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அவற்றை நாங்கள் நிவர்த்திசெய்ய வேண்டும்.

கேள்வி: வரி அறவீட்டில் முஸ்லிம் வியாபாரிகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு உங்களது தீர்வு என்ன?

பதில்: நாட்டின் வரி அறவீடு தொடர்பில் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறேன். தற்போதுள்ள வரி முறைமை வியாபாரிகளை நஷ்டத்தை அளிப்பதாகவுள்ளது. இம்முறையின் கீழ் வியாபாரிகளினால் இலாபத்தை ஈட்டுவதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். ‘இலகு வரி முறை’ என்றொரு புதிய திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கிறேன். அது மட்டுமல்லாது புதிதாக வளர்ந்துவரும் வியாபாரிகள் வியாபாரமொன்றை தொடங்குவதற்கு தேவையான வசதிவாய்ப்புகளை அமைத்துக் கொடுப்பேன்.

கேள்வி: பெரும்பான்மை மக்கள் செறிந்து வாழும் இடங்களிலுள்ள முஸ்லிம்களை இலக்குவைத்து சில கும்பங்கள் குழப்பங்கள் விளைவிக்கின்றனர். இது உங்களது ஆட்சிமாற்றத்தில் தாக்கம் செலுத்துமா?

பதில்: யாரும் பயப்படத் தேவையில்லை. நாங்கள் புதியதொரு பயணத்தை தொடங்கவுள்ளோம். அதில் இவ்வாறான சதித் திட்டங்களுக்கும் குழப்பங்களும் விளைவிப்போர் இருக்கமாட்டார்கள். இந்த தேர்தலில் விளையாடுவதற்கு யாருக்கும் இடமளிக்க மாட்டோம். எவ்விதமான மிரட்டல்களும் உருட்டல்களும் பலிக்கப் போவதில்லை. மக்கள் வாக்களிக்கும் உரிமையை தவறவிடுவதற்கு இடமளிக்க மாட்டோம். தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் வழங்குவோம்.

கேள்வி: இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கேட்கப்படுகிறது. முதலில் மாகாண சபை தேர்தல் நடக்குமா? அல்லது பாராளுமன்ற தேர்தல் நடக்குமா?

பதில்: இல்லை. பாராளுமன்றத் தேர்தலை நடாத்திவிட்டுத்தான் நாங்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 14 =

*