;
Athirady Tamil News

சஜித்தின் தேர்தல் அறிக்கையை நம்பி எவ்வாறு ஆதரவளிப்பது – விக்னேஸ்வரன்!!

0

“புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் அறிக்கை ஒன்றை அதுவும் கரவாகச் சிங்கள பிரதிகளிலும் ஆங்கில, தமிழ்ப் பிரதிகளிலும் வித்தியாசங்களை உட்புகுத்தியிருக்கும் ஒன்றை நம்பி எவ்வாறு எமது மக்கள் ஆதரவு அளிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது. எனவே எமது கடந்தகால வரலாறு மற்றும் தற்போதுள்ள அக,புற சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கருதுகின்றோம். யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தேர்வாகும்”

இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் இன்று மாலை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த ஊடகவியலாளரின் கேள்விக்கான பதில் என்ற அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:

புதிய ஜனநாயகமுன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருடைய தேர்தல் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா?

தென்னிலங்கையின் இரு பிரதான கூட்டுக் கட்சிகளின் சிங்கள வேட்பாளர்கள் எமது 13 அம்சக் கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து 5 கட்சிகளுடன் கூட்டாகப் பேசுவதற்கு தயாராக இருக்கவில்லை என்பதுடன் தேர்தல் அறிக்கைகளை மாத்திரமே வெளியிட்டுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கையில் பொருளாதார விடயங்கள் குறித்தே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றிற்குத் தீர்வு காணும் போது மற்றைய பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்றதொனி அவரின் தேர்தல் அறிக்கையில் வெளிப்பட்டிருந்ததை அவதானிக்க முடிகிறது. இனப் பிரச்சினை பற்றி எந்த ஒரு தீர்வையும் முன்வைக்க அவர் முனையவில்லை.

இதேவேளை சஜித் பிரேமதாச தனது தேர்தல் அறிக்கையில் பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன்னர் அதேபகுதியில் பக்கம் 16ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. “நாம் எம் தாய் நாட்டின் ஐக்கியம்,பிராந்திய ஒருமைப்பாடு, இறைமை மற்றும் அரசியற் சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாப்போம். அரச முடிவெடுப்பை மக்களுக்கு நெருக்கமாக கொண்டுவருவோம்”என்று. இது சிங்களப் பிரதியில் பக்கம் 16 ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“අපගෙමවිබ්මේඒකීයත්වයභෞමිකඅඛණ්ඩතාවස්වෛරීභාවයසහදේශපාලනස්වාධීනත්වයඅපආරක්ෂාකරන්නෙමු. රජයේතීරණගානීමඅපිජනතාවටසමීපකරවන්නෙමු. නොබෙදුණුහාවෙන්කළනොහැකිශ්රීලංකාවක්තුළඋපරිමබලයබෙදාහැරීමක්ක්රියාත්මකකෙරේ”

ஆங்கிலத்திலும் தமிழிலும் ஐக்கியம் (Unity)என்றசொல் பாவிக்கப்பட சிங்களத்தில் “එකීයත්වය” என்றசொல் பாவிக்கப்பட்டுள்ளது. “ஏகீயத்வய”என்ற சொல் ஒற்றைத் தன்மையை வெளிக்காட்டுகின்றது. அதாவது அச்சொல் ஒற்றையாட்சிக்கு வழியமைக்கும் ஒருசொல். உண்மையில் Unity ஐக்கியம் என்ற சொற்களுக்குப் பாவிக்கப்பட வேண்டிய சிங்களச் சொல் ඒක්සත්වය (எக்சத்வய) என்பது. அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சி“எக்சத் ஜாதிக பக்ஷய”என்று அழைக்கப்படுகிறது. “ஏகிய ஜாதிக பக்ஷய”என்று அழைக்கப்படுவதில்லை.

பலரை ஐக்கியப்படுத்துவதாகக் குறிப்பிட்டே ஐக்கிய தேசியக் கட்சி என்று தமிழில் குறிப்பிடப்படுகின்றது. “ஒற்றைத் தேசியக் கட்சி”என்று கூறுவதில்லை. ஆனால் ஆங்கில, தமிழ் பிரதிகளில் ;“Unity” “ஐக்கியம்” என்ற ஒரு பொருள் சொற்களைப் பாவித்துவிட்டு சிங்களத்தில் “எக்சத்வய” என்ற அதே கருத்து கொண்ட சொல்லைப் பாவிக்காமல் “ஏகீயத்வய”என்றசொல் ஏன் பாவிக்கப்பட்டுள்ளது? ஏகீயத்வய என்ற சொல் சிங்களமொழியில் தகுந்த காரணத்துடன்தான் பாவிக்கப்பட்டதோ என்று எண்ண வேண்டியுள்ளது.

அதேவேளை ஒப்பீட்டளவில் சஜித் பிரேமதாசவினால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து சில நல்ல விடயங்களை உள்ளடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் தமிழ் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளான சுயநிர்ணய உரிமை, வடக்கு – கிழக்கு இணைப்பு,சமஷ்டி, எமது தேசிய இறைமை ஆகியவை குறித்து அவரது தேர்தல் அறிக்கையில் எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை.
மாறாக அவற்றிற்கு இடம் கொடுக்காத வகையில் “ஏகீயத்வய”என்ற சொல்லைப் பாவித்துள்ளார். அப்படியானால் நாம் அரசியல் ரீதியாகக் கேட்கப்போகும் எதற்கும் இடமளிக்கமாட்டேன் என்பதுதான் அவரின் கருத்து. அதேசமயம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை போன்ற கடும் போக்குவிடயங்கள் குறிப்பிடப்பட்டிருப்பது பௌத்த அடிப்படைவாதத்திலாலான ஒரு ஆட்சியை உருவாக்கிவிடுமோ என்கின்ற அச்சத்தை எமக்கு ஏற்படுத்துகின்றது.

இன்னும் பலகுறைபாடுகள் அவரது தேர்தல் அறிக்கையில் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் 1992ம் ஆண்டின் 58ஆவது இலக்க சட்டத்தை நீக்க முன்வராமை. 1987 தொடக்கம் அரச அதிபர்கள், மாவட்ட செயலர்கள், கிராம சேவகர்கள் போன்றோர் மாகாண ஆட்சிக்குக் கீழ் வந்தனர். இவர்களை மத்தியின் அதிகாரத்தினுள் கொண்டுவந்தது மேற்படி சட்டம். இப்போது மத்திக்கு ஆதரவாக அவர்களை வைத்துக் கொண்டு மாகாண முகவர்களாகவும் நியமிக்க எத்தனிக்கின்றார்கள்.

மாகாண அரச சேவைக்குள் அந்த அலுவர்களைக் கொண்டுவரப்போவதாகக் கூறவில்லை.ஆகவே இந்தத் தேர்தல் அறிக்கை தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் திருப்திகரமான ஒன்றாக அமையவில்லை.

2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வெளிப்படையாக எந்த ஒரு உறுதிமொழியையும் பெற்றுக் கொள்ளாமல் தமிழ் மக்கள் வாக்களித்து கடைசியில் ஏமாற்றத்தையே பெற்றுக் கொண்டனர். இன்றும் எமது அடிப்படைக் கோரிக்கைகளை ஏற்காத நிலையே தொடர்கின்றது. இதைத்தான் நான் தொடர்ந்து கூறிவருகின்றேன். இவ்வாறான நிலை நீடித்தால் காலக் கிரமத்தில் தமிழ் மக்கள் தங்கள் மாகாணங்களில் சிறுபான்மையினராக ஆகிவிடுவர். அதற்கு ஏற்றவாறு எம் மக்களுட் பலர் வெளிநாட்டுக்கு செல்வதையே குறிக்கோளாக வைத்துள்ளனர்.

எனவே மீண்டும் ஒருமுறை வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் அறிக்கை ஒன்றை அதுவும் கரவாகச் சிங்கள பிரதிகளிலும் ஆங்கில, தமிழ்ப் பிரதிகளிலும் வித்தியாசங்களை உட்புகுத்தியிருக்கும் ஒன்றை நம்பி எவ்வாறு எமது மக்கள் ஆதரவு அளிக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

ஆகவே நாம் தீர்மானித்த எமது கட்சியின் முன்னைய நிலைப்பாட்டையே மீண்டும் வலியுறுத்துகின்றோம். அதாவது எந்த முக்கிய கட்சி கூட்டின் சிங்கள வேட்பாளருக்கும் வாக்களிக்கும் படி எமது விரலால் சுட்டிக் காட்டுவதற்கான தார்மீக உரிமை எமக்கு இல்லை என்பதே எனதும் எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

அதேவேளை, ஜனநாயக ரீதியாகத் தேர்தலில் வாக்களிக்கும் எமது மக்களின் ஜனநாயக உரிமையை நாம் மதிக்கின்றோம். அவ்வுரித்தை எம் மக்கள் பயன்படுத்தவேண்டும்.வாக்கைக் கொடுத்தால்கூட வாக்களித்தவர் தொகை அதிகமாகும். வெல்பவர் அத்தொகையில் ஐம்பது சதவிகிதத்தைப் பெறவேண்டும். எமது கடந்தகால வரலாறு மற்றும் தற்போதுள்ள அக,புற சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கருதுகின்றோம். யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தேர்வாகும் – என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*