;
Athirady Tamil News

நீதிவானின் கட்டளையை நீக்கி யாழ். மேல் நீதிமன்றம் கட்டளை!!

0

புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி, கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலங்களை எரியூட்டுவது தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை ரத்துச் செய்த யாழப்பாணம் மேல் நீதிமன்றம், சீராய்வு விண்ணப்பத்தையும் தள்ளுபடி செய்தது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் மாறுபட்ட கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், பொருத்தமான சட்ட ஏற்பாடுகள் காணப்படாத நிலையில் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்வதாக கட்டளையிட்டார்.

புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதேவேளை அந்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என ஒரு பகுதியினர் மல்லாகம் நீதிமன்றை நாடி இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், மயானத்தை சூழ பத்தடி உயர மதிலைக் கட்டி , சடலங்களை எரியூட்டுமாறும் , ஒரு வருடகாலத்துக்குள் மின்தகன மயானமாக அதனை மாற்றுமாறும் கட்டளையிட்டிருந்தார்.

மல்லாகம் நீதிவான் மன்றின் கட்டளைக்கு ஆட்சேபனை தெரிவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மயானத்தை சூழவுள்ள மக்கள் சார்பில் கலைமதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் சட்டத்தரணி தம்பையா, சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர்.

வழக்கின் எதிர்மனுதாரர்களாக கிந்துப்பிட்டி மயான நிர்வாகம், அச்சுவேலி பொலிஸார் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டனர்.

அந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளபப்ட்டது.

அதன் போது மயானத்தை சூழவுள்ள மக்களும் மன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

மனுவை விசாரணை செய்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், “அந்த மயானத்தை அனுமதிப்பதா, நிரந்தரமாக அகற்றுவதா? என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முதலமைச்சருக்கு உண்டு.

அந்தப் பகுதியில் வாழும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க மன்று பணிக்கிறது. இந்த வழக்கு முடிவுறும்வரை கிந்துப்பிட்டி மயானத்தில் சடலங்களை எரியூட்ட தடை விதிக்கப்படும்” என்று இடைக்காலக் கட்டளை வழங்கினார்.

மனுவின் இடைபுகு மனுதாரராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஊடாக மற்றொரு தரப்பு ஆவணங்களை இணைத்து தம்மையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ளுமாறு மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

இந்த சீராய்வு மனு மீதான விசாரணை சுமார் இரண்டு வருடங்களாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. மனு மீதான கட்டளைக்காக இன்று தினம் நியமிக்கப்பட்டிருந்தது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றால் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கிய கட்டளையை ரத்துச் செய்து கட்டளையிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − 7 =

*