;
Athirady Tamil News

இரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20- 1947..!!

0

எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இரண்டாம் எலிசபெத், 1926-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி பிறந்தார். இவர் ஐக்கிய இராச்சியம் உள்பட 16 இறைமையுள்ள நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார். அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராச்சியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவரும் இவராவார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார்.

பெப்ரவரி 6, 1952-ம் ஆண்டில் இவரது தந்தை ஆறாம் ஜார்ஜ் இறந்தவுடன் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, பாக்கித்தான் மேலாட்சி, இலங்கை ஆகிய ஏழு பொதுநலவாய நாடுகளுக்கு அரசியாக இவர் முடி சூடினார். இவற்றைத் தவிர, ஜமைக்கா, பார்படோஸ், பகாமாஸ், கிரெனாடா, பப்புவா நியூ கினி, சாலமன் தீவுகள், துவாலு, சென் லூசியா, சென் வின்செண்ட் மற்றும் கிரெனாடின்ஸ், பெலீஸ், அண்டிகுவா பார்புடா, சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஆகிய நாடுகளுக்கு அரசியாக உள்ளார். இவை அனைத்துக்கும் இவர் தனது சார்பில் பொது ஆளுநர் ஒருவரை நியமித்துள்ளார். இந்நாடுகள் அனைத்தும் பொதுநலவாய நாடுகள் (Commonwealth realm) என அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளில் இவரது அதிகாரம் மிகவும் பரந்து பட்டவை ஆயினும், பொதுவாக இவர் உள்ளூர் அரசியலில் தலையிடுவதில்லை.

61 ஆண்டுகளாக அரசாட்சி புரியும் இவர் பிரித்தானிய அரசர்களிலேயே இரண்டாவது மிக நெடுங்காலம் ஆட்சி புரிந்தவராக விளங்குகிறார்; விக்டோரியா மகாராணியார் மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார். எலிசபெத் இலண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடிதுறப்பிற்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜார்ஜ் 1936-ம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக வரிக்கப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். 1947-ல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர். இவரது முடி சூட்டும் விழா 1953-ம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + ten =

*