;
Athirady Tamil News

லங்காநேசனின் இழப்பு வடக்கு-கிழக்கு மக்களுக்கு பேரிழப்பாகும்!!

0

வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் திரு லங்காநேசன் அவருடைய இழப்பு வடக்கு கிழக்கு மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமரர் லங்காநேசன் அவர்கள் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,சக அரச உத்தியோகத்தர்கள்,கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள்,பொதுமக்கள் என அனைவரோடும் மிக நெருங்கி சினேக பூர்வமாக பழகக் கூடிய ஒரு மக்கள் சேவகன். இவரின் இழப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும் இவருடைய காலத்திலே இவர் ஆற்றிய இப் பணிகள் தமிழ் மக்களின் மனங்களில் காலத்தால் என்றும் அழியாதவை.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது

வடமராட்சி கற்கோவளத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் தம்பையா லங்காநேசன் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை கற்கோவளம் மெதடிஸ்த பாடசாலையிலும் பின்னர் பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வர்த்தகவியல் பட்டதாரியானார்.

1973ம் ஆண்டு கிண்ணியா உதவி அரசாங்க அதிபராகவும் பின்னர் வவுனியா மாவட்டத்தின் அரசாங்க அதிபராகவும் அதனைத் தொடர்ந்து உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டப் பணிப்பாளராகவும்,புனர்வாழ்வு புனரமைப்பு புனருத்தாரண அமைச்சு கப்பல் துறைமுக அமைச்சின் மேலதிக செயலாளராகவும்,நெக்கோட்டின் திட்டப்பணிப்பாளராகவும் பதவியேற்று வவுனியா மாவட்டத்திற்கு மட்டுமல்லாது தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

திட்டமிடல் துறையில் தனக்கென்று ஒருதனி இடத்தை பெற்றுக்கொண்ட அமரர் லங்காநேசன் அவர்கள் தேசிய புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராக பதவியேற்ற காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியின் கீழ் வவுனியா மாவட்டத்தில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய எல்லப்பர் மருதங்குளம் விவசாயப் பண்ணை நிலையம்,வவுனியா கூட்டுறவு சங்கத்திற்கான கட்டிடம்,கமநலசேவை திணைக்களத்திற்குட்பட்ட பல்வேறு சிறிய நீர்ப்பாசன புனரமைப்பு மற்றும் நெக்கோட் திட்டத்தின் கீழ் வடக்கு-கிழக்கு சமுதாய புனர்வாழ்வு அபிவிருத்தியின் திட்டப்பணிப்பாளராக பதவி வகித்தபோது வவுனியா நகரசபை கலாசார மண்டபம், வவுனியா சைவப்பிரகாசா வித்தியாலயத்திற்கான ஒன்றுகூடல் மண்டபம்,ஓமந்தை மத்திய கல்லூரியின் மாணவர் விடுதி,வவுனியா மாவட்ட செயலகத்திற்கான கேட்போர் கூடம் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இவராது அயராத முயற்சியால் முன்னெடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று சுகாதாரம்,கல்வி,வீட்டுத்திட்டம் என்பன வவுனியா மாவட்டதிற்கு இவரால் ஆற்றிய சிறப்பான பணியாகும்.மேலும் அமரர் லங்காநேசன் அவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்பின் மூலம் இருபதாயிரம் மில்லியன் ரூபா பெறுதியையுடைய கருத்திட்டங்களின் இயக்குணராக கடமையாற்றினார்.மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட உப கருத்திட்டங்களை அமுல்படுத்தி போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழக்கைக்கு புத்தியிர் அளித்தார்.

அத்துடன் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தை நிறுவுவதற்கும் மற்றும் முந்நூறு மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வைத்தியசாலையும் இன்றும் அவருடைய சேவையின் அடையாளச் சின்னங்களாக விளங்குகின்றது.

இவருடைய இழப்பு எமக்கு ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி,பிள்ளைகள்,உற்றார்,உறவினர்கள்,நன்பர்களுக்கு அவர் எம்மக்கள் சார்பில் அவர் ஆற்றிய சேவைக்காக நன்றியுடன் நினைவு கூறுகின்றோம் என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + eleven =

*