;
Athirady Tamil News

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரத்தை தடை!!

0

யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பண்டிகைக் காலத்தின் போது நடைபாதை வியாபாரத்தை தடை செய்வதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வணிகர் கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா , எம் ஏ சுமந்திரன் மற்றும் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் வணிகர் கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது யாழ்ப்பாணம் மாநகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. அதிலும் யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வர்த்தக சங்கத்திற்கும் இடையே காணப்படும் முரண்பாடு நிலமைகள் தொடர்பில் பேசப்பட்டது.

முக்கியமாக இரண்டு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. நீண்டகாலமாக யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான நவீன சந்தை அங்காடியில் உள்ள கடை உரிமையாளர்களின் பெயர் மாற்றம் தொடர்பாக அனைவராலும் பேசப்பட்டு வரும் நிலையிலும் இன்றுவரை அதற்கு ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்ற விடயம் வர்த்தகர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், “இது தொடர்பில் மாநகர முதல்வரால் இந்தத் திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாண ஆளுநரின் கையொப்பத்திற்காக நடவடிக்கை கிடப்பில் காணப்படுகின்றது. எனவே புதிய ஆளுநர் வருகை தந்தவுடன் அதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும்” எனத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாநகரில் பண்டிகை காலங்களில் நடைபாதை வியாபாரத்தை நிறுத்துமாறும் அவற்றால் தமக்கு பல இழப்புகளை ஏற்படுவதாகவும் வர்த்தகர்களினால் தெரிவிக்கப்பட்டது.

அந்த விடயம் தொடர்பான பிரேரணை ஒன்றினை மாநகர சபையில் முதல்வர் கொண்டு வரவுள்ளார். அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர் எதிர்வரும் பண்டிகை காலங்களில் நடைபாதை வியாபாரத்திற்கு தடை ஏற்படுத்தப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பின் போது உரையாற்றிய வணிகர் கழகத்தின் தலைவர் ஜெனக்குமார், யாழ்ப்பாண மாநகர முதல்வர் தொடர்பான பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த யாழ்ப்பாண மாநகர முதல்வர் எதிர்வரும் காலத்தில் யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் அனுசரணையுடனேயே வேலைத்திட்டங்களை முன்னெடுப்பேன் எனவும் உறுதியளித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 1 =

*