;
Athirady Tamil News

62 வருடங்களின் பின்னர் ஆசிரிய ஆலோசகர் சேவை!!

0

கல்வி அமைச்சின் கீழ் சேவையாற்றும் ஆசிரிய ஆலோசர்களுக்குப் புதிதாக ஆசிரிய ஆலோசகர் சேவையை உருவாக்குவது தொடர்பான தீர்மானத்தை அமைச்சரவைக்கு முன்வைக்கத் தேவையான நடவடிக்கையை ஒரு வார காலத்துக்குள் முன்னெடுக்குமாறு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு, கல்வி மற்றும் மனிதவளம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு இன்று (05) பரிந்துரைத்துள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதுடன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவும் அனுமதி வழங்கியிருப்பதால் இது பற்றி மீண்டும் அமைச்சரவைக்குத் தெரியப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.

கடந்த 62 வருடங்களுக்கு அண்மித்த காலப்பகுதியில் தீர்க்கப்படாத இந்தப் பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, 4971 பேர் ஆசிரிய ஆலோசகர் சேவையில் இணைந்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கல்வி மற்றும் மனிதவளம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஆஷூ மாரசிங்க தலைமையில் இன்று கூடிய போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதில் துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி குமாரி விஜயரட்ன, கே. துரைரட்ணசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தச் சேவையை உருவாக்குவதன் ஊடாக கல்வித்துறையில் இதுவரை காணப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை கல்வி நிர்வாக சேவை ஆகியவற்றுடன் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படும்.

இதன்மூலம் தற்பொழுது காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு கிடைக்கும் என்று துறைசார் மேற்பார்வைக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் கல்வி அமைச்சின் ஊடாக முறைசாரா கல்விக்காக 1994ஆம் ஆண்டு ஒன்றிணைக்கப்பட்ட திட்ட அதிகாரிகளின் பதவி நிலைகள் தொடர்பில் கடந்த 24 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்துவரும் பிரச்சினை குறித்தும் கல்வி அமைச்சு தொடர்பான உபகுழு விசாரணை நடத்தியிருந்தது.

இவர்களுக்கு MN-6 சம்பள அளவை நியமிப்பதற்கு துறைசார் மேற்பார்வைக்குழு ஆலோசனை வழங்கியிருந்தது. இதற்கு 2019- 10-29 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி கிடைத்ததுடன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காகவும் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகளை விரைவில் பூர்த்திசெய்து கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இதற்கமைய தற்பொழுது முறைசாரா கல்விச் சேவையில் உள்ள 198 பேர் இந்த சம்பள அளவுக்கு உள்ளீர்க்கப்படுவார்கள்.

இதற்கு மேலதிகமாக தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையொன்றை தயாரிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் துறைசார் மேற்பார்வைக்குழு கவனம் செலுத்தியது.

பதினாறு ஆசிரியர் சங்கங்களுடன் கடந்த குழுக் கூட்டங்களில் நடத்திய கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு, இத்தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை ஏனைய துறைகளுக்கு சமாந்தரமாக தயாரிக்கப்படும் என கல்வி தெடர்பான உபகுழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமார விஜயரட்ன தெரிவித்தார்.

இந்தக் கொள்கை இன்னமும் வரைபு மட்டத்தில் இருப்பதாகவும், எதிர்வரும் காலத்தில் பாராளுமன்றத்தில் இதனை சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

துறைசார் மேற்பார்வைக் குழுவின் அமர்வை ஊடகங்கள் அறிக்கையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இங்கு கருத்துத் தெரிவித்த இக்குழுவின் தலைவர் ஆஷூ மாரசிங்க, பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் சகல குழுக்களும் கலைக்கப்படுகின்றன என்ற பிழையான நிலைப்பாடு மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

எனினும், துறைசார் மேற்பார்வைக் குழு முறையின் கீழ் அரசியல் பேதங்கள் இன்றி செயற்பாடுகளை முன்னெடுக்க ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைத்திருப்பதற்கும் நன்றி தெரிவித்தார். ஜனநாயக ரீதியில் மக்களின் இறைமையை மேலும் பலப்படுத்த இந்தத் துறைசார் மேற்பார்வைக் குழு முறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவது முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 14 =

*