;
Athirady Tamil News

மதுவை மறந்துவிடுங்கள்!! (மருத்துவம்)

0

தமிழ்நாட்டில் ஒரு விநோதம் நடக்கிறது. கழுத்துக்குக் கத்தியைச் சொருகிக்கொண்டே கைக்கு மருதாணி போடும் விநோதம் அது. ஒரு பக்கம் திரைப்பட/தொலைக்காட்சி ஊடகங்களில் குடிக்கும் காட்சி வரும்போது ‘குடிப்பது உடலுக்குக் கேடு’ என்று டைட்டில் போட்டு எச்சரிக்கும் அரசாங்கம், மறுபக்கம் மாதம் 30 நாட்களும் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து கொண்டு, கோடிக்கணக்கான மக்களைக் குடிநோயாளிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்று 60%லிருந்து 70% ஆண்கள் மது அருந்துகிறார்கள். மது அருந்தத் தொடங்கும் இந்தியரின் சராசரி வயது 13. இந்தியாவில் கடந்த 11 வருடங்களில் குடிப்போர் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது என்கிறது புள்ளி விவரம். மாணவப் பருவத்தில் பெரும்பாலும் நண்பர்களின் வற்புறுத்தல்களால்தான் ‘முதல் அனுபவம்’ தொடங்குகிறது. தொடக்கத்தில் ‘த்ரிலுக்காக’ மது குடிப்பது என்பது எலியின் வாலைப் பிடிப்பது போன்றது; போகப்போகத்தான் புரிகிறது பிடித்திருப்பது ‘புலி வால்’ என்பது.

சிலர் சொல்வார்கள்… எப்போதாவதுதான் குடிப்பேன்; கம்பெனி மீட்டிங், வீக் எண்ட் பார்ட்டி, மாதம் ஒருநாள் ஜாலிக்கு, பண்டிகை நாளில் மட்டும், வெளியூர் போனால், களைப்பாக இருந்தால், டென்ஷன் ஆனால்… இப்படி ஆரம்பிக்கும் மதுப்பழக்கம்தான் அடுத்தடுத்து ‘எப்போது பொழுது சாயும்’ என்று காத்திருந்து அவர்களை மதுக்கடைக்கு ஓட வைக்கிறது; அது தரும் போதை அனுதினமும் அடிமைப்படுத்துகிறது; அடுத்து சுயநினைவை இழக்கும்வரை குடிக்க வைக்கிறது. இறுதியில் உடல், மனம் எல்லாம் கெட்டு, கைப்பணம் காலியாகும் வரை மருத்துவமனைப் படிகளில் ஏறி இறங்க வைக்கிறது.

குடிநோயாளிகள் யார்?

மது குடிப்பவர்களை மருத்துவர்கள் ‘குடி நோயாளிகள்’ என்றுதான் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. மதுவில் உள்ள ‘ஈத்தைல் ஆல்கஹால்’ எனும் நச்சு ஒரு கிருமி மாதிரி. அது உடலுக்குள் சென்று பல ஆபத்துகளை உருவாக்குகிறது. கிருமி என்பது கிருமிதானே! ஒருமுறை குடித்தாலும் எந்நேரமும் குடித்தாலும் அதில் உள்ள ‘நச்சுக் கிருமி’ ஆபத்து ஏற்படுத்தாமல் விடப்போவதில்லை. நோய் நிச்சயம்; என்ன நோய், எப்போது, எந்த அளவு பாதிப்பு என்பதில்தான் வித்தியாசம்.

மதுப்பழக்கத்தால் கல்லீரலும் கணையமும் பாதிக்கப்படும்; காமாலை வரும்; நரம்புகள் கெடும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், புற்றுநோயும் வரும் என்று தெரிந்திருப்பவர்கள் கொஞ்சமே! மெத்தப் படித்தவர்களுக்கே இந்தப் புரிதல் இல்லை என்பதுதான் துயரம். அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பன் விடுமுறையில் வந்தபோது அவன் அப்பாவை என்னிடம் அழைத்து வந்தான். அம்மா இல்லை. அப்பா ஒரு கல்லூரி பேராசிரியர். தனியாக வசிக்கிறார். வயது 50. மார்பு எலும்புக்கூடாக இருந்தது. வயிறு பானைபோல் வீங்கியிருந்தது. கால்கள் யானைக்கால்கள் ஆகியிருந்தன. குடிபோதையில் உடம்பைக் கவனிக்கத் தவறிவிட்டார்.

‘அப்பாவுக்கு 20 வருடங்களாக மதுப்பழக்கம் இருக்கிறது’ என்றான் நண்பன்.‘நான் ரெட் ஒயின்தான் குடிப்பேன், டாக்டர்! சின்னதா தினமும் ஒரு ‘கட்டிங்’ குடித்தால் இதயநோய் வராது இல்லே? அதனால குடிக்க ஆரம்பிச்சேன். மொடாக்குடியருக்குத்தானே நோய் வரும்’என்றார். தனக்கு வந்துள்ள நோயை அறியாமல்!

நான் அவரைப் பரிசோதித்துவிட்டு, ‘அப்பாவின் கல்லீரல் ரொம்பவே கெட்டுப்போயிருக்கிறது. அதில் புற்றுநோயும் ஆரம்பித்துவிட்டது. எல்லாம் குடியால் வந்த கேடு’ என்று நண்பனிடம் நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் அப்பா இடைமறித்தார். ‘என்ன டாக்டர் சொல்றீங்க? குடித்தால் புற்றுநோய் வருமா? நான் கேள்விப்பட்டதில்லையே’ என்றார். நான் அதற்கு விளக்கம் சொல்லி, அடுத்தகட்ட சிகிச்சைக்காகப் புற்றுநோய் மையத்துக்கு அனுப்பி வைத்தேன்.

மதுவால் புற்றுநோய் எப்படி வருகிறது?

மதுவில் உள்ள ‘ஈத்தைல் ஆல்கஹால்’ எனும் நச்சு வயிற்றுக்குள் சென்றதும் ‘அசிட்டால்டிஹைடு’ எனும் புற்றுக்காரணியாக மாறுகிறது. இது இயல்பாக உள்ள செல்களின் டி.என்.ஏ. சங்கிலிகளைச் சிதைத்துப் புற்றுசெல்களாக மாற்றுகிறது; செரிமானப் பாதையில் மற்ற புற்றுக்காரணிகளும் எளிதாக நுழைய இடம் கொடுக்கிறது. பலரும் நினைப்பதுபோல் இது கல்லீரலை மட்டும் பாதிப்பதில்லை; பல புற்றுகளுக்குத் தொடக்கப்புள்ளியாகவும் இருக்கிறது.

வாயில் தொடங்கும் இந்த நோய்ப் பயணம் தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், கணையம், குடல், குதம் என விரிகிறது. குடிக்கும் பழக்கம் இப்போது பெண்களுக்கும் உள்ளது. இதனால் அவர்களுக்கு மார்பகப் புற்றுநோயும் வருகிறது. இந்தியாவில் மட்டும் வருடத்தில் சுமார் 3 லட்சம் பேர் மதுப்பழக்கத்தால் வரும் புற்றுநோயால் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

காட்டுத்தீ பரவும்போது சூறைக் காற்றும் வீசினால் காடே அழிந்துபோவதுபோல் குடிப்பழக்கத்துடன் புகைப்பழக்கமும் சேர்ந்துகொண்டால், புற்றுநோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாகிறது. அதேநேரம் குடிப்பதை நிறுத்துபவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்பு படிப்படியாகக் குறைகிறது. எனவே, இதை ஓர் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு முதலில் புகை/மதுவிலிருந்து விடுபடுங்கள். பிறகு, புற்றுநோய் பயத்திலிருந்து!

‘புற்றுக்கட்டிகளில் சாதாரண கட்டி, புற்றுநோய்க் கட்டி என்று இரண்டு வகை இருக்கிறது’ என்று முன்பு கூறியிருந்தேன். ஒரு வாசகரின் மனைவிக்கு ‘மெட்டாஸ்டேடிக் கட்டி’ இருப்பதாகவும் அதைப் பற்றி கட்டுரையில் குறிப்பிடவில்லையே எனவும் கேட்டிருக்கிறார்.

புற்றுநோய் முதலில் ஓர் உறுப்பில்தான் உருவாகும். அந்தப் புற்றுநோய்க்கு முதன்மை புற்றுநோய்(Primary tumor) என்று பெயர். அது எந்த உறுப்பில் உருவானதோ அந்த உறுப்பின் பெயரால் அது அழைக்கப்படும். உதாரணத்துக்கு, முதலில் மார்பகத்தில் புற்றுநோய் வந்தால் அது மார்பகப் புற்றுநோய்.

இங்கிருந்து புற்றுநோய் செல்கள் பிரிந்து ரத்தம் மற்றும் நிணநீர் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவினால் அது பரவிய புற்றுநோய்(Metastatic tumor) அல்லது துணைநிலை புற்றுநோய்(Secondary tumor). உதாரணத்துக்கு மார்பகத்தில் தோன்றும் புற்றுநோய் ரத்தம் வழியாக மூளைக்குப் பரவுகிறது என்றால் அப்போது அங்கு பரவியுள்ள புற்றுநோயை மூளைப் புற்றுநோய் என்று சொல்வதில்லை. பதிலாக, ‘மெட்டாஸ்டேடிக் மார்பகப் புற்றுநோய்’ என்று சொல்கிறோம்.

எப்படி அறிவது?

பரவிய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறுப்பைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றும். மூளைப் புற்றுநோய் என்றால் தலைவலி, வாந்தி; நுரையீரல்
புற்றுநோய் என்றால் இருமல், இருமலில் ரத்தம்; கல்லீரல் புற்றுநோய் என்றால் மஞ்சள் காமாலை என அறிகுறிகள் மாறுபடும். இவற்றை வைத்து ஓரளவுக்கு முதன்மை புற்றுநோய் இருக்கும் உறுப்பைச் சொல்லி விடலாம். முதன்மை புற்றுநோய் உள்ள உறுப்பிலிருந்தோ பரவிய புற்றுநோய் உள்ள உறுப்பிலிருந்தோ பயாப்சி எடுத்துப் பரிசோதித்து புற்றுநோயை உறுதி செய்யலாம்.

சிகிச்சைகள் மாறுபடுமா?

முதன்மை புற்றுநோய் உள்ள இடம், வகை, தன்மை, நிலை, தீவிரம், அது எங்கு பரவியுள்ளது, எந்த அளவுக்குப் பரவியுள்ளது, நோயாளியின் வயது, பொது ஆரோக்கியம், அவர் விரும்பும் சிகிச்சை போன்றவற்றை வைத்து சிகிச்சை கொடுக்கப்படும். புற்றுநோய் பரவாமல் இருந்தால் அதற்குக் கொடுக்கப்படும் சிகிச்சைக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

கொழுப்புக் கட்டி கெடுதல் செய்யாது!

நம்மைப் பதற வைக்கும் கட்டிகளுள் முதன்மையானது, கொழுப்புக் கட்டி(Lipoma). கொழுப்பு செல்களின் அதிகப்படியான வளர்ச்சியே கொழுப்புக் கட்டி. பொதுவாக, தோலுக்கும் தசைக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் இது ஏற்படும். பார்ப்பதற்கு உருண்டையாக, தொட்டால் மென்மையாக, கை விரல்களால் அழுத்தினால் நகரக்கூடியதாக இருக்கும். வலி இருக்காது.

உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டி வரலாம். இதற்கான பொதுவான இடம் விலாப் பகுதி. பெரும்பாலும் தோள்கள், கழுத்து, முதுகு, கைகள், வயிறு, தொடை, தலை, நெற்றி போன்ற இடங்களில் ஏற்படும். ஒருவருக்கு ஒரு கட்டிதான் வளரும் என்று சொல்வதற்கில்லை. பல கட்டிகள்கூட வரலாம். ஒரு நெல்லிக்காய் அளவிலிருந்து ஓர் எலுமிச்சை அளவுக்குக் கட்டிகள் வளர்வது இயல்பு.

நெஞ்சில் வளரும் கட்டி ஒரு பூசணிக்காய் அளவுக்கும் வளர்வதுண்டுஇது ஏன் வருகிறது என்பதற்கு இன்னும் சரியான விளக்கம் இல்லை. உடற்பருமன், மது அருந்துதல், மரபியல் ஆகிய காரணங்களால் இது ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. இது 20லிருந்து 50 வயதுக்குள் வரலாம். கட்டி வந்துவிட்டது என்றால், அது கொழுப்புக் கட்டிதானா என்பதை ஆரம்பத்திலேயே உறுதி செய்துவிட்டு அப்படியே விட்டுவிடலாம். சிகிச்சை தேவையில்லை.

இது புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. என்றாலும், கட்டியில் நிறம் மாறுகிறது, வலிக்கிறது என்றால் கவனிக்க வேண்டும். கட்டி மிகவும் பெரிதாக வளர்கிறது, அதில் தொற்று ஏற்படுகிறது, வலி கூடுகிறது, உடல் தோற்றத்தைக் கெடுக்கிறது என்றால் அதை அறுவை சிகிச்சையில் அகற்றிவிடலாம். கொழுப்புக் கட்டிக்குப் பயப்படத் தேவையில்லை.

( படைப்போம்! )

புற்றுநோயை வென்றவர்!

முதன்மை புற்றுநோய் பரவியிருந்தால், அதிலிருந்து குணமாகும் வாய்ப்பு குறைவு. என்றாலும், அப்படிப் பரவிய புற்றுநோயையும் வென்றவர்கள் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, பிரபல இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே!இதை அவரது வார்த்தைகளிலேயே தெரிந்துகொள்வோம்…‘உடலில் ஏற்பட்ட வலிகள் காரணமாக மருத்துவரைச் சந்தித்தபோது எனக்கு மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் இருப்பதாகச் சொன்னார்கள். புற்றுநோய் நான்காம் நிலையில் இருப்பதாகவும் உயிர் பிழைப்பதற்கு 30% வாய்ப்பே இருப்பதாகவும் சொன்னார்கள். இது என்னை சோகத்தில் ஆழ்த்தியது. ‘எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லையே! எப்படி இது வந்தது?’ என கேட்டேன்.

‘மரபு காரணம்’ என்றார்கள். மனதைத் தேற்றிக் கொண்டேன். எனக்கு ஏற்பட்டுள்ள சவாலாக இதை எடுத்துக்கொண்டு சிகிச்சைக்குத் தயாரானேன். கணவரின் விருப்பத்தால் நான் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றேன். கணவரும் குடும்பத்தினரும் நண்பர்களும் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். அதனால் என் மன உறுதி அதிகரித்தது. அதுவே எனக்கு சிகிச்சையில் வெற்றி பெறவும் உதவியது. ஆகவே, எந்தவொரு புற்றுநோயாக இருந்தாலும் நோயாளியின் ஒத்துழைப்பும் மன உறுதியும், குடும்பத்தாரின் ஆதரவும் இருந்தால் வெற்றி பெறலாம்’.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × four =

*