;
Athirady Tamil News

பைல்ஸ் பயம் இனி வேண்டாம்!! (மருத்துவம்)

0

கன்சல்டிங்

மனித இனத்தின் உடல்நலம் சார்ந்த பல்வேறு விஷயங்களின் மூலம் தனிக்கவனம் செலுத்த வேண்டிய ஒன்றாகத் திகழ்கிறது. வெளியில் இது குறித்துப் பேசுவதற்கு இருக்கும் மனத்தடை இதில் பெரிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, நாற்பது வயதுகளில் இருக்கும் ஆண்களும், கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களும் இதற்கு அதிகமாக ஆட்படுகிறார்கள். உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் சமீபகாலமாக மாற்றங்கள் இந்த சிக்கலை எல்லா தரப்புக்கும் பரவலாக்கியிருக்கிறது. குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ் இதுகுறித்த விழிப்புணர்வு தகவல்களைக் கூறுகிறார்.

மூலம் என்பது என்ன?

மூல நோய் என்பதை ஆங்கிலத்தில் Piles எனக் குறிப்பிடுவோம். மருத்துவ உலகில் இந்த நோய் Hemorrhoids என அழைக்கப்படுகிறது. Hem என்ற சொல்லுக்கு ரத்தம் எனவும், rrhoids என்பதற்கு ஓட்டம் எனவும் பொருள். பொதுவாகவே ஹெமராய்ட்ஸ் என்பது மனித உடலில் இயல்பாகக் காணப்படக்கூடிய ஒருவகையான சதைப்பகுதி. மலம் வெளியேறும் பகுதியில் இந்தச்சதை Anal Cushion என்ற வடிவில் அமைந்துள்ளது. நாம் பிறக்கும்போதே எல்லோர் உடலிலும் இந்தக் குஷன் காணப்படும். நம்மை அறியாமலே மலம் மற்றும் திரவ வடிவிலான பிற கழிவுகள் வெளியேறுவதை தடுப்பதுதான் இதன் முக்கிய பணி. இந்த Anal Cushionதான் மூல நோயாக அறியப்படுகிறது.

எதனால் இப்பிரச்னை ஏற்படுகிறது?

ஒருவருக்கு மூல நோய் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் மலச்சிக்கல் முதன்மை காரணமாக இருக்கிறது. அதனையடுத்து உணவுப்பழக்கம் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. ஏனென்றால் நாம் சாப்பிடுகிற உணவில் நார்ச்சத்து மிகவும் குறைவான அளவில்தான் இருக்கிறது. எனவே நமது உடலில் ஃபைபர் தேவையான அளவிற்குச் சேருமாறு பார்த்துக் கொள்வது அவசியமாகும். இதன் காரணமாக எந்தவித சிக்கலும் இல்லாமல் மலம் கழிக்க முடியும். மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கு ரீஃபைண்ட் உணவு வகைகள், எண்ணெயில் நன்கு பொரித்த உணவுகள், பிரபலமான உணவு நிறுவனம் பெயரில் விற்கப்படுகிற சிக்கன், மட்டன், பீட்சா, பர்கர் போன்றவற்றை உண்ணாமல் இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் இந்த வகை உணவு வகைகளை அதிகளவில் தொடர்ந்து விரும்பி சாப்பிடுகின்றனர். கழிவறையிலும் ஐ-பேட், வாட்ஸ்-அப் பார்த்தவாறு நீண்ட நேரம் செலவிடுகின்றனர்.

அரை மணிநேரம், முக்கால் மணி நேரம் எனச் சிரமப்பட்டு மலம் கழிக்கின்றனர். இவ்வாறு நம்மை அறியாமலே பின்பக்க சதைப்பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும்போது ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கும் மூலம் வளர ஆரம்பிக்கிறது. அது பெரிதாக வளரும்போது அதில் வெடிப்புகள் உண்டாகின்றன. பின்னர் அந்த வெடிப்புகளில் இருந்து மெல்லமெல்ல ரத்தம் கசிய ஆரம்பிக்கிறது. மூன்றாவதாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதால் ஏற்படுகின்ற அழுத்தம் காரணமாகவும் மூலம் உண்டாகும்.

மூல நோய்க்கு மலச்சிக்கல் காரணமாக இருப்பதைப் போல, மிகவும் சிரமப்பட்டு மலம் கழிப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது. பெண்களுக்குப் பைல்ஸ் வருவதற்குக் கருவுறுதல் முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஏனென்றால், அந்தச் சமயத்தில் இவர்கள் ஒவ்வொரு வேலையையும் மிகவும் கஷ்டப்பட்டு செய்வார்கள். அப்போது இந்த நோய் தானாகவே வளர்ச்சி அடையும்.

வேறு மருத்துவரீதியான காரணங்கள் இருக்கிறதா?

நமக்கு வருகிற மற்ற நோய்களும் மூல நோய்க்கு காரணமாக உள்ளது. உதாரணத்துக்கு கல்லீரலில் ஏற்படுகிற இழைநார் ளர்வதாலும்(Cirrhosis), பெருங்குடல் புற்றுநோய் அழுத்தத்தாலும் மூலநோய் பெரிதாகும். மூலம் மனிதனுக்கு மட்டும் வருவது கிடையாது. விலங்கினங்களும் இதனால் பாதிப்பு அடைகின்றன. நேராக நிற்கக்கூடிய விலங்கினங்கள் குறிப்பாக சிம்பன்சிக்கு இந்நோய் வருவதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மூல நோயை ஏன் உடனடியாக கவனிக்க வேண்டும்?

ரத்தக்கசிவு, எரிச்சல் மற்றும் கடுமையான வலி ஆகியவை மூல நோயால் ஏற்படுகிற பாதிப்புக்களில் முக்கியமானவை. மலம் வெளியேறும் இடத்தில்
தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும்போது ஒரு சிலர் விரல் நகங்களால் சொரிந்து கொள்வார்கள். இதன் காரணமாக நகக்கண்களில் உள்ள பாக்டீரியாக்கள் உடலினுள் சென்று இரண்டாம் கட்ட பாக்டீரியா தொற்றை(Secondary Bacterial Infection) உண்டு பண்ணுகின்றன. சில சமயம் வெடிப்பு உண்டாகி பயங்கர வலி ஏற்படும். ரத்தம் அதிகம் வெளியேறும். எனவே மூல நோய் அறிகுறியினை ஆரம்பத்திலேயே உணர்ந்து சிகிச்சை பெறுவது அவசியம். சில நேரங்களில் மூலம் என்பது குடல் அழற்சி நோயாகவோ, குடல் புற்று நோயாகவோ இருக்கலாம் என்பதால் சிகிச்சையைத் தள்ளிப் போடக் கூடாது.

மூலம் பிரச்னை யாரை அதிகம் பாதிக்கிறது?

நடுத்தர வயதுள்ள ஆண்கள்தான் பைல்ஸால் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏனென்றால் இவர்களுக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருக்கும். இதன் காரணமாக மலச்சிக்கல் உண்டாகும். அடுத்து, கருவுற்ற பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தற்போது 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் இந்த நோயால் பாதிக்கப்படுவதைக் காண முடிகிறது. பல்வேறு நோய்கள் காரணமாக, முதுமைப் பருவத்தினருக்கும் மூலம் ஏற்படுகிறது.

வராமல் காத்துக் கொள்வது எப்படி?

ஆரம்ப நிலையிலேயே இந்த நோயைத் தடுப்பதற்கு உணவு கட்டுப்பாடுதான் சிறந்த வழி. மேலை நாடுகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தினமும் பல வண்ணங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிட வேண்டும். பச்சை நிறத்தில் கீரை, ஆரஞ்சு நிறத்தில் கேரட், கத்தரிக்காய், முருங்கைகாய் போன்ற காய்கறிகளையும், பழங்களில் வாழை, திராட்சை, மாதுளை என ஏழுவிதமான காய்கறிகள், கனிகளைச் சாப்பிட வேண்டும் என்பது கட்டாயம். அதை இங்கும் பின்பற்றுவது அவசியம். ஒரு நாளில் 2, 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மலம் கழிப்பதில் ஒழுங்கு முறை இருக்க வேண்டும். ஒரு முறையாவது தவறாமல் வயிற்றில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது அவசியம். எண்ணெயில் நன்றாகப் பொரிக்கப்பட்ட சிக்கன், மட்டன், பீட்சா, பர்கர் போன்ற Refined Foods-ஐ தொடர்ந்து சாப்பிடக் கூடாது. எப்போதாவது ஒரு தடவை சாப்பிட்டால் தவறு இல்லை. தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இவற்றைத் தவறாமல் கடைப்பிடித்து வந்தால், நிச்சயம் மூலம் வராமல் தடுக்கலாம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை?

மூல நோயால் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காக எங்களிடம் வரும்போது முதலில் அவருக்கு ரத்தக்கசிவு, எரிச்சல் மற்றும் வலி இருந்தால் ஆசனவாயில் சின்னதா ஒரு டியூப்(Endoscope) செலுத்தி பார்ப்போம். 5 நிமிட பரிசோதனையில், அந்த நபருக்கு புற்றுநோய், அழற்சி உள்ளதா என பரிசோதிப்போம். மூலம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதற்கான சிகிச்சைகளை ஆரம்பிப்போம். சிகிச்சையைத் தொடங்க மூலத்தின் தன்மையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், மூல நோயில் நான்கு வகைகள் காணப்படுகின்றன. முதலாவது வகையில் மூலம் வெளியே தெரியாது. உள்ளேயே இருக்கும். அதேவேளையில் ரத்தம் கசிந்து கொண்டே இருக்கும். இரண்டாவது வகையில் மலம் கழிக்கும்போதும் மூலம் வெளியே வரும். பின்னர் தானாகவே உள்ளே சென்றுவிடும். மூன்றாவது வகை மூலத்தில் மலம் கழித்த பிறகு அது உள்ளே செல்லாமல் வெளியே இருக்கும். கை விரல்களால் உள்ளே தள்ளி விட வேண்டும். கடைசி மற்றும் நான்காவது வகையில் மூலம் வெளியே வரும். கைகளால் தள்ளினாலும் உள்ளே போகாது. எண்டோஸ்கோப்பி செய்வதன் மூலம் இவற்றை நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

முதலாவது வகையான கிரேடு-1 மூலத்தை உணவுப்பழக்கத்தால் சரி செய்து விடலாம். குறிப்பாக 7 வகையான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த வகை மூலத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எளிதாக மலம் வெளியேறும் வகையில் மாத்திரைகள் இருக்கிறது. அவற்றை 4 வாரம் தொடர்ந்து உட்கொண்டால் மூலம் தானாகவே சுருங்கிவிடும். இரண்டாவது வகை மூலத்தைச் சரி செய்ய ரப்பர் பேண்டை ஃபைல்ஸின் அடியில் பொருத்துவோம். ரப்பர் பேண்ட் இறுகி 4 அல்லது 5 நாளில் தானாகவே மூலம் விழுந்துவிடும். அதன்பின்னர் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்டால் போதும். தற்போது ரப்பர் பேண்டுக்குப் பதிலாக மருந்து, மாத்திரைகள் வந்துவிட்டது. சிகிச்சை பெற காலையில் வந்தால் மாலையில் வீட்டுக்குச் சென்றுவிடலாம். இதனை Office Procedure என மருத்துவ உலகில் குறிப்பிடுவோம். இத்தகைய சிகிச்சை முறையில் 65% பேர் குணமடைந்து விடுகின்றனர்.

மூன்றாம் வகை ஃபைல்ஸைக் குணப்படுத்த 2, 3 வகையான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. முதலில் லேசர் சிகிச்சையால் மூலத்தைக் கரைக்கலாம். இரண்டாவதாக ஆசன வாயைச் சுற்றி 6 இடங்களில் ரத்தம் வெளியேறும். அதனைத் தடுத்துவிட்டால் மூலம் சிறியதாகி உள்ளே போய்விடும். இந்தச் சிகிச்சை முறைக்கு (Hallow Procedure) எனப் பெயர். மூன்றாவதாக Stapler Gun உதவியுடன் மூலத்தை மேலே அனுப்பலாம். இதனால் ரத்தக்கசிவு குறையும். நான்காவது வகை மூலத்தை அறுவை சிகிச்சை செய்துதான் அகற்ற வேண்டும். ஒரு வாரம் வலி இருக்கும். ஆனால், நிரந்தர தீர்வு கிடைக்கும்.

சிகிச்சைக்குப் பிறகு…

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இளம் தலைமுறையினர் வேளாவேளைக்குத் தவறாமல் சாப்பிட வேண்டும். ஆறேழு வகையான காய்கள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம். கழிவறையில் மொபைல், ஐ-பேட் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் அங்கேயே இருக்கக்கூடாது. 3 நிமிடங்களுக்குள் வெளியே வந்து விட வேண்டும். ஒரே இடத்தில் பல மணி நேரம் நிற்க கூடாது. ஒருவேளை நிற்க வேண்டிய கட்டாயம் வந்தால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை 5 நிமிடம் உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது பைல்ஸ் இருக்கலாம். அதற்காக மரபணுவுக்கும், இந்நோய்க்கும் தொடர்பு உள்ளது என்று யாரும் நினைக்கக்கூடாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 1 =

*