;
Athirady Tamil News

‘தமிழினத்தின் போர்வாளாக, கேடயமாக எம்மை அர்ப்பணிக்கிறோம்’: சிறிகாந்தா சூளுரை!

0

ரெலோவிலிருந்து பிரிந்து சென்ற சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் அணி இன்று புதிய கட்சியை அங்குரார்ப்பணம் செய்துள்ளனர். தமிழ் தேசிய கட்சியென அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அந்த கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா-

தமிழினத்தின் போர்வாளாக, தமிழினத்தின் கேடயமாக இந்த அமைப்பு தன்னை அர்ப்பணிக்கிறது. தமிழினம் தன்னைத்தானே ஆள விரும்புகிறது, சுதந்திரத்தோடு வாழ விரும்புகிறது என்பதைமனதில் பதித்து தமிழ் தேசிய கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என அறிவித்தார்.

அத்துடன், முன்னாள் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயற்படும் என்றும் அறிவித்தார்.

புதிய கட்சியின் செயலாளராகஎம்.கே.சிவாஜிலிங்கம், துணைத்தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி சிவகுருநாதன், சட்டத்துறை செயலாளராக சட்டத்தரணி ஜெயகாந்தன், தேசிய அமைப்பாளராக சில்வெஸ்டர் விமல்ராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அது தவிர, கல்வி, நிதி, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிற்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா-

தமிழ் தேசிய அபிலாசைகள் மழுங்கடிக்கப்படக் கூடாது, தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், எமது மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், இழப்புக்கள் அனைத்தையும் ஈடு செய்யும் விதமாக, வென்றெடுக்கப்பட வேண்டுமென்ற குறிக்கோளுடன் தமிழ் தேசிய கட்சி நிறுவப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழினத்தின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் நேர்மையாகவும் கட்டிக்காத்து நிறைவேற்றுமேன்ற எமது மக்களின் நம்பிக்கை மெல்லமெல்ல விடுபட்டு, இனிமேலும் அந்த கட்சியிடமிருந்து இனிமேலும் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எதிர்பார்க்க முடியாதென்ற கசப்பான உண்மை கண்ணெதிரே நிற்கும் நிலையில், தமிழினத்திற்கு உறுதியான, நம்பிக்கையான அரசியல் தலைமையை முன்வைக்க வேண்டுமென்பதால் நீண்ட ஆலோசனையின் பின் இந்த கட்சியை நிறுவுயிருக்கிறோம்.

தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணய உரித்துடன், மரபுவழி தாயகமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுயாட்சி அரசினை நிறுவதற்கும், அதை பேணி பாதுகாக்கவும், மரபுவழி தாயகத்திற்கு வெளியே வாழும் எமது மக்களின் அரசியல், ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டும் முகமாக இந்த கட்சியை நிறுவியிருக்கிறோம்.

ஒத்த கருத்தும், நோக்கமும் கொண்ட தமிழ் தேசிய கட்சிகளை அடையாளம் கண்டு, அவர்களுடன் ஒன்றுபட்ட அணியாக, உறுதியான, நேர்மையான அரசியல் தலைமையொன்றை உருவாக்கி தமிழ்மக்களிடம் முன்வைக்க முடியுமென நம்புகிறோம்.

சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளுடன் ஓரணி திரண்டு, புதிய தலைமையை தமிழ் மக்கள் முன் சமர்ப்பிக்க முடியுமென நம்புகிறோம். அதை காலம் தாழ்த்தாமல் அடுத்த சில நாட்களில் அதை முன்வைப்போம்.

அரசியல்ரீதியான பணிகளுடன், போரில் சின்னாபின்னமாகியுள்ள மண்ணை அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமையையும் புறந்தள்ளவில்லை.

அரசியல் என்பது வெறுமனே அரசியல் கட்சிகளுடன் மட்டுப்படுத்தப்பட கூடாது. தமிழினத்தின் மீது விசுவாசம் கொண்ட அனைவரும், ஓரணியில் செயற்பட வேண்டும். சிவில் அமைப்புக்களையும் இந்த பணியில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எமது இலட்சியப்பணயம், சமரசம் என்ற பெயரில் வைத்துள்ள சரணாகதி அரசியலினால், சொந்த சுயலாபங்களிற்காக முன்னெடுக்கப்படும் துரோகத்தனமாக அரசியலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்த நிலைமையில், நேர்மையான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளிற்கு மட்டுமல்லாமல், தமிழினத்தின் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு தமிழர்களும் தம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.

தமிழினம் தன்னைத்தானே ஆள விரும்புகிறது, சுதந்திரத்தோடு வாழ விரும்புகிறது என்பதைமனதில் பதித்து தமிழ் தேசிய கட்சி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்.

தமிழினத்தின் போர்வாளாக, தமிழினத்தின் கேடயமாக இந்த அமைப்பு தன்னை அர்ப்பணிக்கிறது. ஒத்த நோக்கமுடைய கட்சி, அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் என்றார்.

பின்னர் உரையாற்றிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்-

நிரந்தர தீர்வாக இலங்கைத் தீவிற்குள் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தீர்வென்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. இதை அடைவதற்கு அனைத்து வழியிலும் முயற்சி மேற்கொள்ளும்.

பொறுப்புக்கூறல், இழைக்கப்பட்ட போர்க்குற்ற விவகாரங்களை சர்வதேச அளவில் கொண்டு சென்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டு செல்வதுடன், அரசியல் தீர்வு விவகாரத்திலும் சர்வதேச நாடுகளின் அனுசரணையை பெற்றுக்கொள்ளும்.

வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல இலங்கை தழுவியரீதியில் தமிழ் தேசிய கட்சி செயற்படும்.

அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு சாதனைப் பயணத்தை இந்த கட்சி மேற்கொள்ளும்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சுயாட்சியை நிறுவவும், வடக்கு கிழக்கிற்கு வெளியில் சக அதிகாரங்களுடன் வாழவும் நடவடிக்கையெடுப்போம். இதற்காக ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்படுவோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

(ரெலோ) என்.சிறிகாந்தா தலைமையில் தமிழ்த் தேசியக் கட்சி (TNP)..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 7 =

*