;
Athirady Tamil News

பதிலடி கொடுத்து தொடரை கைப்பற்றிய இந்தியா!!

0

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2 ஆவது ஆட்டத்தில் இந்தியா 107 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தன.

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலிருந்தது.

இந் நிலையில் தொடரை கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளுக்கிடையே இன்றைய தினம் கட்டாக்கில் ஆரம்பமான தொடரின் இறுதியும் மூன்றாவதுமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி நிக்கோலஷ் பூரண் மற்றும் பொல்லார்ட்டின் அதிரடியான ஆட்டத்தினால் 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை குவித்தது.

316 என்ற கடின இலலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்ப‍ெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணிக்கு ஆரம்ப வீரர்களான ரோகித் சர்மாவும், ராகுலும் நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.

இவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டுக்காக 122 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். அதன் பின்னர் 21.2 ஆவது ஓவரில் ரோகித் சர்மா 63 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க விராட் கோலி ஆடுளம் புகுந்தார்.

இவர்களின் இணைப்பாட்டம் சற்று நேரம் தாக்குப் பிடிக்க இந்திய அணி 27 ஓவரில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 152 ஓட்டங்களை குவித்தது.

ராகுல் 29.5 ஆவது ஓவரில் 77 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்தடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐய்யர் 7 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த் 7 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 9 ஓட்டத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இந்திய அணி 35 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களை பெற்றது. 6 விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜடேஜாவுடன் விராட் கோலி கைகோர்த்தாட இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறியது.

எனினும் இந்திய அணி வெற்றி பெறும் தருவாயில் விராட் கோலி மொத்தமாக 81 பந்துகளில் 9 பவுண்டரிகள் அடங்கலாக 85 ஓட்டத்துடன் கீமோ பவுலின் பந்தில் போல்ட் ஆகி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார் (286-6).

விராட் கோலியின் வெளியேற்றத்தையடுத்து சர்துல் தாகூர் எதிர்கொண்ட முதல் ஓவரிலேயே அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த இறுதியாக இந்திய அணி 48.4 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 316 ஓட்டங்களை குவித்து வெற்றி பெற்றது.

ஜடேஜா 39 ஓட்டத்துடனும் சர்துல் தாகூர் 17 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*