;
Athirady Tamil News

வவுனியாவில் உயிரியல் பிரிவில் சாதித்த புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி!!

0

அம்மம்மாவின் வளர்ப்பில் வவுனியாவில் உயிரியல் பிரிவில் சாதித்த புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி

அம்மம்மாவின் வளர்பில் இருந்து உயிரியல் பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்று வவுனியா புதுக்குளம் மகாவித்தியலாய மாணவி மதனமோகன் சுலக்சனா சாதனை படைத்துள்ளார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த மதனமோகன் சுலக்சனா 3ஏ சித்திகளைப் பெற்று உயிரியல் பழைய பாடத்திட்டத்தில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளார்.

தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து மாணவி கருத்து தெரிவிக்கும் போது,

நான் வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் உயிரியல் பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்றுள்ளேன். மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் இந்த நிலையை அடைய வழிகாட்டிய அம்மம்மா, சித்தி, அண்ணாமார், பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு எனது நன்றிகள்.

நான் தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரையில் புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் தான் கல்வி கற்று வருகின்றேன். எனது வீட்டிலிருந்து தினசரி 2 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் பயணித்தே பாடசாலை சென்று கல்வி கற்றேன்.

நான் அம்மம்மா மற்றும் சித்தியுடன் இருந்து தான் கல்வி கற்று வருகின்றேன். என்னை அவர்களே படிப்பித்தார்கள். அத்துடன் எதிர்காலத்தில் வைத்தியராக வரவேண்டும் என்பது தான் எனது இலட்சியம். அதன் முதற்கட்ட படியினை தற்போது நான் அடைந்துள்ளேன். அத்துடன் அனைத்து மாணவர்களும் உற்சாகமாக படித்தீர்கள் என்றால் நீங்களும் சிறந்த பெறுபேற்றினை அடைய முடியும் என தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த மாணவி சாதாரண தரப் பரீட்சையிலும் 9ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 12 =

*