;
Athirady Tamil News

மறவன்புலவு காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க கொள்கையளவில் இணக்கப்பாடு!! (படங்கள்)

0

மறவன்புலவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதனால் அதனைச் சூழவுள்ள குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் விளைவுகள் தொடர்பில் ஆராய்ந்து காற்றாலைகளில் முன்னெடுக்கப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பிலும் அந்தப் பகுதி மக்களுக்கு வாழ்வாதாரங்களை வழங்குவது தொடர்பிலும் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தென்மராட்சி, மறவன்புலவு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் காற்றாலைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், இலங்கை மின்சார சபை முகாமையாளர், காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் நிறுவனம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசுவாமி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் துறைப் பீடாதிபதி பேராசிரியர் ஏ.அற்புதராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஜீவசுதன், பௌதீகவியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஏ.தேவகரன், விலங்கியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி கே.கஜபதி, சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர், தென்மராட்சி பிரதேச செயலர் மற்றும் பிரதேச மக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கலந்துரையாடலுக்கு முன்னதாக காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர்.

காணி கொள்வனவு, காற்றாலை அமைவிடம், காற்றாலை ஒலி, காற்றாலை பராமரிப்பு மற்றும் விபத்துக்கள், காற்றாலையினால் ஏற்படும் பிற விளைவுகளுக்கு பொறுப்பு கூறல், சூழலிய மாற்றம், சமூக நிதி பயன்பாடு, வீதிகள் சேதமடைதலும் மீளச் சீரமைத்தலும் மற்றும் திணைக்கள அனுமதிகள், இவ்வாறான பல விடயங்கள் குறித்த இந்தக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

மக்கள் குடியிருப்புக்கு அண்மையாக அமைக்கப்படவுள்ள காற்றாலை கோபுரத்தை சற்று தூரத்து அப்பால் கொண்டு செல்ல மின் உற்பத்தி நிறுவனம் கொள்கையளவில் இணக்கம் கண்டது.

மேலும் குடியிருப்புகளுக்கு மேலாகக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்ட அதிக வலுக்கொண்ட மின்சார கேபிள்களை குடியிருப்பு அல்லாத பகுதியின் ஊடாக மாற்றுவதற்கு இலங்கை மின்சார சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், முக்கியமாக மறவன்புலவு காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கு அண்மையாக குடியிருக்கும் சுமார் 200 குடும்பங்களுக்கும் சமமான அவர்களால் முன்வைக்கப்படும் வாழ்வாதாரத் திட்டங்களை மின் உற்பத்தி நிறுவனம் செய்து கொடுக்கப்படவேண்டும் என்ற முன்மொழிவை அந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

இந்த விடயத்துக்காக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் சாராத மூவரைக் கொண்ட குழுவை அமைப்பது என்றும் மின் உற்பத்தி நிறுவனத்தால் யோசனை முன்வைக்கப்பட்டது.

மறவன்புலவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக அந்தப் பகுதியில் அழிக்கப்பட்ட மேச்சல் தரைகளை மீள அமைப்பதற்கும் வீதிகளைச் சீரமைப்பதற்கும் மின் உற்பத்தி நிறுவனத்தால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

“மறவன்புலவு குடியிருப்பாளர்களுக்கு பாதிப்புகள் இல்லாத வரைக்கும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிபந்தைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றுவதாக மின் உற்பத்தி நிலையத்தினர் உறுதி தந்துள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + two =

*