;
Athirady Tamil News

மாறுகண் எதனால் ஏற்படுகிறது?! (மருத்துவம்)

0

உங்களுக்கு ஒரு சிறிய சவால்…உங்களுக்கு மிகவும் பழக்கமான வீட்டு அல்லது அலுவலக மாடிப்படிகளில் ஒரு முறை ஏறி இறங்குங்கள். இதற்கு ஆகும் நேரத்தைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் கண்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஒரு துணியால் கட்டிக் கொள்ளுங்கள். மீண்டும் அதே படிக்கட்டில் ஏறி இறங்குங்கள். இப்பொழுது ஆகும் நேரத்தைக் கணக்கிடுங்கள்.இரண்டு முறை ஏறி இறங்கியதிற்கிடையில் என்ன வேறுபாட்டினை உணர்ந்தீர்கள்?

ஒரு கண்ணை மூடிய நிலையில் ஏறுவதும் இறங்குவதும் சுலபமாக இருக்காது. மாடிப்படி சற்று அருகிலோ தொலைவிலோ இருப்பதைப்போல தோன்றியிருக்கும். சிலமுறை கால்கள் வழுக்கக் கூட வாய்ப்பு இருந்திருக்கும். இதற்கு என்ன காரணம்?

Binocular vision எனப்படும் துணைவழிப் பார்வை இல்லாததே இதற்குக் காரணம். இரண்டு கண்களும் நேராக பார்த்த நிலையும்(Straight eyes), முழுமையான பார்வைத் திறன் கொண்ட நிலையும் துணைவிழிப் பார்வைக்கு மிகவும் அவசியம். துணைவிழிப்பார்வை சீராக இருக்க மூன்று விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும்.

* கரு உருவாகும் நிலையிலேயே நேராக இருக்கும் கண்கள்
* இரண்டு கண்களிலும் சமமான, ஓரளவு சீரான பார்வை
* மூளையின் பார்வைப் பகுதியும் சரியாக இருக்க வேண்டும்

பைனாகுலர் விஷன் இல்லை என்றால் சாலையில் மேடு பள்ளம், சுற்றுவட்டப் பார்வை, காட்சியின் நீள அகலம் ஆகியவை துல்லியமாகத் தெரியாது. மாறுகண் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்தத் தொந்தரவுகள் கட்டாயம் இருக்கும். சிறு வயதிலிருந்தே இந்தக் குறைபாடு இருந்து வந்திருப்பதால் பெரும்பாலான நேரங்களில் மாறுகண் உடையவர் தன் குறைபாட்டை உணர்ந்திருக்க மாட்டார். மருத்துவர் எடுத்துக் கூறும்போது கூட ‘எனக்கு பிறவியிலேயே இந்தக் கோளாறு. அதனால் பிரச்னை இல்லை’, ‘பரம்பரையா எங்க தாத்தா, அப்பா, நான்னு எல்லாருக்குமே மாறுகண்ணுதான்’ ‘பார்வை நல்லாத்தானே இருக்குது… மாறுகண் அதிர்ஷ்டம் இல்லையா’ என்றெல்லாம் சாதாரணமாகக் கூறுவார்கள்.

எல்லாம் சரிதான். பரம்பரையாக இருப்பதாலேயே இவையெல்லாம் சரியானது என்று முடிவு செய்துவிட முடியுமா? நிச்சயம் கூடாது. நடைமுறையில் மாறுகண் உடையவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். வாகனத்தில் செல்லும்போது சாலையை கடக்கும்போது என்று பிற வாகனங்கள் வருவதை கணிப்பதில் தவறுகள் ஏற்படும். ஒரு வாகனம் தள்ளி வருகிறது என்று நினைத்துக் கடக்க நினைப்பார்கள். உண்மையில் அது வெகு அருகில் வந்து கொண்டிருக்கும். ஒரு கண்ணில் பார்வை குறைவாக இருப்பதால் பறந்து வரும் பூச்சி, தூசிகள் போன்றவற்றால் காயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
மாறுகண் எதனால் ஏற்படுகிறது?

பல காரணங்கள் இருந்தாலும் பொதுவான காரணம், ஒரு கண்ணில் மட்டும் அதிக பார்வைக் குறைபாடு இருந்து, மற்ற கண் ஓரளவுக்கு அல்லது மிகத் தெளிவான பார்வையுடன் இருப்பதுதான். சிறு வயதிலேயே பொருத்தமான கண்ணாடி அணிந்து நன்றாகப் பார்வை தெரியும் கண்ணினைக் குறிப்பிட்ட கால அளவில் மறைத்து செய்யப்படும்(Occlusion therapy) பயிற்சிகளைச் செய்தால் மாறுகண் முழுவதும் குணமாகிவிடும்.

ஒவ்வொரு கண்ணையும் மேல் கீழாகவும் வலது இடதாகவும், உட்புறம் மற்றும் வெளிப்புறமாகவும் திருப்ப 6 தசைகள் உள்ளன. கண்களை சமநிலையில் நேர்ப்பார்வையுடன் வைக்க இவை அனைத்தும் போதுமான அளவு ஆற்றலுடன் இருப்பது அவசியம். இதில் ஏதேனும் குறைபாடு நிகழ்ந்தால் மாறுகண் ஏற்படும். சில சமயம் கரு வளர்ச்சியின்போது கண்களை இயக்கும் தசைகளின் ஒருங்கிணைப்பில் பிரச்னை ஏற்படலாம். மேற்கூறிய இரண்டு சூழ்நிலைகளிலும் கண்ணாடி மற்றும் கண் பயிற்சியினை முயற்சித்துப் பார்த்தபின் முழுவதும் குணமாகவில்லையெனில் அடுத்த கட்டமாக எளிய அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

இதில் முக்கியமான விஷயம் மாறுகண் அறுவை சிகிச்சைகளைச் சிறுவயதில் செய்தால் மட்டுமே பலன் இருக்கும். ஏன்? வயதான பிறகு செய்தால் என்ன? என்று நீங்கள் கேட்கலாம். மாறுகண்ணாக இருக்கும் கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் காட்சிப்படிமங்கள் தெளிவற்றவையாக இருப்பதால் வளரும் பருவத்து மூளை வழக்கமான பகுதியில் அவற்றை செயல்முறைப் படுத்தாமல் சற்று மாறுபட்டே அமைத்திருக்கும். குழந்தையின் மூளை வளர்ச்சி முழுமையடையும் முன்பு கண்களின் நிலையை மாற்றி அமைத்தால் மூளைப் பகுதியின் சமமற்ற நிலையையும் சீராக்கி விட முடியும். ஆனால், வயதான பின்பு அறுவை சிகிச்சை செய்யும்போதோ புதுவிதமான காட்சி மூளையின் அதே பகுதிக்கு செல்கிறது. இதனால் குழப்பம் ஏற்பட்டு இரண்டு கண்களிலும் இருந்து வரும் படிமங்கள் வெவ்வேறாகத் தெரிய நேரிடும்.

நோயாளிகள், ‘டாக்டர்… எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது’ என்பார்கள். சிறு வயதில் கவனிக்கப்படாமல் விட்ட மாறுகண் நோயாளிகள் பெரியவர்கள் ஆகும்போது அறுவை சிகிச்சை மூலம் நேராக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வருவார்கள். அழகுக்காக என்ற முறையில்(Cosmetic surgery) பெரியவர்களான பின்பு மாறுகண்ணை மாற்றி அமைத்தால் அன்றாட வாழ்வில் நடப்பது, உணவு உண்பது போன்ற செயல்கள் கூட கடினமாகிவிடும். எனவே, வயதான பின்பு மாறுகண்ணுக்கான அறுவை சிகிச்சைகளைத் தவிர்த்தல் நலம்.

சில குழந்தைகளுக்கு அவர்களது இயற்கையான முக வடிவமைப்பினால் கண்களுக்கிடையேயான இடைவெளி வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். வேறு சிலருக்கு மேல் இமையும் கீழ் இமையும் உட்புறமாக சந்திக்கும் இடத்தில் தோல் சற்று அதிகப்படியாக வளர்ந்திருக்கும். சாதாரணமாக பார்ப்பவர்களுக்கு இத்தகைய குழந்தைகளுக்கு மாறுகண் இருப்பதைப் போலவே தோன்றும்.

மாறுகண் போல இருக்கிறதே என்று பார்ப்பவர்கள் கூறினாலோ, பெற்றோரே உணர்ந்தாலோ, ஒரு சந்தேகம் தோன்றி விட்டால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இத்தகைய மாறுகண் போன்ற தோற்றம் (Pseudosquint) குழந்தை வளர வளர சரியாகிவிடும்.
சிறுவயதிலிருந்தே இருக்கும் மாறுகண் பிரச்னை போக வயதான பின்பும் பலருக்கு மாறுகண் வரலாம்.

நகைத் தொழிலாளர்கள், நுண்ணோக்கியை(Microscope) அதிகம் பயன்படுத்துபவர்கள் போன்றவர்கள் ஒரு கண்ணையே அதிகம் பயன்படுத்துவார்கள். பயன்படுத்தப்படாத மற்றொரு கண் வெளிப்புறமாக விலகிச்செல்ல நேரும். முறையான பயிற்சிகள் மூலம் இதைத் தவிர்க்கலாம். பணி நேரம் தவிர வீட்டில் இருக்கும் மற்ற நேரங்களில் அதிகம் பயன்படுத்தாத கண்ணை உபயோகிக்க பயிற்சிகள் செய்யலாம்.

இதுதவிர மாறுகண் குறைபாட்டை உண்டாக்கும் முக்கியமான பிரச்னை ஒன்று உள்ளது. அவை நரம்பியல் கோளாறுகள். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் திடீரென்று ஒரு கண் மாறுகண் போல ஆகிவிட்டது என்றோ, காட்சிகள் எல்லாம் இரண்டிரண்டாகத் தெரிகின்றன என்றோ, ஒரு கண்ணின் இமை தானாகவே மூடிக்கொண்டு விட்டது, என்ன முயற்சித்தும் திறக்க முடியவில்லை என்றோ பதறிக் கொண்டே வருவார்கள். மூளையின் நரம்புகளுக்குச் செல்லும் சிறிய ரத்த நாளங்கள் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயால் திடீரென அடைத்துக் கொள்வதே இதற்கு காரணம்.

தலையில் ஏற்படும் நீர்க்கட்டிகள்(Cysts), புற்றுநோய்க் கட்டிகள் இவற்றாலும் நரம்புகளில் அழுத்தம் ஏற்படலாம். இந்த வகை நோயாளிகளுக்கு எந்த நரம்பு அழுத்தப்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து அதற்கான மூல காரணத்தையும் கண்டறிந்து உடனடி சிகிச்சை அளித்தால் விரைவில் குணமாகிவிடும்.

மாறுகண் என்பது நோயோ அதிர்ஷ்டமோ இல்லை. அது வேறு ஒரு பிரச்னையின் வெளிப்பாடு. அவ்வளவுதான். ஆனால், அதனால் வரும் விளைவுகள் மற்றும் சமூக அழுத்தம் அதிகமானது. மாறுகண் உள்ள குழந்தைகளைக் கண்டால் அலட்சியப்படுத்தாமல் விரைந்து சிகிச்சைக்கு செல்ல வழிகாட்டுவோம்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − nine =

*