;
Athirady Tamil News

குளிர்காலத்துக்கு என்ன உணவு?! (மருத்துவம்)

0

கோடைக்காலத்தில் நம் உடலின் நீர்ச்சத்தினை அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே, அந்த பருவத்தில் நீர்ச்சத்து மிகுந்த காய், கனிகளை உண்ண வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதேபோல் குளிர்காலங்களில் நம்மை பாதுகாக்கும் வகையிலான உணவுகளை உண்ண வேண்டும்.

நம் உடலை பாதுகாப்பது நாம் உண்ணும் உணவே!குளிரில் இருந்து விடுபட நம் உடல் அதிக வெப்பத்தையும், ஆற்றலையும் செலவிடும். இதை Heat & Energy என்று குறிப்பிடுகிறோம். இதற்கேற்றவாறு நாம் உண்ணும் உணவு ஆற்றல் தரக்கூடியதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் அமைதல் வேண்டும்.
பொதுவாகவே குளிர்காலங்களில் நாம் அதிக உணவு உட்கொள்வது வழக்கம். இப்பழக்கம் நம் உடல் எடையை அதிகரிக்க வழி வகுக்கிறது. ஆகையால் உணவை அறிந்து, அதன் பயன்களையும் உணர்ந்து, அவை நம் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

மசாலாப் பொருட்களாக நம் உணவு பதார்த்தங்களில் சேர்க்கப்படும் மிளகு, வெந்தயம், சுக்கு(இஞ்சி), சீரகம், மல்லி ஆகியவை உடலின் வெப்ப நிலையை பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை குறையாமல் பாதுகாக்கவும் பெரும் பங்காற்றுகிறது. உணவு செரிமானத்துக்கும் மிளகு, வெந்தயம், சுக்கு, சீரகம், மல்லி உதவுகிறது.

பச்சைக் காய்கறிகள், கிழங்கு வகைகள்

பொதுவாக பனி மற்றும் மழை காலங்களில் ேநாய்கள் நம் உடலை சுலபமாகத் தாக்கிவிடும். இந்த பருவ மாற்றங்கள் நம் நோய் எதிர்ப்பு அமைப்பையும், திறனையும் குறைக்கும். ஆகையால் கிழங்கு வகைகளான மரவள்ளி, பனங்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்றவைகளை இச்சமயங்களில் உட்கொள்வது நன்று. கீரை வகைகளையும் மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நெய் மற்றும் எண்ணெய்கள்

மழை காலங்களில் நம்மை பாதுகாப்பது நம் உடலில் உள்ள நன்மை செய்யும் கொழுப்புகளே. அதை குறைய விடாமலும், தீங்கு செய்யும் கொழுப்பினை அதிகரிக்க விடாமலும் பார்த்துக் கொள்வது அவசியம். எனவே நன்மை செய்யும் நெய், எள் எண்ணெய்(நல்லெண்ணெய்), வேர்க்கடலை எண்ணெயை உணவில் சேர்ப்பது நன்று. இவை தொற்று நோய்களை பரப்பும் கிருமிகளை அழிக்கிறது.

தண்ணீர்… தண்ணீர்…

கொதித்த நீர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டும் அருந்துங்கள். ஏனெனில் தண்ணீர் மூலம்தான் நோய்க்கிருமிகள் எளிதில் பரவும். சுகாதாரமற்ற தண்ணீரைப் பயன்படுத்தும்போது நீரில் வளரக்கூடிய தீமை செய்யும் கிருமிகளை நம் உடலில் செல்ல நாமே வழிவகுப்பதுபோல் தவறானதாகிவிடும்.

சர்க்கரையும் உப்பும்

உப்பு மற்றும் சர்க்கரை பயன்பாட்டை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். குறைந்த அளவில் உப்பு, சர்க்கரையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது குளிர்காலத்துக்கான அறிவுரை மட்டுமல்ல; பொதுவான ஆரோக்கிய ஆலோசனையும் கூட!

நோயாளிகளின் கவனத்துக்கு…

சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் நோய் உள்ளவர்கள் நாக்கின் சுவைக்கு அடிமையாகி உணவைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. எந்த உணவாக இருந்தாலும் இது எனக்கு நன்மை செய்யுமா என்று உங்களுக்கு நீங்களே கேட்டுக் கொள்வதும், மருத்துவரின் ஆலோசனையை மறக்காமல் இருப்பதும் முக்கியம். உடலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் கவனம் தேவை. அதிக காரம் நிறைந்த உணவு பதார்த்தங்களைத் தவிர்ப்பது நம் உடலுக்கு நாம் செய்யும் நன்மை.

பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்களை உண்பது நல்லதுதான். இத்துடன் மோர், தயிர் போன்ற(Fermented products) மாற்று பொருட்களை சேர்ப்பதினால் வயிற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பெருகி வயிற்று உபாதைகள் வராமல் தவிர்க்கும்.

அசைவ உணவுகள்

பொதுவாக இறைச்சியைச் செரிமானம் செய்ய குடலானது அதிக நேரத்தையும், ஆற்றலையும் செலவிடுகிறது. ஆகையால் இறைச்சிகளை வாரம் ஒருமுறை உண்பதே சரியானது. மிகவும் முக்கியமாக சுத்தம் இல்லாத உணவுப் பண்டங்களையோ, தெருவோரக்கடைகளிலோ உண்பதை நிச்சயம் தவிர்த்துவிடுங்கள்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 12 =

*