;
Athirady Tamil News

வாழ்க நலமுடன்! (மருத்துவம்)

0

மழைகாலம் முடிந்து பனிக்காலம் தொடங்கிவிட்டது. இந்த ஆண்டின் பனிக்காலம் 2020-ம் ஆண்டு மார்ச் மாத இறுதிவரை நீடிக்கும் என்று கணித்திருக்கிறார்கள். இதமான, இனிமையான பருவமாக இந்த பனி காலம் இருந்தாலும் பல நோய்களும் இப்போதுதான் எளிதில் நம்மைத் தாக்கும். பனிக்காற்றுப் பட்டால் தும்மலில் துவங்கி, இருமல், காய்ச்சல், இப்படிப் படிப்படியாகப் படுத்தியெடுக்கும். ஏற்கனவே உள்ள உடல் நலக் குறைபாடுகளும் தீவிரம் அடையும், அலர்ஜி பெரும் துன்பம் தரும். இத்தனையும் கடந்து ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்
பொது மருத்துவர் அஸ்வின் கருப்பன்.

‘‘பனிக்கால நோய்களில் சளி, இருமல், நிமோனியா, சிறுநீரகத் தொற்று, டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்றுநோய்கள் வேகமாகப் பரவுகின்றன. ஆஸ்துமா, மூச்சுத்திணறல், சைனஸ், சருமம் தொடர்பான நோய்கள் பனிக்காலத்தில் தீவிரம் அடையும். குளிர்காலத்தில் அதிகளவில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

குளிர் காலத்தில் இதயத்துக்குச் செல்லும் ரத்த அளவு குறையும். தனது தேவைக்காக இதயம் கூடுதலாக வேலை பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இதனால் ரத்த அழுத்தம் உண்டாகும். ரத்த நாளங்கள் சுருங்கியோ, அடைப்போ இருந்தால் மாரடைப்பு ஏற்படும். இதய நோய் உள்ளவர்கள் தங்களது நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.’’

பனிக்காலத்தில் மட்டும் ஏன் இத்தனை தொந்தரவுகள்?

‘‘ஈரப்பதம் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் தொற்று நோய்க்கிருமிகள் எளிதில் பரவும். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை பனிக்கால நோய்கள் எளிதில் தாக்கும். சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் நோய்கள்
குணமாக நாட்கள் பிடிக்கும்.’’

இவற்றைத் தடுக்க முடியாதா?!

‘‘பனிக்கால நோய்கள் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் உள்ளன. இவற்றைப் போட்டுக் கொள்வதால் புளூ, மலேரியா, நிமோனியா போன்ற தொற்று நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நோய்ப்பரப்பும் கொசுக்களின் உற்பத்தியைக் குறைக்கலாம்.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகள் தவிர்க்கவும். அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாகப் பராமரிப்பது, சுகாதரமற்ற இடங்களில் தயாரிக்கப்படும் உணவுகள் உண்பதைத் தவிர்ப்பது, காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை அதிகம் நோய்ப்பரவல் உள்ள இடங்களில் டிஸ்போசபிள் டிஸ்யூக்களைப் பயன்படுத்துவது என சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.’’

பொதுவான ஆலோசனைகள் என்ன?

‘‘ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், குளிர்ச்சியான பழச்சாறுகளையும் தவிர்க்க வேண்டும். புளிப்புத் தன்மை உள்ள பழங்களை சாப்பிடுவது, புகை, தூசு ஆகியவை ஆஸ்துமாவின் தன்மையை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இன்ஹேலர், மற்றும் மருந்துகளைப் பயன்படுத்தித் தீர்வு காணலாம்.

மூக்கடைப்பு, காதுவலி, தலைவலி என உடலில் உள்ள நோய்கள் அதி தீவிரமான தொந்தரவுகளைக் கொடுக்கும். எந்த நோயாக இருந்தாலும் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். சருமத்தில் வரட்சி, பாத வெடிப்பும் வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். மாய்ச்சரைஸர் கிரீம்களை இரவிலும், பகலிலும் பயன்படுத்தித் தீர்வு காணலாம்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவுகளாகச் சேர்த்துக் கொள்ளவும். நிறையத் தண்ணீர் குடிப்பதும், உடற்பயிற்சியும் உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். குளிர் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது, குளிர்கால உடைகளைப் பயன்படுத்துவது, கொசுவலையைப் பயன்படுத்தி கொசுக்களை விரட்டலாம். முன்னெச்சரிக்கையாக இருப்பதே பனிக்காலத்தை ஆரோக்கியமாகக் கடக்க உதவும்’’.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + three =

*