;
Athirady Tamil News

‘அம்மாச்சி’ உணவங்கள் மூடப்பட்ட விவகாரம் – காரணத்தை விளக்கும் அதிகாரி!!

0

வவுனியா விவசாய திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் ஒரு அம்மாச்சி உணவகமே இருப்பதாக தெரிவித்த வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் சகிலா பாணு, வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்திற்கு 90 ஆயிரம் ரூபா வாடகை கோரியிருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

வவுனியாவில் அண்மையில் மூடப்பட்ட இரு அம்மாச்சி உணவகங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘விவசாயத் திணைக்களமானது ‘அமுதம்’ பெண்கள் விவசாய அமைப்பு என்ற அமைப்பினை உருவாக்கி அதில் உள்ள பெண்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கி ‘அம்மாச்சி’ உணவகங்களை நடாத்துவதற்கான அனுசரணையினை வழங்கி வருகிறது.

வவுனியாவைப் பொறுத்தவரை புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் அம்மாச்சி உணவகம் மாத்திரமே எமது கட்டுப்பாட்டில் இருப்பதுடன் அதில் நேரடியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.

ஏனைய இடங்களில் அந்தந்த நிறுவன தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைவாக ‘அமுதம்’ விவசாய பெண்கள் அமைப்பிலிருந்து எம்மால் பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை அந்த அமைப்பு வழங்கியிருந்ததே தவிர விவசாய திணைக்களம் அதனை நடாத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தவில்லை.

இதனால் வவுனியா வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் அமைந்திருந்த உணவகங்கள் சரியான முறையில் வாடகை பணம் கொடுக்க முடியாமையினால் கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ளன.

வாழ்வாதாரத்திற்காக சிரமப்படும் பெண்கள் என்பதால் அந்த தொகையை அவர்களால் வழங்க முடியவில்லை. எனவே ஊடகங்கள் பிரச்சினையின் உண்மை தன்மையினை புரிந்து கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும்.

விவசாய திணைக்களத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மாச்சி உணவகம் மாதாந்தம் 45 இலட்சம் ரூபாயை வருமானமாக ஈட்டுகிறது. அங்கு 36 பெண் ஊழியர்கள் பணிபுரிந்து பலனடைகின்றனர்.

மூடப்பட்ட உணவகங்களில் பணிபுரிந்த பெண்களையும் நாம் அதனுள் உள்ளீர்த்துள்ளோம். அத்துடன் எமது நேரடியான கண்காணிப்புடன் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா வளாகத்திலும் எதிர்வரும் நாட்களில் அம்மாச்சி உணவகம் ஒன்று அமைக்கவுள்ளோம்’ என்றார்.

அம்மாச்சி உணவகங்கள் பெண்களின் வாழ்வாதாரத்தை மையமாக கொண்டு இயங்குகின்றமையால் வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதாரப்பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த உணவகங்களிற்கான வாடகை பணத்தினை அதனை நடாத்தும் பெண்களால் வழங்க முடியவில்லை.

வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகத்திற்கு மாத வாடகையாக 90 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டியிருந்தது. அத்துடன் பல நோயாளர்களின் தேவை கருதி அசைவ உணவுகள் மற்றும் தேனீர் போன்றவற்றையும் உள்வாங்கவேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது.

அம்மாச்சி உணவகத்தின் கட்டமைப்புகளின் பிரகாரம் அதனை வழங்கமுடியவில்லை. இவற்றை ஈடுசெய்ய முடியாமையினாலேயே குறித்த இரண்டு உணவகங்களும் நடத்தமுடியாத சூழ்நிலை அங்கு பணியாற்றிய பெண்களுக்கு ஏற்பட்டதாக விவசாய திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + fifteen =

*