;
Athirady Tamil News

யாழ். வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – இந்தியத் துணைத் தூதுவர்!! (வீடியோ)

0

யாழ்ப்பாணம் என்பது வரலாற்று ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ்ப்பாணம் பண்டைய மன்னர்களின் காலத்தில் தலைநகராகவும், ஐரோப்பிய வருகைக்குப் பின்னர் கல்விக் களஞ்சியமாகவும் திகழ்ந்தது, அத்தகைய புகழையும், சிறப்புக்களையும், தமிழர்களின் பாரம்பரியங்களையும் வெளிப்படுத்தும் வகையில் ஒரு அரும்பொருட் காட்சியகம் அமைக்கப்பட வேண்டிய தேவை உணரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டுள்ளது என யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினால் யாழ். நாவற்குழியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற திருவாசக அரண்மனைக்கு எதிர்ப்பக்கத்தில் பிரமாண்ட முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருட்காட்சியகத் திறப்பு விழா நேற்றுமுன்தினம் சனிக்கிழமை(25) பிற்பகல் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

மேற்படி விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நமது அடையாளங்களைப் பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குப் பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்க்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும்

வெறுமனே புத்தகங்களைக் கற்பதன் மூலம் மாத்திரம் வரலாற்றினை அறிந்து கொள்ள முடியாது. வரலாற்று எசசங்கள் மற்றும் அரும்பொருட்களை நேரடியாகப் பார்வையிட்டு எங்கள் பண்பாடு, மரபுகளை அறிந்து கொள்வது அவசியமானது.

வரலாற்று எச்சங்கள் மற்றும் பதிவுகளைத் தேடித் தேடி அறிந்து கொள்வது வரலாற்று ஆய்வாளர்களுக்கும், வரலாற்று மாணவர்களுக்கும் கடினமான பணியாகும். ஆனால், இதனை இலகுபடுத்தும் வகையில் அனைத்துப் பொருட்களையும் ஓரிடத்தில் பார்ப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருட் காட்சியகம் திகழ்கிறது.

அரும்பொருட்கள் என்பது வெறுமனே பொருட்கள் மாத்திரமன்றி அவை ஒவ்வொன்றும் நமது பண்பாடு, கலாசாரம், அறிவு ஆகியவற்றைக் காலம் தாண்டியும் வெளிப்படுத்தி நிற்கும் காலச் சுவடுகள்.

வரலாற்றுப் பொக்கிஷங்கள் காலத்தால் அழிவடைந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுண்டு. அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதைத் தவிர்த்து யாழ்ப்பாண அரும் பொக்கிஷங்களையும், யாழ்ப்பாண வரலாற்றையும் எதிர்காலத் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் இத்தகையதொருஅரும்பொருட் காட்சியகத்தைப் பெரும் முனைப்புடன் உருவாக்கியிருக்கிறார்.

ஆறுதிருமுருகன் ஐயா. சமயப்பணிகள், சமூகப் பணிகள் என ஆறுதிருமுருகன் ஐயாவால் ஆற்றப்படும் சேவைகள் ஏராளம். அவற்றில் முக்கியமானதொரு பணியாக சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருட் காட்சியகத்தை உருவாக்கியமைக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − nine =

*