;
Athirady Tamil News

கிளிநொச்சி தொழில்நுட்பபீடத்தில் கிடுக்குப்பிடி விசாரணை… 8 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!!

0

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீட வளாகத்தில் இடம்பெற்ற பாலியல் அத்துமீறல் பகிடிவதை விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன. கடந்த இரண்டு தினங்களாக தீவிரமாக நடந்து வந்த விசாரணைகள், இன்று சனிக்கிழமையும் தீவிரமாக நடந்து வருவதாக பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட நிர்வாக குழுவினர் இன்று காலை யாழ் பல்கலைகழகத்திற்கு அழைக்கப்பட்டு, தற்போது கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தில் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு மிக மோசமான பகிடிவதைகள் சர்வசாதாரணமாக நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

சிங்கள மாணவர்கள் மத்தியிலிருந்தே மோசமான பகிடிவதை கலாச்சாரம் பரவியதாகவும், அவர்களை பார்த்து தமிழ் மாணவர்களும் இப்பொழுது மோசமான பகிடிவதையில் ஈடுபடுவதாக அறிய முடிந்தது..

2017 பிரிவு மாணவர்களே மோசமான பகிடிவதையில் ஈடுபடுவதாகவும், அந்த பிரிவில், கடந்த அரசின் இரண்டு பிரதியமைச்சர்களின் மகன்கள் படித்துள்ளனர்.

சில மாதங்களின் முன்னர் கிளிநொச்சி வளாகத்தின் பெண்கள் விடுதி காப்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் நடந்திருந்தது. பெண்கள் விடுதியில் மோசமான பகிடிவதை நடந்தபோது, அதை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். அவரை தள்ளிவிழுத்தி தாக்கி, அவரது கையடக்க தொலைபேசியை உடைத்துள்ளனர்.

அப்போது, பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், பொலிசார் மேலதிக விசாரணைகளை செய்யவில்லை. பொலிசாரின் விசாரணை தேக்கமடைந்தமைக்கு, பல்கலைகழக மாணவர்களுடன் தொடர்புடைய அரசியல் செல்வாக்கு காரணமா என்றும் தற்போது ஆராயப்படுகிறது.

நேற்றுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மோசமான பகிடிவதையுடன் தொடர்புடைய எட்டு மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிந்தது. எனினும், அவர்கள் மீது இன்னும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை. பகிடிவதையுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணியே தற்போது நடந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பெயர் குறிப்பிடப்பட்டவர்களிடமும் நேற்று விசாரணை நடந்துள்ளது. எனினும், அடையாளம் காணப்பட்ட எட்டுப் பேரில், சமூக வலைத்தளங்களில் பெயர் குறிப்பிடப்பட்டவர்ககள் உள்ளடங்குகிறார்களா என்பதை தெரிவிக்க பல்கலைகழக வட்டாரங்கள் மறுத்து விட்டன.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை!!

பகிடிவதைக்கு நடவடிக்கை எடுக்க ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 8 =

*