U19 உலகக் கிண்ணம் – இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது பங்களாதேஸ்!

U19 உலகக்கிண்ண இறுதி போட்டியில் இந்தியா அணியை வீழ்த்தி பங்களாதேஸ் இளையோர் அணி முதன்முறையாக U19 உலகக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
13-வது இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – பங்களாதேஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 47.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 121 பந்தில் 88 ஓட்டங்கள் அடித்தார்.
பங்களாதேஸ் அணியின் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டும், ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் சாகிப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 178 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஸ் இளையோர் அணி துடுப்பெடுத்தாடியது.
இந்நிலையில், அணி வெற்றி பெற 15 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மழை குறுக்கிட்டது. அப்போது பங்களாதேஸ் 41 ஓவரில் 163 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது பங்களாதேஸ் அணிக்கு வெற்றிக்கு 46 ஓவரில் 170 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனால் 7 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஸ் மீண்டும் விளையாடியது.
ஆட்டம் தொடங்கியதும் 7 பந்தில் 7 ஓட்டங்களை எடுத்து பங்களாதேஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அக்பர் அலி 43 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தார்.
அதன்படி, 42.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து பங்களாதேஸ் அணி வெற்றி இலக்கை அடைந்து 2020 ஆம் ஆண்டுக்கான U19 உலக்கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.