;
Athirady Tamil News

யாழ்.சந்நிதி முருகன் ஆலயத்தில் அரோகராக் கோஷத்துடன் திருக்கேதீஸ்வர பாதயாத்திரை!! (வீடியோ, படங்கள்)

0

மகோன்னதமான மகா சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டு உலக சைவத்திருச் சபையின் ஏற்பாட்டில் திருக்கேதீஸ்வர திருத்தலப் பாதயாத்திரை இன்று புதன்கிழமை (12) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமானது.

இன்று காலை செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அடியவர்கள் ஆலய உள்வீதி மற்றும் வெளிவீதியை வலம் வந்தனர்.
தொடர்ந்து பாத யாத்திரைக்கான ஊர்தியில் வைக்கப்பட்டிருந்த திருவண்ணாமலையிலிருந்து எடுத்து வரப்பட்ட சிவலிங்கப் பெருமானுக்கு விசேட தீபாராதனை வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆலய முன்றலில் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து உலக சைவத்திருச் சபையின் இலங்கைக்கான தலைவர் கதிர் குமாரசாமி சுமுகலிங்கம் சிவாச்சாரியார் தலைமையில் அரோகராக் கோஷத்துடன் திருக்கேதீஸ்வர திருத்தலப் பாதயாத்திரை ஆரம்பமானது.

மேற்படி பாத யாத்திரையில் யாழ் அடியவர்களுடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல அடியவர்களும் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டுள்ளனர். ஆரம்ப நிகழ்வில் சைவப்புலவர் கந்த சத்தியதாசனும் கலந்து சிறப்பித்தார்.

இதேவேளை, மேற்படி பாதயாத்திரைக் குழுவினர் இன்றிரவு நீர்வேலி கந்தசுவாமி ஆலயத்தில் தங்கி நிற்கவுள்ளதுடன் நாளைய தினம் காலை அங்கிருந்து தமது பாதயாத்திரையைத் தொடரவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − nine =

*